Friday, December 31, 2010

வண்ணங்கள் நோக்கையிலே

வண்ண வண்ண புடவைகள்
விரித்துக் காட்டுவது
கடைக்காரர்.
கடைக்காரர் காட்டுவதோ
வரையறையுள்ள எண்ணிக்கை

வானத்தில் இயற்கை கோலமிடும்
வடிவங்கள் ஆயிரமாயிரம்.
இவற்றுக்கு வரையறை
இல்லை ஆனால் வண்ணம் உண்டு

வண்ணங்கள் நோக்கையிலே
நெஞ்சுக்குள் ஓடுதம்மா சந்தோஷ ஆறு
மூளை எதற்குத்தான்
அத்தனை குதிக்கிறதோ
வண்ணங்களை நோக்கின்

வண்ண வண்ண கலர்ப் பொடி
வித விதமாப் பிறந்த ரங்கோலிக் கோலம்
சிதறும் மத்தாப்பு
சிறுவர் விளையாடும் கோலி
பிறந்த நாள் விழாவை அழகித்த வண்ணக் காகிதம்

நீல நிற கடல்,
செந்நிற வானம்,
மறையும் சூரியன்

பச்சைப் பசேல் என்ற புல்தரை
பலவித வண்ண மலர்கள்
பறக்கும் பட்டாம்பூச்சிகள்

இவை வண்ணங்களின்
வெளிப்பாடுகள்
நெஞ்சத்தை
மகிழ்ச்சிக் கூரைக்கு
ஏற்றிச் செல்லும்
ஏணிப் படிகள்

வண்ணமில்லா உலகம்
இருந்திருந்தால்
நிச்சயம் மூளை
கோபித்துக்
கொண்டிருக்கும்

வண்ணமில்லா உலகம்
இருந்திருந்தால்
நிச்சயம் மூளை
கோபித்துக்
கொண்டிருக்கும்

ஆற்றாமை

என்ன திமிர் உனக்கு
மகளைப் பார்த்து சொல்லுகின்ற தந்தை

திமிர் என்பது பல சமயம்
தவறாக புரிந்து கொள்ளப் படுவதும்

இன்றைய குழந்தைகள் திமிராகப்
பேசுவது போல் தோன்றும் மாயையும்

ஆற்றாமையாலும் பரபரப்பினாலும்
நடத்தை திமிராகத் தோற்றமளிப்பதும்

கண்ணுக்கு புலப்படாத கண்ணுக்கு
புலப்படவேண்டிய விஷயமாயிற்றே இன்று

கோமாளித்தனம்

கோமாளிகள் சர்கசிற்கு மட்டும் அல்ல
நல்ல ஒரு குடும்பத்திற்கும் தான்

சின்னஞ் சிறு சிறுவர்களாய் நாம்
அறிந்திருந்தோம் கோமாளித்தனம்

சோகத்தில் தள்ளாடும் தாயையும்
சிரிக்க வைப்பாய்
நீ தற்காலிக கோமாளி ஆகி

மனம் எவ்வளவு இறுகி இருந்தாலும்
இறகு போல் லேசாகி விட
செய்திடுவாய் கோமாளித்தனம்

சிரிப்பு நடிகர்களுக்கு மட்டுமா கோமாளித்தனம்?
அப்படியென்றால் நாமும் சிரிப்பு நடிகர்கள்
ஆகலாமே

Wednesday, December 29, 2010

பிளாக்கர்.காமில் புத்தாண்டு

உயிரினங்கள் ஒன்றை ஒன்றை வாழ்த்திடும் நேரம்
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ

ஒன்றை ஒன்றை வாழ்த்திடும் பதிவர்கள் பிளாக்கர்.காமில்
கடவுளின் தூதர்கள் ஆனரோ?

மேலும் வாழ்த்துக்கள் தொடர்ந்து, மலர்ந்து விரியும்
வருகின்ற புத்தாண்டில் என்று நம்பி நலம் பெற
வாழ்த்துகிறேன்

பாலைவனமும் சோலைவனமும்

நமக்கு அநியாயம் செய்கின்ற
நண்பனை, உடன் பிறந்தோனை,
மற்றும் அயலானை
அறிந்து கொள்
பாசம் வைத்திருக்கும்
உயிர் நம் மீது அடிமனதில்

உண்மை புரியும்
காலம் கடந்த பின்
இத்தகைய மனிதரை
மீண்டும் நட்பு செய்யத்
துவங்கும் போது

உண்மையை அறிந்து
கொண்டால்
காலம் கடப்பதற்கு முன்னே
சாந்தமும்
உன்னை காந்தமெனக்
கட்டிக் கொள்ளும்

அன்பு வைக்க யாரும் இல்லை
நம்மீது
நினைக்கும் போது விரக்தி
என்ற விஷயம் தாக்குகின்றது
நாகப் பாம்பின் விஷம் போல

சிலரின் அநியாயக் குறைகளினால்
குறைகளே அதிகம் வாழ்வில்
என்று குமைத்து வாழும் சிலர்
பாலைவனமும் சோலைவனமாகும்
பகைவனையும் நேசிப்பதாலே
அறிந்திலரோ இவர்?

Tuesday, December 28, 2010

உயிரைப் பறித்த பின்பு

பத்து மாதம் சுமந்து
பல சவால்களுடன்
பிரசவித்து

பச்சைக் குழந்தைக்குப் பாலூட்டி
பல சௌகரியங்களை பணயமாக்கி

பாலும் பழமும்
நாளுக்குப் பல முறை
நாவிற் சுவைக்க வைத்து

பாலகனை வளர்த்தெடுத்து
கட்டிய அந்தக் கூட்டில்
வினையும் விதியும் ஒன்றாகி
பாலகன் இறைவனிடம்
செல்கின்றான்

பெற்றவளோ
கூட்டை கலைத்திட்டாய்
எனக் கேட்டு உருகுகிறாள்
என் உயிரைப் பறித்த பின்பும்
எதற்காக எதனையும்
கொண்டாட வேணும்
மைந்தனின் குரலும் இல்லை
கும்மாளமும் இல்லை
எனக்கு இனி என் குரல்
வேண்டாம் என மௌனக்குரல்
எழுப்பினாள்

திருநாட்கள்

தலை துவட்டி விடுவாளோ
ஏங்கியது தவிர

நிறைய சமைத்துப் போடுவாளோ
ஏங்கிய காலம் பிறந்து விட்டது

பெண்ணிற்கு ஏனோ தனியாய் சமைக்க
போர் அடிக்கத் துவங்கியது

சமையலில் சுருக்கம்,
குளிர் சாதனப் பெட்டியில் நெருக்கம்
என்றாயிற்று

தனக்கு யாரோ சமைத்துப் போடுவாரோ
பெண் ஏங்கும் காலம் பிறந்தது

சமையலுக்கு ஆள் என்ற விஷயம்
தொடங்கியது

கணவன் தான் சமைத்த
உணவை ரசித்து உண்ணும் நேரம்
சில நாட்களாய் மட்டும் இருந்தும்
அவை திருநாட்கள் என்றே அவள்
திடமாய் நினைக்கின்றாள்

சுவாமி மலை

சுவாமி மலை எங்கள் சுவாமி மலை
பெற்றோருடன் சென்று களித்த
சுவாமி மலை

ஞானத்தை நாற்பது வயதிலே
அள்ளித் தந்த
சுவாமி மலை

சுவாமி மலை எங்கள் சுவாமி மலை
பெற்றோருடன் சென்று களித்த
சுவாமி மலை

அம்மை அப்பனை
யாரெனக் காட்டிக் கொடுத்த
சுவாமி மலை

சுவாமி மலை எங்கள் சுவாமி மலை
பெற்றோருடன் சென்று களித்த
சுவாமி மலை

அத்வைதம் பிடிக்க வைத்த
சுவாமி மலை

சுவாமி மலை எங்கள் சுவாமி மலை
பெற்றோருடன் சென்று களித்த
சுவாமி மலை

அருள் பரவி இருக்கும் இடம் எங்கும்
சுவாமி மலை
நான் இருக்கும் இடம்
சுவாமி மலை

சுவாமி மலை முருகா
உனக்கு என் வந்தனம்

உன்னைப் பற்றி

எனை வாழ வைத்த அழகு பூபதி
எனை ஆள வந்த ஆதி
எனைக் கவர வந்த கார்முகிலன்
எனைப் பாட வைத்த பாடலாசிரியர்
எனைப் பறக்க வைத்த வானம்
எனை அமைதிப் படுத்தும் அரு மருந்து
எனைத் தூங்க வைத்த தாலாட்டு
எனைத் தாயாக்கிய தர்மப் பிரபு
என்னுடன் ஆட வந்த ஆடலரசன்
என்னுடன் வாழ வந்த வரதன்

சுற்றியிருக்கும் ஆடவருக்கு

மௌன மாலையை அணிந்தபோதும்
என் மீது உனக்கு ஏன் கவனம்?

கண்ணுக்குள் சிந்தாத பார்வைக்காக
ஏங்கிக் கிடக்கவும் தெரியுமா உனக்கு

மௌனத்திலிருந்து விலகிய கணங்கள்
ஒன்று இரண்டு ஆயினும்
அதனில் ஓராயிரம்
அர்த்தங்கள்
புரிந்து கொண்ட
நீ

என் மௌனம்
கலைக்க முயற்சிக்கிறாய்

சிந்தாதப் பார்வையின் மத்தியில்
சிந்திய ஒரிருப் பார்வையை
பாவையென புரிந்து கொண்ட நீ

என் பார்வையை
மாற்ற முயற்சிக்கிறாய்

என்னை மேலும்
அழகு படுத்த நினைக்கிறாய்

உனக்கு மௌனமாய்
என் வந்தனம்
நீ இருக்கும் இடம்
நாளும் எனக்கு நந்தவனம்

நல்லதை மட்டும் கண்டிருந்தால்

நல் எண்ணங்கள் மட்டுமே கொண்டிருந்தால்
என்னுடன் ஓடிப் பிடித்து விளையாடிய
துன்பங்கள் என்னைத் தொடாமலே ஓடிப்
போயிருக்கும்

நல்லதை மட்டும் கண்டிருந்தால்
என்னை சோர்வடையச் செய்த சோகங்களும்
சோர்ந்து போயிருக்கும்

இருப்பதை மட்டுமே நினைத்திருந்தால்
என்னை வாட்டி வைத்த எண்ணங்களும்
வாடிப் போயிருக்கும்

விடியலுக்கு நேற்றை விட இன்று
ஒன்றும் குறைந்து போக வில்லை
நாமே நமக்கு நல்ல நாட்களாய் விடிவோம்

வாழ்க நல் எண்ணங்கள்
வளர்க நற்சிந்தனை

புனித புத்தாண்டு

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
மந்திரம் சொன்ன தந்தையின் அருளை
மற்ற நல்லவர் சொல்லில் காணக்
கற்றுக் கொடுத்த கதிர்காமத்துறை
கதிர்வேல் முருகா உன்னைக்
கணக்காய் பாடிட காலையில்
எழுப்பு கோழி கூவும் முன்னே

கந்தர் சஷ்டி கவசமதை வருகின்ற
புத்தாண்டில் புலன்களோடு ஒன்றாய்
புகுத்தி விடு

புகுந்த கவசமதை புனிதமாகப்
புரிந்து கொள்ள புதிதாய்
எனக்குள் புதுமை புகட்டு

புரியாத விஷயம் தனை
புரிய வைத்து உன்
புகழ் காக்க
புனிதப் பயணம்
புறப்பட
புதிதாய் என்னை ஆயத்தமாக்கு

புனித புத்தாண்டாய்
அமைந்திடவே புதிதாய்
என்னை வாழ்த்திடு

உன் பாதம்
தாள் பணிந்தேன்
புனித புத்தாண்டில்

என் மீது குதித்து விட்டாயே

என்னிடம் பிடித்தது என்ன உனக்கு
தவளை கேட்டது

குதிக்கும் பாணி உன்னுடையது
இனம் தெரியாத மகிழ்ச்சியும்
வியப்பும் என்னுடையது

என்னை உன் மனதில் நிறைத்தது என்ன
அடுத்து தவளை கேட்டது

தூங்கிப் போக இன்னும் ஒரு நிமிடமே இருக்க
இயற்கையை ஒலிபரப்பும் உன் சத்தம்
தாலாட்டி தூங்க வைத்தது என்னை

தினமும் என்னை வந்து
என் வீட்டில் பார்க்கின்றாயே
அது எதற்கு தவளை கேட்டது

உன்னிடம் உள்ள ஈர்ப்பு எனக்கு என்
அன்னையிடத்துக் கூட இல்லையே அதனால்

உன் வீட்டிற்கு நான் வந்த போது
அலறி விட்டாயே அது ஏன் கேட்டது தவளை

நீ ரொம்ப மோசம் அனுமதி இல்லாமல்
என் மீது குதித்து விட்டாயே?

நீ மட்டும் என்ன அனுமதி இன்றி
எனக்கு மிக அருகில் கல் எடுத்து வீசி
என்னைத் திகிலடைய செய்து விட்டாயே

நம்ம ரெண்டு பேரும் நண்பர்கள்
இதெல்லாம் சகஜம் என்றே நினைக்கத்
தோணுகிறது. நான் வளர்ந்ததும்
என்னை வந்து பார்ப்பாயா?

வாராயோ விளையாட

அன்பை உடலோடு உடலாக
அணைத்துக் கொண்டேன்

அன்பு கேட்டது என்னை நீ
அதிகம் நேசிக்கின்றாயே ஏன்?

பாலைவனத்தை நொடியில்
பசுஞ்சோலை ஆக்குகிறாயே
அதனால்

பணத்திற்காக என்னை விட்டுக் கொடுப்பாயா
அன்பு கேட்டது என்னை

பணமே எனக்கு உன்னை வெளிப்படுத்தத் தான்
உனக்குத் தடையான பணத்தை விட்டு விலகவும்
தயங்கேன் நான்

என்னை கௌவரிக்க கண்களில் கவி பேசணும்
என அறிந்தீரா
அன்பு கேட்டது என்னை

நீ என்னிடம் உறைந்து மட்டும்
கிடக்கின்றாயே ஆழமாக
கண் பேசும் விளையாட்டுக்கு
வர மாட்டேன் என்கிறாயே
பல சமயம்
உன்னைக் கோபித்து பலன் ஏதும் இல்லை எனக்கு
இருந்தும்
உன்னைக் கோபித்துக் கொள்ளத்தான் போகிறேன்
விளையாட வர வில்லை என்று

Monday, December 27, 2010

மூளை விநோதம்

பச்சை சிகப்பு கலரை முதன் முதலில்
கற்றுக் கொண்ட அந்த கலர் பட
புத்தகம் இன்று நினைவிற்கு வருகிறது

முதல் வகுப்பில் என்று நினைக்கிறேன்

மனக் கணக்குகளில் பெயர் போன
நான் வாய்பாடுகளையும் சுலபமாக
சரியாகக் கற்றுக் கொண்டதில் அதிசயம்
ஒன்றும் இல்லை

தமிழில் ஒப்பித்தல் போட்டியில்
வருடா வருடம்
பரிசு பெற்றதனால் தான்
இன்று கவி எழுத எனக்கு
விருப்பமோ?

ஆங்கிலம், கணிதம் இவற்றை
தந்தை சொல்லிக் கொடுத்த விதமே
தனி

முதல் ரான்க் எடுத்ததற்கு தனி
பாராட்டுக்கள். வேகமாகப்
புரிந்து கொண்டதற்கு தனி
பாராட்டுக்கள் தந்தையிடமிருந்து

பரிசுப் புத்தகங்களை
வீட்டில் கொட்டிய
நினைவும் நீங்கவில்லை

பனிரெண்டாம் வகுப்பிலும்
நல்ல மதிப்பெண் எடுத்தாயிற்று

பொறியியல் கல்லூரி முடித்து
நல்ல வேலையிலும் அமர்ந்தாயிற்று

அலுவலகத்தில் பலரைப் போல
துரிதமாக வேலையை
முடிக்க வில்லையே என்ற
ஆதங்கம் மட்டும் விலக வில்லை

கவி எழுத ஒரு மூளை
அலுவலகத்தில் வேலை பார்க்க வேறொரு
மூளையா? இந்த மூளையின் விநோதம்
எனக்குப் பிடிபட வில்லை

நான் சொல்வது உங்களில்
எவருக்காவது பிடிபடுதா
என்று பார்ப்போம்

கண்ணாமூச்சி

அடுத்த வீட்டுப் பொடியன்களுடன்
விளையாடிய கண்ணாமூச்சி
இந்த காலத்தில் ஏனுங்க
காணாமபோச்சு

கண்ணை மூடிக்கொண்டு தொட்ட
அந்த பால்ய வயதுத் தோழனின்
நட்பு ஆழமாக நெஞ்சில் பதிஞ்சு போச்சு

பதிஞ்சு போன நட்பை மீண்டும்
பயிராய் வளர்த்திடவே
முகவரி கிடைச்சு போச்சு

இனி என்ன அன்பும் பாசமும்
அள்ளிக் கொடுத்திட்டாப் போச்சு

முப்பதில் விளையாடினேன்
கண்ணாமூச்சி மூன்றாய் பதிமூன்றாய்
மனதுமாச்சு

நாற்பதில் விளையாடினேன்
கண்ணாமூச்சி நான்காய் பதினான்காய்
மனதுமாச்சு

கண்ணாமூச்சி விளையாட
வயசில்லையப்பா
விளையாண்டு பார்த்தா
வயசும் பின்னே ஓடிடுமப்பா

வாருங்கள் விளையாடுவோம்
கண்ணாமூச்சி

நாடகம்

மன நோயால்

முறைத்து முறைத்து
பார்த்த நாட்களில் மன்னித்து
விடுங்கள் என்னை
பெற்றவர்களே

உரைத்து உரைத்துப்
பேசிய நாட்களில் மன்னித்து
விடுங்கள் என்னை
உடன் பிறந்தவர்களே

விறைத்து விறைத்து
பார்த்த நாட்களில் மன்னித்து
விடுங்கள் என்னை
விருந்தாளிகளே

எரித்து எரித்து
எரிச்சலிட்ட நாட்களில் மன்னித்து
விடுங்கள் என்னை
அன்புத் தோழர்களே

மன நோயென்ற
நாடகத்தை
நடத்திய
நடிப்புக்காக

மனதில் பரிகாரம்
தேடும் என்னை

வலி எடுத்து விட்டது

வினை தீர்க்கும் விநாயகனே
விவேகக் குழந்தையை கருவில் கொடுத்தாய்

மருதமலை மாமணியே முருகையா
மகர தீபக் குழந்தையைக் கருவில் கொடுத்தாய்

கருணைத் தேவன் கண்ணா
கருணைக் குழந்தையை கருவில் கொடுத்தாய்

நீதி தவறா நீலகண்டா
நீதிக் குழந்தையை கருவில் கொடுத்தாய்

வேதம் அருளிய வேங்கடவா
வேள்விக் குழந்தையை கருவில் கொடுத்தாய்

காமம் படைத்த மன்மதா
காமக் குழந்தையை கருவில் கொடுத்தாய்

உவப்பளிக்கும் உற்சவ மூர்த்தியே
உற்சாகக் குழந்தையை கருவில் கொடுத்தாய்

இத்தனையும் கொடுத்த நீ
குழந்தைகளை
என்றைக்கு பிரசவிக்கப்
போகிறாய்
வலி எடுத்து விட்டது
வந்து விடு விரைவில்

ஆயிரம் கணவர்கள்

விந்தினால் பெற்றேன்
ஒரு குழந்தை

அன்பினால் பெற்றேன்
கவிக் குழந்தை

ஞானத்தினால் பெற்றேன்
உலக மக்களை குழந்தையென

ஆயிரம் கணவர்கள்
சேர்ந்திங்கு
பரிசளித்தனர்
ஆயிரம்
குழந்தைகள்

நான் கண்ட
விந்தில்லாக் கணவர்கள்

Sunday, December 26, 2010

நாற்பதின் விவேகம்

ஒரு படி சோகம்
ஒரு படி மகிழ்ச்சி

கடந்தது ரெண்டு வருடம்

ரெண்டு படி சோகம்
ரெண்டு படி மகிழ்ச்சி

கடந்தது நாலு வருடம்

நாலு படி சோகம்
நாலு படி மகிழ்ச்சி

கடந்தது எட்டு வருடம்

ஐந்து படி சோகம்
ஐந்து படி மகிழ்ச்சி

கடந்தது பத்து வருடம்

வருடங்கள் கடந்தது
பருவங்கள் கடந்தது
பெண்ணுக்கு பருவம் நாற்பது

பன்னிரண்டு படி சோகமும்
பன்னிரண்டு படி மகிழ்ச்சியும்
இருபத்திநாலும் மகிழ்ச்சி ஆயிற்றே
அது என்ன மாயம்
நாற்பதின் விவேகம்

எதற்கும் ஏங்க வேண்டாம்

கல்யாண வீட்டு ரசத்தையும்
கோவில் பொங்கலையும்
சாப்பாட்டுக் கடையில்
கண்டால்

காட்டில் ஆடும் மயிலையும்
கானம் பாடும் குயிலையும்
தொலைக்காட்சியில்
கண்டு களித்தால்

கம்மாய்த் தண்ணீரையும்
கடல் நீரையும்
நீச்சல் குளத்தில்
கண்டு களித்தால்

ஆட்டுக் குட்டியின் அழகையும்
ஆட்டின் மிருதுவான தோலையும்
மனிதக் குழந்தையிடம்
கண்டு கொண்டால்

பழனி கோயிலையும்
பழனியில் பலர் இழுக்கும் தேரையும்
பக்கத்து ஊர் கோவிலில்
கண்டு உணர்ந்தால்

பலர் விரும்பும் திருவிழாவையும்
பலர் ரசிக்கும் கலை விழாவையும்
நாளும் பள்ளிக் கூட அறையில்
கண்டால்

எதற்கும் ஏங்க வேண்டாம் இனி உலகில்
எதற்கும் ஏங்க வேண்டாம் இனி உலகில்

உன்னாலும் முடியும்

இனிப்பிருந்தும் எடுத்துக் கொள்ளாத
மௌன ரிஷி போல் வாழ்ந்து வந்த
நான் கற்றுக் கொண்ட தத்துவங்கள்

பருவ வயதின் இன்பங்கள் எத்தனை
இருந்தும் குழந்தை பருவத்து நாட்கள்
விசேஷமாகத் தெரியும் கோலம் என்ன

கண்ணுக்கு அழகாய் கவர்ந்திழுக்க சகலமும் இருக்க
கடந்து சென்ற கணங்களை திரும்பிப் பார்க்கும்
நினைவுகள் விசேஷமாகத் தெரியும் கோலம் என்ன

மனம், எல்லாம் மனம் அது விசேடமானது,
விநோதமானது விவரமானது விசாலமானது
வீம்பும் அதற்குத் தெரியும்
விந்தையும் அதற்குத் தெரியும்

உன்னுடைய பொழுதில் பாதி மற்றவரை
இன்பப் படுத்துவதில் வைத்துக் கொள்
மீதம் பாதியை உன்னை இன்பப் படுத்த
வைத்துக் கொள் இனிமையான வாழ்வைக்
காண்பாய் என்றேத் தோணுகிறது

முதலில் அம்மாவின் அன்பை
முழுமையாக புரிந்து கொள்
அம்மாவின் அன்பை அருகில்
உள்ளவனிடம் காணக் கற்றுக் கொள்
அம்மாவின் கருணையை
உன் குழந்தையிடமிருந்தும் நீ பெற்றுக் கொள்
நான் ஒரு சராசரி மனுஷி என்னால்
இது முடியும் என்றால்
உன்னாலும் முடியும்

காக்கை சிறகினிலே நந்தலாலா
உன்னைக் காணும் இன்பம் தோணுதடி
நந்தலாலா

காக்கை சிறகினிலே நந்தலாலா
வேண்டியவர் தம்மை காண
முடியுமடி நந்தலாலா

பார்த்த இடத்தில் எல்லாம்
உன்னைப் போல் பாவை தெரியுதடி
பார்த்த இடத்தில் எல்லாம்
பரந்த உள்ளங்களின் உருவம்
தோணுதய்யா

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்
அன்பும் அவ்விதமே எவ்விடத்தும் எவரிடத்தும்
உறைந்து கிடக்கும்

அநியாயங்களைப் பற்றி
நினைப்பதை ஸ்பாம் என்று முத்திரையிட்டு
நல்லவையே நினைத்தால் அகிலமும்
உன்னால் பயனடையும்

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
அதிலும் கூன் குருடு செவிடு இல்லாமல்
பிறத்தல் அரிது

அரிது அரிது பிழைத்திருக்கும் கணங்கள்
எல்லாம் கை கால் சுகமென்பது
அதிலும் வலிமையான கை கால் என்பது

இப்படியிருக்க உன் அமைதிக்கும்
வலிமைக்கும் தெளிவிற்கும் ஏது பஞ்சம்
எல்லாம் அந்த மனதை கட்டுக்குள்
வைப்பதில் கொஞ்சம்

Saturday, December 25, 2010

கிராமத்தில்

அப்பாவின் சிறிய கிராமம்
நான் விரும்பிய, விரும்பும்,
விரும்பப் போகும் கிராமம்

லாந்தர் விளக்கின் மங்கலான ஒளி
கூடத்தில் சாய்த்து வைக்கப் பட்ட ஏணி

சன்னல் இல்லாத சமையல் அறை
சமையல் அறைக்குள் குளித்தல்

அதிக ருசியுள்ள பருப்பு சாதம்
அதிக ருசியுள்ள செக்கு எண்ணெய்

சுவையோ சுவை கொண்ட சேவு
ஊரில் இறங்கியதும் குடித்த சோடா

கதவோரம் விளையாடிய தாயம்
கல் மேடையில் ஆடிய சதுரங்கம்

வீட்டு மாடத்தில் ஓடும் ஆட்டுக் குட்டிகள்
தாத்தாவிற்கு பால் தரும் வளர்ந்த ஆடு

நாங்கள் துணி துவைத்த
கம்மாய் கரைப் படிகள்

மீன் பிடிக்க உதவிய கம்மாய்கள்
எருமை குளித்த கம்மாய்கள்

ஆண்கள் குளித்த கிணற்றடி
ஆள் அரவமற்ற காடு

காட்டில் பச்சை மிளகாய் செடிகள்
கருவேல முள் மரங்கள்

தாண்டக் கூடிய கூரைகள்
தானியக் குவியல்கள்

கொட்டகையில் கூடையில் தூங்கும் கோழிகள்
அணி வகுக்கும் கோழிக் குஞ்சுகள்

திருவிழாக் காலத்தில் கரகாட்டம்
பொங்கல் காலத்தில் கலை நிகழ்ச்சி

கும்பாபிசேகமன்று கோலாட்டம்
கண்ணைக் கசக்க வைத்த அடுப்புப் புகை

பால் தந்த மாட்டுக் கொட்டகை
பல இடத்தில் வைக்கோற்போர்

மாவு இடித்துத் தரும் அத்தை
மாவாட்டும் பாட்டி

அடுத்த வீட்டு தோழியர்
அடுத்த வீதி பெரிய தாத்தா

இவையெல்லாம் என் மனதிற்குள்
அட்டையாய் ஒட்டிக் கொண்டது
அவற்றை மீண்டும் அசை போட வாய்ப்பு
கிடைத்தது அமெரிக்காவில்

ஐம்பது வருடமான எங்கள் வீட்டில்
நான் வேண்டுமென்றே லாந்தர் விளக்கு போல
பல்பை டிம் செய்கிறேன் அவ்வப்போது
வேண்டுமென்றே வைக்கோற்போர்
தேடி அலைகிறேன் அவ்வப்போது

மனமிருந்தால் பட்டணத்தையும்
கிராமம் ஆக்கலாம்

வாழ்க வையகம்

அன்றொரு நாள் அக்கம் பக்கத்து
மாமாக்கள் சமைத்துத் தந்த
அந்த கோவில் பொங்கலை
வரிசையில் அமர்ந்து
உண்ட காலத்தில்
அறிந்திருக்கவில்லை
வாழ்க்கையின் ரகசியத்தை

எனக்குத் தெரிந்ததெல்லாம்
நல்ல நல்ல மாமாக்கள்
என் விளையாட்டுத் தோழர்களின்
தந்தை மார்கள்

கோவிலில் விஷேசம் என்றால்
குழந்தைகளாகிய நாங்கள்
மட்டும் தவறாது சென்று
பூஜையில் கலந்து
பொங்கல் சாப்பிடுவோம்

மாட்டுப் பொங்கல் என்றால், அவியலும்
வெண்பொங்கலும் அளிப்பார்கள்
கோவிலில்

குழந்தையாய் உண்ட பொங்கலின்
மணமும் சுவையும் இன்னும்
மனதை விட்டு மறைய வில்லை

ஒன்றாய்க் கூடும் மக்கள் சந்திப்பில்
தெய்வ அருள் மௌனமாய் ஒளிரும்
கோவிலானாலும் சந்தையானாலும்
அன்றானாலும் இன்றானாலும்

நம் மனதை தக்கபடி வைத்துக்
கொண்டோமானால் இந்த அவசர
உலகில் கூட இந்த உண்மையைக்
காண முடியும்

வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்

நமக்குள்ளே தான் இறைவன்

நமக்குள்ளே தான் இறைவன்
ஆட்டி வைக்கும் நாமே தான் இறைவன்- அந்த
துணைவருக்கும் அனைவருக்கும் அவர்க்குள்ளே தான்
இறைவன் , உறையும் தலைவன்

நன்றாய்ப் பார்த்திடுவாய் உனக்குள்
நலமாய் நினைத்திடுவாய் தனக்குள் -நல்ல
நாட்களுக்கும் நேரத்துக்கும் நன்றாய்த் தோண்டிடுவாய்
உன்னை, மகிழ்ந்திடுவாய் உள்ளே

தூய்மையுமே நிரப்பிடுவாய் உனக்குள்
தூய அன்பையுமே பரப்பிடுவாய் அவர்க்குள் -நல்ல
சொற்களுக்கும் கவிகளுக்கும் இடையே வைத்திடுவாய்
உன்னை, மகிழ்ந்திடுவாய் உள்ளே

பண்பையுமே அன்பையுமே நம்பு
கற்றதுமே மற்றதுமே தெம்பு - நம்மைப்
பெற்றவரும் மற்றவரும் மகிழ எழுதிடுவாய்
காவடி சிந்து, ஓரடி நீந்து

அடி அடியாய் அடி வைப்பாய் நீயும்
படிப படியாய் பழகிடுவாய் நாளும் - அந்த
பக்குவமும், தத்துவமும் என்றும்
கற்றிடுவாய் அங்கும், உலகெங்கும்

கற்றவற்றை மற்றவரிடம் சொல்ல
கல்லாததை கேட்டறிந்து கொள்ள - நாளும்
புலன்களையும் கண்களையும் கொண்டு
நடத்திடுவாய் நாடகம் ஒன்று, விரைவாய் இன்று

கற்றுத் தந்த நல்லவரை வணங்கு
நல்லவரின் துணை கூட வணங்கு - பலர்
கூறுவதற்கும் சேருவதற்கும் நல்ல
வழியொன்றை அமைப்பாய் , வழி விடுவாய்

தூய அன்பு

காதலை மறப்பதை மறைப்பதை மறப்போம்
அதாவது வெளிப்படுத்துவோம்

மண்ணில் உள்ள அனைவரையும்
காதலிப்போம் தூய அன்பினால்

காதலித்த அன்புள்ளங்களின் நன்மை
கருதுவோம் நாளும்

இயற்கையைக் காதலிப்போம்
இறைவனைக் காதலிப்போம்

கலையைக் காதலிப்போம்
கலை மானைக் காதலிப்போம்

அன்பினாலே அடுக்கப்பட்ட காதலுக்கு
வரையறை ஒன்றும் உண்டோ?

நூறாவது கவி

நூறாவது கவி வரும் நேரத்தில்
வேண்டுகிறேன் நூறு முறை

நூறாவது கவி வரும் நேரத்தில்
வேண்டுகிறேன் நூறு முறை

நூறு குடும்பத்திற்கு
உதவ வேண்டும் நானும்

ஞானம் பறை சாற்ற வேண்டும்
நூறு முறை

கலைஞர்களை நண்பராய்ப் பெற வேண்டும்
நூற்றுக் கணக்கில்

நூற்றுக் கணக்கான மற்றவர்கள் துணையுடன்
நூற்றுக்கணக்கான மற்றவர்களுக்கு துணை இருக்க
வேண்டும்

நூறாவது வலைப் பதிப்பில் கருத்துரைகளை விட
அதிகமாகப் பெற வேண்டும் இறைஅன்பும், இறைவனது ஆசியும்

இறைவன் ஒளித்துக் கொண்டான்

ஆருயிர்ப் பள்ளித் தோழனே
ஸ்ரீரங்கத்தில் அன்று நான் பெற்ற அருள்
இன்று உன் மேல் வைக்கும் கசிவான காதலாயிற்றோ?

அலுவலகத் தோழரே
தஞ்சை பெரிய கோவிலில் அன்று நான் பெற்ற அருள்
இன்று உங்கள் மேல் வைக்கும் கசிவான காதலாயிற்றோ?

அன்புக் கணவனே
பழனியில் அன்று நான் பெற்ற அருள்
இன்று உன் மேல் வைக்கும் பக்தி ஆயிற்றோ?

அன்பு மனமே
சமயபுரத்தில் அன்று நான் பெற்ற அருள்
இன்று பலமாக நீ இருக்க காரணமோ?

அன்பார்ந்த தோழி மற்றும் தோழர்களே
கோவிலில் பெற்ற அருளை
நம்மை செப்பனிடும் கருவியாக
மாற்றிக் கொண்டால் குறைந்து போகுமா?

எங்கள் வீட்டு பூஜை அறை முருகன்
வைத்தான் பலப் பரீட்சை ஒன்று
பலமெல்லாம் முழுவதுமாய் தொலைக்க விட்டு
மீண்டும் திருப்பித் தந்தான் அவனே

உமக்கும் பலம் குறையும் போது இறைவன்
எடுத்து ஒளித்துக் கொண்டான் என்றே
ஏன் நினைக்கக் கூடாது?

எல்லாம் அவன் அருளே
எல்லாம் அவன் அருளே

பெற்றெடுக்கும் பாக்கியம்

பாலூட்டி சீராட்டி வளர்த்த என் அன்னைக்காக
தோளில் சுமந்து, படிக்க வைத்து ஆளாக்கிய தந்தைக்காக
என்னைக் கவியாக மாற்றிக் கொண்டேன் இன்று

நான் துள்ளித் திரிந்ததால் தன மனம் துள்ளப் பெற்ற
தந்தை நான் மன நோயுற்று வாழ்வில் தத்தளிததைக் கண்டு
வருத்தம் பல என்றார்

பெற்றவர் வருத்தம் தீர்ந்திடவே
நான் அவர்கள் வயிற்றில் பாலை வார்த்திட
வேண்டுமென்று கோவிலில் அந்நாளில் வேண்டியதுண்டு

மௌனமாய் வேண்டியப் பலன் இன்று
மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியிலே
அதனையே வேண்டுகிறேன் இன்று

இறைவா, என் மேல் உனக்கு பாசம்
இருந்தால்
என் பெற்றோர் வயிற்றில்
நான் பால் வார்க்கச் செய்து விடு
என் பெற்றோர் வயிற்றில்
நான் பால் வார்க்கச் செய்து விடு

பகைவனின் பூ மனம்

கோபித்துக் கொண்டு என்ன சார் கண்டோம்
பூ போன்ற நம் மனத்தை நாமே கசக்குகிறோமோ

ஒவ்வொருவனும் அடித்தளத்தில் அடிமனதில்
உயர்ந்தவனே. அவன் சில சமயங்களில் கொடூரமாகக் காட்சி அளிக்கிறான்

நாம் எந்தப் பருவத்தில் இருக்கிறோம் என்பது கூட
முக்கியம் விடலைப் பருவத்தில் அப்பா கூட கொடூரமானவராகத் தெரிந்தார்

அப்பருவம் தவிர மற்றொரு சமயம் அவர் மிகவும்
தங்கமானவராகவேத் தெரிந்தார்

என்னை ஏமாற்றி விட்ட பகைவன் என்று எண்ணி
என்னை நானே ஏமாற்றிய காலமும் உண்டு

மீண்டும் அந்த பகைவரில்லா பகைவனுடன் பழகும் போது
அவனும் தங்க மனமுடையவன் என்பதை அறிந்தாயிற்று

ஆக நம் மனம் எப்படி பார்க்கின்றது என்பது தான்
நம்மை ஆட்டி வைக்கிறது

நீங்கள் எல்லோரும் என் குழந்தைகள் அல்லவா?
அதனால் நான் உங்களுக்கு அன்புடன் கூறுவது
பகையின் காரணம் அடுத்தவரிடம் அல்ல
நம்மிடத்தே நம்மிடத்தே மட்டும்
உன்னை அவமதித்தவனையும்
உயர்ந்தவன் என்றே எண்ணிக்கொள்
முயன்றால் முடியும் இங்ஙனம்
நீயும் ஒரு பூ மனதுக் காரன் அன்றோ?

முடியவில்லை என்றால் சிறிது
தியானம் பண்ணிக்கோ. உன்னுடைய
பூ மனதை
நீயே அறிஞ்சுக்கோ

Friday, December 24, 2010

அண்ணன்

நான்கு வயதில்
மரத்தில் பேய் இருக்கிறது என்று சொல்லி
பள்ளிக்குச் சென்ற அண்ணன்

சொல்லிச் சென்று
பேய் குறித்து அசை போட வைத்தவன் என்னை

ஆறு வயதில் கட்டெறும்பு காலில் ஏற
அம்மா என்று அலறிய என் காலிலிருந்து
விரட்டி அடித்தவன் அவன்

நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன்
என்று சுற்றித் திரிந்த நாளில் ஒன்றாய்ச் செய்த
குறும்புகள் எண்ண ஆரம்பித்தால் முடிவு காணாது

பட்டம் செய்ய சொல்லித் தந்ததும் அவனே
திண்ணை ஏறி குதிக்கத் தூண்டியதும் அவனே

கிரிக்கெட் கற்றுக் குடுத்ததும் அவனே
கில்லி ஆடி ஆடி ஜெயத்ததும் அவனே

செய்பொருட்கள் ஒவ்வொன்றாய்ச் செய்தான்
நானும் ஒரு நகல் செய்து முடித்தேன்

பாலத்தின் அடியில் ஊர்ந்து சென்றேன் அவனோடு
ஒன்றா இரண்டா அவ்வித நாட்கள்

பட்டாசை திருடி வெடித்து
என்னை அழ வைத்த அண்ணன்

காரணத்தோடு தான் செய்தான் போலும்
சண்டையும் இட்டோம்
சமரசமும் அடைந்தோம்

ஏனோ மனதில் சஞ்சலம் அடைந்தேன்
பருவத்தில் மலர்ந்த நான்
பள்ளியில் கூட பல சமயம் அழுதேன்

வளர்ந்ததும் ஏனோ அண்ணனிடம்
அவ்வளவு பேசவில்லை
எல்லாம் அந்த குழப்பத்தினாலே

பிரிந்த பிறகு மீண்டும்
தொடர்ந்தோம் கடிதத் தொடர்பில்

உடல் நிலை சரியில்லாத போதெல்லாம்
அன்பாய் கவனித்த டாக்டர் அண்ணன்
இன்று இருப்பது பதினாலாயிரம்
கிலோமீட்டருக்கு அப்பால்
இருந்தும் என் மனதில் அருகில்
இருப்பதாகவே பிரமை எனக்கு எப்பொழுதும்

பாட்டி வீடு

மாடம்
மாடத்தில் தண்ணீர்க் குழாய்
குழாயில் பல நேரம் விளையாட்டு

கூடம்
கூடமதில் மார்கோனி ரேடியோ
ரேடியோவில் சிரிக்க வைக்கும் விளம்பரம் எந்நேரமும்

சமையற் கூடம்
கூடத்தில் பாட்டி
அமர வைத்து ஆக்கித் தந்த ஆப்பமும்
ஆப்ப மணமும்

தாத்தாவின் அலுவலகக் கூடம்
கூடத்தில் ஒரு ஓரம்
சீட்டாட்டக் களம்

அடிக்கடி விருந்து
அடிக்கடி அரட்டை
அடிக்கடி அமர்க்களம்

ராத்திரி நேரம்
தயிர் சாத உருண்டை சாப்பாடு
ஒரு கல் அதிக உப்பு
நாவிற்கு சுவை
பாட்டி கை பட்ட நற் சுவை

இலையில் கால் படி காய்
சில சமயம் அழுகை வருகிறார்போல்
இருக்கும். தட்டுத் தடுமாறி
மிச்ச மீதத்தோடு சாப்பிட்டு முடிக்கலாம்

கிணற்று வாளி இறைக்கும் தண்ணீர்
கடின உழைப்பு
மாமாக்களுக்கு குளியல்
கிணற்ற்றடியில்

குளியலறை
அறைக்குள் இருந்து கூரையைத் துளைத்துச்
சென்ற தென்னை மரம்
வெண்கல அண்டா
அண்டாவில் தக தகவென்று சுடும் நீர் எப்போதும்
பாட்டி வீட்டில் மட்டுமே கிடைத்த ஹமாம் சோப்பு
அறைக்கு வெளியே வரிசையாய் மூன்று தென்னை மரம்
துணி துவைக்கும் கல்
பல் விளக்கும் சிறு சுத்தமான சாக்கடை

தீபாவளிக்கு சிறப்பு பட்டாசுகள்
மாமா கைவசம்
இலவசம்

பொங்கலுக்கு சிறப்பு கரும்பு
விருந்து. பொங்கல் வடை பாயசம்

கல்யாண காலங்களில் கண்ணை அசத்தும்
இனிப்புக்கள் தாம்பாளங்கள்

எந்நேரமும் பழ வாசம்
பூஜை அறையில்

வீட்டுத் திண்ணை
பஸ், கார், என தேர்ந்தெடுத்தல்
வேடிக்கை பார்த்து
யாருக்கு அதிகம் வந்தது
என்று எண்ணுதல்
சூப்பெரான விளையாட்டு

ஆக அம்மாவிற்கும் எனக்கும் போட்டி
யாருக்கு அதிகமாகப் பிடித்தது பாட்டி வீடு என்று

தளர்ச்சியா ?

மௌனமாய் இருப்பாயானால்
குறைத்துக் கொள்ளாதே உன்னை

தளர்ச்சி வந்த நேரம் கூட
உன்னை குறைத்துக் கொள்ளாதே

உனக்குள் உள்ள மௌனம்
ஆழமான சிந்தனைக்காரனாகத்
தூக்கி விடும் பல சமயம்

வருவது எதுவாய் இருந்தாலும்
அதை அவ்வப்படியே வேடிக்கை போல
மனதுள் செலுத்து

எவ்வித முடிவும் கணிக்கத் தேவையில்லை
இவ்வுலகம் நம்மைக் கேட்டு நகர்வதில்லை

மூளையின் பலம் உலகளவு
அங்கீகரித்தால்

உன்னை நம்புவதற்கும்
கடவுளை நம்புவதற்கும்
வித்தியாசம் இல்லை

கூட்டு இதயம்

உன் கண்
காந்தமெனக் கவர்ந்திழுப்பது
என் கண்ணை மட்டுமல்ல
முழுவதுமாக என்னை

வாய் தான் பாட்டுக்கு
ஏதோ பேசியிருக்க
கண்ணும் கூடவே
கணக்காய்ப் பேசுதே

கண் எத்தனை எத்தனை
வடிவம் எடுக்குது
நிமிடத்தில் உள்ள
ஒவ்வொரு வினாடியும்

பாவையர் கண்ணிற்கும்
வாலிபர் கண்ணிற்கும்
வித்தியாசம் இருக்க
கண் விழி கலந்த படி
பேசும் மொழி ஒன்று
காதல் மொழி

பேசும் தளம் இரண்டு
என்று எவன் சொன்னது
பேசும் தளமும் இரு இதயம் அல்ல
ஒன்றாய்க் கலந்த ஒரு கூட்டு இதயம்
அடித்துச் சொல்வேன்

தீபாவளி

ஐப்பசி மாதம் பிறப்பதற்கு
ஐந்து வாரங்கள் முன்னே

பட்டணம் சென்று
பிள்ளையாரை தரிசித்து
பின்னர் பல கடைகள்
ஏறி இறங்கி பல
தங்கமான துணி வகைகளை
ஆனந்தத்துடன் பையில் நிரப்பி

இருட்டை ஜெகஜோதியாக்கி வைத்த
அந்த வண்ண பல்புகளை ரசித்துக்
கொண்டே அடுத்த வீதி சென்று
தையலுக்கு கொடுத்து
ஆரம்பித்த எங்கள் தீபாவளிக்
கொண்டாட்டம்

ஐப்பசி இரண்டாம் வாரம் அன்னையின்
கைப்பக்குவம் என்னை மூழ்கடிக்கும் வாரம்.
ஒன்று, இரண்டு என்ற கணக்கில்லாமல்
மைசூர் பாகும் , அதிரசமும் ரசித்து ரசித்து
சுவைத்து சுவைத்து சாப்பிட்டக்
கொண்டாட்டம்

தீபாவளிக்கு ஐந்து நாட்கள் முன்னே
வரும் பேரதிசயக் கொண்டாட்டம்.
சித்தப்பனோடு பட்டாசு கடை சென்று
பட்டியலிட்ட பட்டாசு அத்தனையும்
பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்து
ஆனந்தக் கண்ணீர் விடுத்து

தீபாவளிக்கு முந்தைய நாள் வரைப்
பொறுக்க முடியாமல்
நாலு நாள் முன்னமே ஒன்றிரு வெடி வெடித்து
ஆசையை நிறைவேற்றிக் கொண்டாடியக்
கொண்டாட்டம்

முந்தின நாள் இரவு, மத்தாப்புக்கள் வானம் வரை
புகையைக் கிளப்ப புஷ்வானம் கண்ணை விழுங்கிட
சங்குச் சக்கரம் காலில் ஏறி விடாமல் ஓடி ஒளிந்து கொள்ள
பரவசமடைந்த நிலையில் கம்பி மத்தாப்பை
கையிலெடுத்துச் சுழற்றி ஒளி ஓவியம் வரைந்து
பின் தூங்கப் போக மனமில்லாமல்
மத்தாப்பு வேடிக்கையை முடித்துக் கொண்டு
உறங்கிய கொண்டாட்டம்

விடியற்காலை எழுந்து, அம்மா கொடுத்த எண்ணையை
அவசர அவசரமாக உபயோகித்து மனம் முழுவதும்
பட்டாசை நினைத்துக் கொண்டே ஸ்நானம் செய்து
புதுச் சட்டையை மன மகிழ்வோடு அணிந்து
முதல் பட்டாசு நானா நீயா என்று
போட்டியிட்டுக் கொண்டு பெருமிதம் அடைந்து
காலைப் பட்டாசாக நீண்ட சரம் ஒன்றை அதிரடிக்க வைத்து
சில சமயம் காதை மூடிக் கொண்டாடிய
கொண்டாட்டம்

இருளில் அக்கம் பக்கத்து கணேஷ், முருகன் சிவா
என்ற அண்ணன் தம்பிகளோடு ரவி சந்திரன் என்ற
வேறொரு வீட்டு செல்வங்களோடு
புங்க மரத்தடியிலிருந்து
தெரு விளக்கு கம்பம் வரை கட்டிய நூலில்
ரயில் மத்தாப்பு விட்டு குதூகலித்த
கொண்டாட்டம்

பிறகு, அடடா, மணி ஆறு தானே ஆயிருக்கு,
மத்தியானம் ஆனது போலல்லவா இருக்கு
என்று உள்ளுக்குள்ளும் சத்தமாகவும் வியந்து,
பிறகு அடுத்த தவணை பலகாரத்தை உண்டு
ஒரு இட்லி மட்டுமே சாப்பிட்டு
காலைச் சிற்றுண்டியை நிறைவு செய்து மகிழ்ந்த
கொண்டாட்டம்

வயது எம்பதானாலும் மனதை விட்டு
துளி கூட அகலாது போலிருக்கே
அது தான் எங்கள் சிறந்த தீபாவளிக் கொண்டாட்டம்

இதற்கெல்லாம் பின் இருந்து அருளியது
அம்மை அப்பன் தானே என்று நினைக்கும் தருணத்தில்
மனம் நெகிழ்கிறது, உருகுகிறது.
நம் பிள்ளைக்கும் இதற்கொப்ப அனுபவங்களை
அள்ளித் தர வேண்டும் என்ற ஆவலும் உதிக்கிறது

திருமணம் என்ற பந்தம்

திருமணம் என்ற பந்தத்தில்
தெரிந்து கொண்டது முற்களும்
கற்களும் மட்டுமல்ல
பூக்களும் பழங்களும் கூட

அறிவு பூர்வமாக மட்டுமே
சிந்திப்பது குடும்ப நன்மைக்கு
ஆபத்தாகவே முடியும் என்பதும்

விஷயங்களை அன்பின் அடிப்படையிலும்
மனித உறவின் அடிப்படையிலும்
கையாள வேண்டும் என்பதும்

குடும்பத்தினரிடம் உள்ள நல்ல அம்சங்களை
மட்டுமே மனத்தால் காண வேண்டுமென்பதும்

கல கல வென்று சிரிப்பொலி கேட்க வேண்டிய இடத்தில்
கவலையும் கோபமும் மிகுந்தால் உலகின் மீதுள்ள
நம் பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதும்

பல பத்து வருடங்கள் சென்ற பின் வரும் ஞானோதயம்
சில பத்து மாதங்களில் வராதிருக்க காரணம்
எது என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்

தட்டிக் கொடுத்துக்கொள்

ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு
என்று பள்ளிக் காலங்களில் கிடைத்ததோ
பல பரிசுகள், கை தட்டல்கள்

சீப்பு, கண்ணாடி போன்ற ஆரம்பப் பள்ளிப்
பரிசுகள், புத்தகக் குவியலாய் உயர்நிலைப் பள்ளி
பரிசுகள்

இத்தனை பெற்றும் இன்று சராசரிக்கு கீழேயல்லவா
வாழ்க்கைச் சக்கரத்தை சுழற்றிக் கொண்டிருக்கிறேன்

காரணம் என்னவென்று கடைசியில் அல்லவா
தெரிய வருகிறது ?

தன்னை அறியத் தவறுபவர்கள் என்னைப் போல் ஏராளம்
இவர்களுக்கெல்லாம் கூறிக்கொள்வது தளர்ச்சி வரும்
கணத்தில் தட்டிக் கொடுத்துக்கொள் உன்னை நீயே உன் சிறப்புக்காக

தாவரங்களை நேசித்த இளவரசி

சிறிய வயதில் முருகன் படத்தில்
உற்று உற்றுப் பார்த்த அதே

நாகப் பாம்பும் மயிலும் ஒன்றாய்க்
காண முடிந்த வாசல்

சில சமயம் நரியும்
அறுபதடி தூரத்தில்

காட்டுக்குள் ஒரு நந்தவனம்
போன்றது எங்களுடைய வீடு

தோட்டத்து பழ மரங்களோ
தின்னு தின்னு என்று தாராளமாய்
அள்ளித் தந்தது
மாவையும் கொய்யாவையும்

சின்ன மா, பெரிய மா, சிவப்பு மா
என்று மூன்று வித மாவிருந்தது
எங்கள் அருமைத் தோட்டத்தில்

கொய்யாவோ கொடுத்து கொடுத்து
வள்ளல் மரம் என்று என் மனதில்
இடம் பிடித்தது

மாதுளை மரமோ நான் விரும்பி வேடிக்கை
பார்த்த கண்காட்சிப் பொருள்
அணில்கள் குடியிருந்த கோயில் ஆயிற்றே

சத்து தருகிறேன் என்று சொல்லி சொல்லி சற்றும்
எதிர்பாரா வகையில் சதா பழங்களைத் தள்ளிக்
கொண்டே இருந்தது சப்போட்டா

சீதாப் பழம் மட்டும் எனக்கு பார்வைக்கு மட்டுமே
அதன் பழம் ஏனோ நான் சாப்பிடவே இல்லை
அறியாமை எனக்கு

பழ மரங்களுடன் போட்டியிட்ட
முருங்கை மரமும், தென்னை மரங்களும்,
பல நாட்களில் எனக்கு விருந்தளித்தன

ரோஜாச் செடியோ, கல்லூரியில் என் தலையில்
அமர்ந்து கொண்டு பல மாணவர்களின் தலையைத்
திருப்பியது

இத்தனையும் விட ஆண் காக்கை பெண் காக்கையுடன்
ஜோடி சேரும் எங்கள் தோட்டத்தில்

இவற்றிற்கு எல்லாம் எஜமானியான அந்த வீட்டு
இளவரசி நான் அப்போது

இந்தக் கவியை எழுதுவதாலே, அந்த அழகிய நினைவுகளாலே
நான் காலம் கடந்து சென்றே இருப்பினும் மனதளவில்
இளவரசியாகவே இருந்து விடுகிறேனே

விலங்குகளையும் தாவரங்களையும்
நேசிக்கக் கற்றுக் கொண்ட இளவரசி

Thursday, December 23, 2010

அணையா விளக்கு

இளவரசன் என்ற பெயர் உனக்கு
அணையா விளக்கு நீ எனக்கு

காலை எழுந்ததும் நீ முதலில் பார்த்தது
என்னை நான் முதலில் பார்த்தது உன்னை

நான் கோலம் போடுவதற்கு முன்
நல்ல குதியாட்டம் போட்டாய்
என்னைப் பார்த்து

உனக்கு உணவிடும் பாக்கியம்
கிடைத்த அன்று என்னைக் கீறி விட்டாய்
பசியில் அன்று

கீறிய காயம் மறைந்து விட்டதே என்று
ஏக்கம் அடைகிறேன் நானும் இன்று

நீ அழுது கொண்டே
பேதி எடுத்த நாளன்று
புரியவில்லை எனக்கு ஏன் என்று

நல்ல வேளை நீ விரைவில்
குணம் அடைந்தாய்

உனக்கும் வந்த அதே
நோய் தான் எனக்கும் வந்தது
உன்னைக் கொன்று விட்டனர்
என்னை விட்டு வைத்தனர்

இறைவன் உனக்கு ஆறறிவு
படைக்காமல் விட்டதனாலே
விரைவில் உலகை விட்டுச்
சென்று விட்டாய்

ஆறறிவு படைத்த எனக்கு நீ ஏழாம்
அறிவொன்று புகட்டி விட்டாய்

மயிலே நீயும் நானும்

மயிலே நீ என்னைத் தேடி வந்தாய்
என் வீட்டுக்கு அன்று

நீ விரித்த தோகை கண்டு
ஒரு கணம் சிலிர்த்து விட்டு
நானும் வீட்டிற்குள் விரைந்து விட்டேன்

அம்மா சொன்னார் மயில் வரும் என்று
தெரிந்தும் தினம் நான் சென்றிடவில்லை
வாசல் பக்கம்

உன்னைக் காண நான் வாசல் வரவில்லை
கோபித்துக் கொண்டாய் அன்று

அதற்காகவே என் வீட்டுப் பக்கம்
தலை காட்டாமல் இருக்கின்றாய் இன்று.

மயிலே நீயும் என் உறவினன் சொல்வாயா
உலகுக்கு இன்று

குயிலே உன் கானம்

பதினாறு வயதில் நான்
விழித்தெழுந்ததும் கேட்ட உன் கானம்
என்னை சிறையெடுத்து விட்டதே குயிலே

இன்று நீ கூவ மாட்டாயா என்ற ஏக்கத்தில்
தோட்டத்தருகில் சென்று தனியாய்
தூங்கிப் பார்த்தேன்

உன் குரல் கேட்டு விழித்தெழுந்தேன்
பின்பு தெரிந்தது கனவில் தான்
உன் குரல் என்று

மீண்டும் வாராயோ சன்னலோரம்
வந்து என்னை விழித்தெளுப்பினால்
நாளும் நீ என் நெஞ்சோரம்

பணிவிடை செய்வோம்

காலம் காலமாக
பணிவிடை செய்வதோடு
தங்களை
சங்கிலியிட்டுக் கொண்ட
பல்லாயிரம் தமிழ்ப் பெண்கள்

காலப் போக்கில்
தன்னையே
தொலைத்து விட்ட நான்
பணிவிடைத தொலைத்ததும்
ஆச்சரியமில்லையே

ஆசிரியராகப் போவதே
பெண்களுக்குச்
சாலச் சிறந்தது
சொன்ன தந்தை
பணிவிடைக்கு கேடு வரும் என்று
அறிந்திருந்தாரோ அன்று

இறைவா
பணிவிடையில் பெறும் இன்பம்
செய்தவருக்கே அதிகம் என்றுணர்ந்தேன்
இன்று தொடங்கிய சின்னச் சின்னப் பணிவிடையில்

போகின்ற போக்கில் பணிவிடை என்ற
சொல்லுக்கு அர்த்தம் தெரியாமல் போகின்
அதற்கு நீயே பொறுப்பு

சிறந்தது எது

நீல வானம், வெண்ணிலா, சூரியன்
சிறந்தது எது கேள்வி எழுந்திட்டதற்கு

நீவிருவரும் என் உடலோடு ஒட்டிய
உயிராயிற்றே சொன்னது நீல வானம்

நீவிருவரும் இல்லாத பட்சம் என் குளிர்ச்சியே
உலகம் அறியாது போகும் நானல்ல சிறந்தவன்
சொன்னது வெண்ணிலா

நான் கீழே பறந்து வாழும் மனிதர்களை
எரித்து விடாமல் காப்பதே நீங்கள்
நானல்ல சிறந்தவன் என்றது சூரியன்

நாம் அனைவரும் ஒன்றின் வெளிப்பாடே
நாம் சிறந்தவர் என்றல்லாதது
நன்றல்ல

Tuesday, December 21, 2010

நாளெல்லாம் திருநாளாம்

காலைப் பனியில்
காரெடுத்துக் கிளம்பினால்
அதுவும் சாலையை ஈக்களாக
கார்கள் மொய்க்கும் முன்

சாலையும் நோக்கி
முன்னிருக்கும் கண்ணாடியில்
நீல வானையும் நோக்கினால்
அதுவும் மேகக் கூட்டம் கலையும் முன்

கூடவே காதுக்கு இதமாக
அழகிய தமிழ் பாட்டொன்று
கேட்டால்
அதுவும் இரைச்சலற்ற அமெரிக்காவில்

நாளெல்லாம் திருநாளாய்த்
துவங்கும்

புன்சிரிப்பு

சிரிக்கும்
வேளையில்
எனை
மறந்தேன்

நீ இருப்பதனாலேயே
எனை சிரிக்க
வைத்தாய்

எங்கோ
தொலைந்தேன்
சிரிக்கும் வேளையில்

சிரித்தேன்
நாளுக்கு நாற்பது
முறை

உன்னால் தானே
அத்தனையும்

அது தான்
என் காவியப்
புன்சிரிப்பு

கனவில் தரிசனம்

உள்மனதிலிருந்து
கேட்ட எனக்கு
கனவில் தரிசனம்
அளித்து விட்டாய்

நனவில்
என்றென்னை
தரிசிப்பாயோ

நான் கேட்டது
தோழிக்கு மட்டும்
நனவில்
தந்து விட்டாயே

இது என்ன நியாயம்?

கொஞ்சம் பொய் உள்ளது

பிறந்த பொழுது
உடலைக் கொடுத்த
உயிரே

இறப்பதற்கு முன்
உடலைக் காதலிக்கக்
கற்றுக் கொடுத்து விடு

உலகில் உள்ள
அனைத்தையும்
காதலித்து விட்டேன்
உன்னைத் தவிர

கொஞ்சம்
பொய் உள்ளது
நான் சொல்வதில்

சொல்வதில்
உள்ள மெயமையிடம்
ஒவ்வொரு கணமும்
நான் தஞ்சம்

வளர்ந்த குழந்தை

என்ன செய்கிறோம்
என்று அறியாமலே
அழும்
பச்சைக் குழந்தைக்கும்

அன்பைத்
தொலைத்து விட்டு
அழும்
வளர்ந்தக் குழந்தைக்கும்

அதிக வித்தியாசம் இல்லை

என்ன செய்கிறோம்
என்று அறியாமலே
சிரிக்கும்
பச்சைக் குழந்தைக்கும்

வருவதை எதிர்கொண்டு
சிரிக்கும்
வளர்ந்த குழந்தைக்கும்

அதிக வித்தியாசம் இல்லை

சொல்லப் போனால் நாம்
அனைவரும் சாகும் வரை
வளர்ந்த குழந்தை தான்

இதில் அத்வைதம்
தெரிகிறதோ
உங்களுக்கு?

உடல் காதல்

அன்பும் காதலும்
மட்டுமே
என் சொத்துக்கள்

சொத்துக்கள்
அமுதசுரபியாய்
ஆனதால்
கலக்கம்
என்னை விட்டு என்றோ
விடை கொடுத்திட்டது

புது வரவு ஒன்றுக்கு
காத்துக் கிடக்கிறேன்
ஆவலோடு

நான் காத்திருப்பது
எனக்காக
அல்ல
என் காதலில், அன்பில்
உறைந்திருக்கும்
உயிரினங்களுக்காக

அன்பைக் கொடுத்து
எதையும்
பெற முடியும்
என்று அறிந்து
கொண்டேன்

அதனால் நான்
தேடும் உடல்
காதலே நீ மிக
அருகில்
உள்ளாய்
உணருகிறேன்

மாத்திரைத் தோழர்களே

என் உயிர் மூச்சாய் கலந்து விட்ட
மாத்திரைத் தோழர்களே
நீங்கள் மாற்ற வந்தது
என் நினைவையா
என் உடலையா?

இரண்டையுமே
நீங்கள் பறித்துக்
கொண்டதால்
எனக்கு மீதம்
வெறும் காதல்
மட்டும் தான்

என்னை உங்களிடம்
தொலைத்து விட்டு
நான் படும் பாடு
அறிய வில்லையா
நீங்கள்

உங்களுக்கு
விடை கொடுக்க
அடித்தள
வேலையை
விரைவில் தொடங்குக

இல்லையென்றால்
உங்களுக்குப் பெருமை இல்லை

இல்லையென்றால்
உங்களுக்குப் பெருமை இல்லை

உடலே என்னைக் கவனி

காதலே
என் மனதில்
மட்டும் அல்லாது
உடலையும்
தொட்டுத் தாலாட்டி
விட்டுச் செல்

உடலே மனமாகிய
என் வீட்டுக்குள்
குடிபுக
உனக்கு இன்னும்
மனம் வர வில்லை
ஏன்?

உடலே
உன்னை நேசிக்க
மறந்ததற்கு
என்னை
மன்னித்து
விடு

என்னை விட்டு
தூரமாகவே
நின்று கொண்டு
இருக்கிறாய் ஏன்?

இன்றோடு
என் மீதுள்ள
பகையைத்
தொலைத்து விடு

மனதோடு
மனமாய்
கலந்து விடு

Monday, December 20, 2010

அத்வைத பித்துப் பெண்

நான் ஒரு சராசரி
மனுஷி தான்
இருந்தும் என்னுடைய
சிந்தனைகள்
உணர்வுகள்
சற்று
மாறுபட்டனவே

நூற்றுக் கணக்கான
'அவன்கள்' எனக்கு
ஒரு அவனாகவேத்
தோன்றுகின்றனர்

அவளுக்கும் அதே கதி தான்
அதாவது ரமாவாக சீதாவாக
இருப்பது அந்த ஒரு அவள்
தான்

அனைத்து மணமும் ஒரு
மணம் தான்
அனைத்து ஒலியும்
ஒரு ஒலி தான்

எனக்கு சிறுமியாக
செய்யப்பட்ட சகாயமும்
இன்றைய தினம்
செய்யப்பட்ட சகாயமும்
ஒன்று தான்

அண்ணன் எனக்கு செய்த
அநியாயமும் அயலான்
செய்த அநியாயமும்
ஒன்று தான்

அன்னையின் அன்பும்
அடுத்தவன் அன்பும்
ஒன்று தான்

அதனால் நீங்கள்
எனக்கு அத்வைத
பித்துப் பெண் என்று
தாராளமாகப்
பெயர் வைக்கலாம்

என்னுடைய வைரத்தைப் பற்றி

அவன் எனக்கு வைரம்
கொட்டிக் கிடக்கும்
வைரக் கிடங்கு

என்னைத் தாலாட்ட வந்த
தாலாட்டுத் தலைவன்
கண்ணின் இமையாய்
காவல் காக்கும் காவலன்

அவன் வீடு என்
தங்க மாளிகை
அவனுடைய குரல்
என்னைக் கவர்ந்து இழுக்கும்
குழல்

அவனுடைய தேகம்
நான் விரும்பி
விளையாடும் மைதானம்

எனினும் அவன் மனம்
எனக்கு மட்டும் தான்
என்று நான் அடம்
பிடிக்க வில்லை

பணிவிடை செய்ய
மனமிருந்தும்
செயலில் இல்லை

காதலும் பக்தியும் இருந்தால்
அதுவே போதும்
என்பது என் கருத்து
அவன் கருத்தும் கூட

கவியின் மறு பக்கம்

ஆழ்ந்த சிந்தனை
புரியாத கவி
எழுதி

கவி எழுதுகிற
சாக்கில்
கடமையைத்
தவற விடாது

கனவில் வாழ்ந்து
காரியமும் செய்து

நல்லவருக்குத் துணையாய்
நலிந்தோர்க்கு ஆதரவாய்

வாழும் அந்த சிறந்த கவி

பல் வரிசை தெரிந்திட
சிரித்து நாணி கோணி
நகைப்பூட்டி சில சமயம்
கோமாளித் தனம் கூட
செய்து நாளொன்றை
உற்சாகமாக நகர்த்துவான்

அனைத்து மணமும் ஒன்றே

தூய அன்பிற்கு
பிரிவு இல்லை
ஆழ்ந்த அன்புடன்
மௌனமாக நேசித்த
பழைய நண்பர்கள்
காணாமல் காண்கிறேன்

இன்றைய நாளில் வேறொருவரின்
ஒத்த குரலில் நண்பரின் குரல்
கேட்கிறேன்

இன்றைய நாளில் வேறொருவரின்
உருவத்தில் கூட
நண்பரைக் காண்பதில்
தடங்கல் இல்லை எனக்கு

ஆழமுடன் நேசிக்கத் தெரிந்த
என்னை நானும் ஆழமாக
நேசித்துக் கொள்கிறேன்

ஆழமுடன் நேசித்தால் கேடு ஒன்று
உண்டல்லவா? நேசிக்கப்பட்டவர்
உலகிலிருந்து பிரிந்து சென்றால்
மனம் பித்தாக மாறி விடுமோ?
கண்ணாடி போல உடையும்
மனத்தையும் படைத்து விட்டானே
ஆண்டவன்

நான் அந்நாட்களில்
நெல் வேகும் கணம்
உள்ளிழுத்த மணம்
நேசிக்கிறேன்

இன்று குடிக்கும் காப்பியின்
மணத்தில் கூட நெல் மணத்தைக்
காண்கிறேன்

நான் அந்நாட்களில்
கேட்டத் தவளை
சத்தத்தை இந்நாளில்
மின் சாதனம் எழுப்பும்
தொடர் ஒலியில் கேட்கிறேன்

ஆழமாக சிந்தித்துப் பார்த்தால்
அனைத்து மணமும் ஒன்றே

ஆழமாக சிந்தித்துப் பார்த்தால்
அனைத்து ஒலியும் ஒன்றே
அனைத்து ஒளியும் ஒன்றே

இவற்றை தியானத்தில் புரிந்து
கொண்டேன்.
என்னைப் பித்தன் என்றேனும்
சொல்லிக்கொள்.
பித்தம் தெளிந்த நான்
இனி எதற்கும் வருந்த மாட்டேன்

Sunday, December 19, 2010

திருந்தி விடு மனமே

சஞ்சலமும் சிரிப்பும்
கோபமும் கும்மாளமும்
கவலையும் களிப்பும்
அழுகையும் ஆனந்தமும்
குழப்பமும் குதூகலமும்
ஒன்றுக்கொன்று விட்டுக்
கொடுத்து நம் வாழ்க்கையை
அலங்கரிக்கின்றன

இது தெரிந்த பின்னும்
ஏன் அழுகிறாய்?
எதற்கு கலங்குகிறாய்?

மகனை இழந்த
தாயே சிறிது காலம்
சென்ற பின்
அமைதியுறும்போது
நீ மட்டும் எதற்காக
சிறியதற்கு எல்லாம்
மனம் சஞ்சலம் அடைகின்றாய்?

திருந்தி விடு
மனமே இன்றோடு
திருந்தாத காரணம்
ஒன்று இருந்தால்
அது உன்னை நீயே
வீழ்த்துவதற்கு
மட்டும் தான்

நினைவிற்கு எட்டிய நாட்கள்

தவளை மேல் கல் எறிந்தும்
தண்ணீரில் கப்பல் விட்டும்

ஓடிப் பிடித்து விளையாடியும்
ஓனான் விரட்டி அடித்தும்

வண்ணத்துப் பூச்சியைக் கட்டி விட்டும்
வண்டுகள் தேடி அலைந்தும்

மட்டைப் பந்து ஆடியும்
மர்மக் கதை படித்தும்

பட்டமொன்று விட்டுக் கொண்டும்
பள்ளம் தாண்டிப் பழகியும்

வேட்டுகள் வெடித்து ரசித்தும்
வேப்பம் பழம் தின்னு பார்த்தும்

வாதாங்கொட்டை உடைத்தும்
வாத்தியாரை கிண்டல் அடித்தும்

கில்லி ஆடி அளந்தும்
கிரிக்கெட் சிச்சர் அடித்தும்

பேப்பர் ராக்கெட் விட்டும்
பேப்பர் ராக் சிசெர்ஸ் ஆடியும்

நொண்டி நொண்டி பிடித்தும்
நெல்லிக்காய் வேட்டையாடியும்

கூழாங்கல் கூட்டியும்
கூர்காவை குழப்பியும்

கொடுக்காப்பள்ளி பறித்தும்
கொய்யக் காய் கடித்தும்

ஓடிச் சென்ற நாட்கள்
இன்று நினைவிற்கு
எட்டிய நாட்கள்

தந்தையின் மந்திரம்

தந்தை சொல்
மிக்க மந்திரம் இல்லை

தெய்வீக சிந்தனை
உனக்குள் புதைக்காதே

அவ்வைக்கு வாரிசாய்
முயற்சி செய்

கவலையும் கண்ணீரும்
இல்லை அவ்வைக்கு

கவியும் கவி பாடலும்
மட்டுமே உண்டு
அவ்வைக்கு

மந்திரம் அருளியது
தந்தை

யானை சொன்னது

கோவில் யானை
தும்பிக்கை
தலையில் வைத்தது

என்ன சொல்லி வைத்தது
புரிந்திருக்கவில்லை
அன்று எனக்கு

உன்னைத் தடுத்து
விளையாடுகிறேன்
பாரு

ஆனாலும் கவனித்துக்
கொள்வேன் அன்போடு
என்று தான் சொன்னதோ

யானையும் கடவுள்
அன்றோ?

இறைவன்

இறைவன் என்னை
அறைந்தார்

மறு கன்னத்தை
காட்டினேன்

என் சுகத்தை விட
மற்றவர் சுகம்
பெரிதென்று

அறைய மாட்டேன்
என்றென்றும் இனி
மற்றவராலே
சீர்படுவாய்
ஆசியிட்டார்
என்னை

இறைவா
நேரில் கண்டு விட்டேன்
உனை

கீதை சாரம்

மன உளைச்சல் மட்டுமே கண்ட
மனிதன் அவனையும்
முத்தாய் மாற்றிடுமே
கீதை சாரம்

சென்ற நாட்கள்
குதூகலிக்க மறந்தேனே
வரும் நினைவு அதனையும்
மகிழ்வுடன் ஏற்கும்
கீதை சாரம்

வெறுமையான கண்கள்
சூடிக் கொண்ட நாட்கள்
நல்ல நாளே என்பது
கீதை சாரம்

தூக்கம் கெட்ட நிலை
மாற்றும் பலம்
மாத்திரைக்கு அல்ல
மற்றவர் அன்பு
என்பது
கீதை சாரம்

படியுங்கள் அவசியம்
கீதை சாரம்

புத்திசாலி குழந்தை

நாளொன்றும் கெட்டிக்காரி
பத்து முறை சொன்னது அப்பா

நாளொன்றும் முட்டாள்
பத்து முறை சொல்வது
என் விடலைக் குழந்தை

வாழ்க்கைப் பாதையில்
தடம் புரண்டு போன
என்னை தடத்தில்
ஏற்றவே சொல்லும் புத்திசாலி
அவள் தான் என்
விடலைக் குழந்தை

Saturday, December 18, 2010

திண்டாட்டமா கொண்டாட்டமா

வீட்டைப் பார்த்து
வேலையைப் பார்த்து
குடும்பத்தினரைக்
கோபித்து
என்னம்மா
பிரயோஜனம்?

வாழ்வில்
அன்பும் பண்பும்
நிறைந்திருக்க வழி
சொல்லுகிறேன்
அம்மா தெரிஞ்சிக்கோ

வேலையிலும் சரி
வீட்டிலும் சரி
சுமாராக
ஒளிர்ந்தாலே போதும்
என்று நினைச்சுக்கோ

குற்ற உணர்வு தேவையில்லை
சமுதாய சூழ்நிலை என்று
அறிஞ்சுக்கோ

உனக்கென்று தினம்
தனி நேரம்
ஒதுக்கிக்கோ

தியானம் செய்ய
நேரம் பண்ணிக்கோ

உன்னை நீயே
நன்றாகப் புரிஞ்சுக்கோ

நீ நீயாக இருந்துக்கோ

நேற்றிரவு

நெஞ்சில் தலை புதைத்து
இதயத் துடிப்பினை எண்ணும்
காதோர விளையாட்டு
கற்றுக் கொடுத்து விட்டாய்

அணைக்கும் வேகத்தில்
காதலை அளக்க முடியாத
எல்லைக்கு ஏற்றி விட்டாய்

விருந்துக்குக்காக காதலா
காதலுக்காக விருந்தா
என்று திகைக்க விட்டாய்

கண் இமைக்கும் நேரத்தில்
காற்றும் நீருமாய்
உருவெடுத்தாய்

காந்தமொன்றை கற்பனையில்
செதுக்கி விட்டாய்

இரசவாதியாகலாம் வாருங்கள்

அவமதித்து நடத்தினாலும்
எரிச்சல் கோபம் கிளப்பினாலும்

காத்து வா கருணையுடன்
உணவுண்ண மறந்தவர்

துரதிர்ஷ்டம் இலக்கணமாக
இவரைப் பற்றிக் கொள்ள

உந்தன் கருணையும்
முடிவில் இவரை மாற்றிடவே

கிட்டுமே உனக்கு
இரசவாதி என்ற சான்றிதழ்

அவர் தான் அந்த மன நோயாளி

சுக்கிரனும் நானும்

பிறப்பு எடுத்ததோ பெண்ணாய்
எழுதலாமோ காதலை?

காதல் பெரிதாய்
காமம் சிறிதாய்த் தோன்றிடவே

விதைத்தான் எல்லாம் வல்ல இறைவன்
என்னை

என்ன வரம் வேண்டும் என்று
கேட்ட சுக்கிரனுக்கு

அளிக்கும் பதில் இதுவே
அளிக்கும் பதில் இதுவே

நிம்மதியுடன் வாழவிடு
உலகுக்கு உபயோகப்படும் வரை

எடுத்துக் காட்டு

தென்னங்கீற்றாய் வளைந்து கொடு
குடும்பத்தினரின் நன்மை காக்க

தன் சுகமா, பிறர் சுகமா
தகுந்த பதில் கேள்விக்கு
எதுவாயினும்
குடும்பத்தினரின் நன்மை
கேடடையாமால் காக்க

காப்பதனால் மட்டுமே
பெற்றிடுவது கோடி புண்ணியம்

நீயும் நின் குழந்தையும்
வாழும் அண்டை அயலார் கூட

Friday, December 17, 2010

தினசரி அம்சங்கள்

எழுந்ததும் பிராணயாமம், நல்ல ஆசனம், மற்றும்
தியானம் என்று பழக்கப் படுத்திக் கொண்டேன் பாப்பா

கால் கோப்பை காப்பி என்
சிற்றுண்டியின் கடைசிப் பகுதி பாப்பா

பின்னர் மூளைக்கு விருந்தாய்
பிரயாசமான வேலை பார்க்கிறேன் பாப்பா

உணவு இடைவெளியில் அளவளாவி
நட்பு கொண்டாடுகிறேன் பாப்பா

பணி இடைவெளியில் நிமிடங்கள் இருபது
வேக நடை உடற்பயிற்சி பாப்பா

உன் வாழ்விலும் அம்சங்கள் இது போன்று
அமைத்துக் கொள் பாப்பா

Thursday, December 16, 2010

மேல்நிலைப்பள்ளி

ஆசிரியையை கிண்டலடிக்கும்
மாணவர்கள்

நேர் கோட்டில் மட்டுமே நடக்கும்
தமிழ் ஆசிரியர்

தத்துவம் புகட்டும் இரசாயனம்
ஆசிரியர்

தாடியுடன்
உயிரியல் ஆசிரியர்

சன்னமாய்ப் பேசும்
இயற்பியல் வாத்தியார்

பேசிப் பேசி மகிழும்
மாணவ மணிகள்

திங்கட்கிழமை பாடிய
தமிழ்த் தாய் வாழ்த்து

கணீரென்ற
பள்ளி மணி

அகன்று விரிந்த
மைதானம்

இத்தனையும் கொண்டதாம்
எங்கள் மேல்நிலைப்பள்ளி.

மலைக்கோட்டை

திருச்சி மாநகரின் மையத்தில்
பிள்ளையாரின் பேரருள் பரவும் கோலத்தில்
மெய்மறந்து தரிசிக்கும் நேரத்தில்

நான் வாங்கித் தந்த பூவை
பிள்ளையாருக்கு சாற்றும் நேரத்தில்

பால் அபிஷேகம் காணும் நேரத்தில்
சூடம் காட்டும் தருணத்தில்

மனம் சென்றிடுமே பக்தருக்கே
உரித்தான கோலத்தில்

பின்னர் சிதறு தேங்காய்
உடைந்த சத்தத்தில்

சிதைந்த சில்லுகளைப்
பொறுக்கும் வேகத்தில்

மனம் சென்றிடுமே பக்தருக்கே
உரித்தான கோலத்தில்

யானைப் பாதை தன்னில்
விரையும் நேரத்தில்

பின்னர் செங்குத்துப் படியில்
அடியெடுத்து ஏறும் தருணத்தில்

உச்சிப் பிள்ளையார் தரிசிக்கும்
நேரத்தில்

மனம் சென்றிடுமே பக்தருக்கே
உரித்தான கோலத்தில்

இறங்கி வந்து காவிரி ஆறு
நோக்கும் நேரத்தில்

திருச்சி மாநகரை ஒருசேரக்
காணும் நேரத்தில்

பிரசாதம் சாப்பிட்டு பாறையில்
விளையாடும் தருணத்தில்

மனம் சென்றிடுமே பக்தருக்கே
உரித்தான கோலத்தில்

மலைக்கோட்டைப் பிள்ளையார் இன்று
எனக்கு திருச்சியில் மட்டும் இல்லை

மலைக்கோட்டைப் பிள்ளையார் இன்று
எனக்குத் திருச்சியில் மட்டும் இல்லை

என்றும் எப்பொழுதும்
உறைகின்றார் நெஞ்சினில்

கலங்காத உயிர்

ஆரம்பப் பள்ளிக்கான சைக்கிள் சவாரி
பின்னர் அடுத்தடுத்து வந்த வருடங்களில்

பள்ளம் தாண்டி தாண்டி
பள்ளிக்கு விரைந்த
அனுபவம்

விவீட்பாரதியில் எஸ் பீ பீ பாடல்கள்
தேன் போல் காதில் ஒலிக்க
பள்ளிக்கு பறந்த
அனுபவம்

சேற்றிலே வழுக்காமல் கால்களை முன்னேற்றி
கலங்காமல் பள்ளிக்குச் சென்ற தைரியம்

முழங்கால் அளவு தண்ணீருக்குள்ளும்
தயங்காமல் வழி தடத்தைக் கண்டு கொண்ட சாதுரியம்

பரீட்சை நாள் காலை தேசப் படம் ஒன்றை
கடையிலிருந்து காசு கொடுத்து களவாடிக் கொள்ளும் பழக்கம்

வீட்டில் இன்க் இருந்தும் எதற்காகவோ
கடையில் பேனாவிற்கு இன்க் ஊற்றும் பழக்கம்

பள்ளி தொடங்கும் நாட்களில்
பிரில்-இன்க் லேபல்களை
பரவசத்துடன் சேகரித்துக் கொள்ளும் பழக்கம்

மாலையில் வீடு திரும்பும் நேரம்
கறி காய் வாங்கி பழக்கடையிலிருந்து
வரும் பழ வாசத்தை உள்ளிளுத்ததன் நினைவு

பாலம் இருக்க செருப்பை கையிலெடுத்து
ஆலைக் கழிவு ஓடைக்குள் இறங்கி
அக்கறை செல்லும் சேட்டை

அண்ணன் ஒருவன் சைக்கிள் வித்தை செய்து
வீடு திரும்புவதை வேடிக்கை கண்ட நினைவு

இத்தனையும் நான் ஒரு சாதுரியமான சிறுமி
என்றே நினைவுபடுத்துகிறது

சிறுமியாக இருந்தபொழுது கலங்காத உயிர்
இன்று வளர்ந்து ஆளான பின் பல சமயம்
மனம் கலங்கும் மாயமும் என்னவோ?

வருகுது அம்மா நினைவு

பாயசம் சப்பினேன் பாப்பாவாக
பஞ்சு மிட்டாய் பார்த்திடவே
பத்து முறை கெஞ்சினேன் வாங்கித் தர

பத்து பத்தாய் சாப்பிட்டேன் பகோடாக்கள்
பல முறை ரசித்தேன் அல்வாவை

பரோட்டா தின்னப் பழகினேன் பின்னாலே
பால் மட்டும் தொடர்ந்து குடித்தேன்

பாகற்காய் தின்னப் பழகினேன் பின்னாலே
பழங்களைச் சாப்பிட்டேன் பழமுதிர் சோலையிலே

பாஸ்தாவும் தின்னப் பழகினேன் பின்னாலே
பேப்பர் பிளேட்டில் சாப்பிடுகிறேன் இந்நாளில்

பரக்கப் பரக்க சாப்பிட்டேன் சில வருடம்
பாதி மட்டும் சாப்பிட்டேன் சில வருடம்

சாப்பிட்டது எத்தனை விதம்
நினைக்கவில்லை அம்மாவை
சாப்பிடும் தருணம்

நல்ல பொழுதும் விடிந்தது இன்றெனக்கு
வருகுது அம்மா நினைவு
சிற்றுண்டி சாப்பிடும் வேளையிலே

Wednesday, December 15, 2010

உழைக்கும் மனங்கள்

ஏன் வந்ததோ?
கம்ப்யூட்டர் முன் கட்டாயமாக உட்கார வேண்டிய நிலை

என்ன விளைவு மூளை இடது பக்கமே உபயோகித்து ?

மறந்து விடுகிறது, மறுத்து விடுகிறது கண் மற்றவிரடம் பேச

சிட்டாய்ப் பறக்க வேண்டிய கால்கள் கணம் ஒன்றும்
கட்டப் பட்டு விட்டது கம்ப்யூட்டர் நாற்காலியில்

கால்கள் பல பத்தாண்டுகள் கட்டப் பட்டு விட்டது
சூறையாடி விட்டது சக்திமான் தோற்றத்தையே

விடுபடத் துடிக்கிறேன் இவற்றிலிருந்து
பணியில் நட்புக்கு இடம் கொடுத்து
தேற்றிக் கொள்ளும் என் போல் மானிடர்கள்
எவர் இருப்பினும் கேளுங்கள்

உழைக்கும் கரங்கள் என்று சொல்வதற்கு பதில்
உழைக்கும் மனங்கள் என்றே சொல்லுவோம்

இல்லாதது நினைப்பேல்

காதலில் மட்டுமா இன்பம்
தொலைத்து விட்டப் பள்ளித் தோழர்களை
திரும்பப் பெறுவது இன்பம்

காமத்தில் மட்டுமா இன்பம்
கவி எழுதுவது இன்பம்

மைசூர்-பாக்கில் மட்டுமா இன்பம்
தியானம் செய்து
பரவசம் அடைவது இன்பம்

கண் பேசுவதில் மட்டுமா இன்பம்
கலை ரசிப்பதில் இன்பம்

இது தான் இன்பம் என்று
சொல்வதற்கு எதுவும் இல்லை

இன்பம் மனதில் உதிக்கிறது
இன்பம் உணர்வில் கலக்கிறது

இல்லாதது நினைத்து வருந்தாதே
இருப்பதை நினைத்து களிப்புறு
இருப்பதை நினைத்து அமைதி கொள்ளு

கண்ணன் முகம் கண்ட கண்கள்

கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னன் முகம் காண்பதில்லை

கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை

தூய அன்பு கொண்ட பெண் அவள்
கண்ணனை காண்பாளே எவரிடத்தும்

கண்ணனுக்குத் தந்த உள்ளத்தை
தருவாளே பிறருக்கும்

Monday, December 13, 2010

பொங்கல் தினத்தன்று

முந்தைய நாள் மனையெங்கும் ஆசையுடன்
மாக் கோலமிட்ட அந்தக் காலம்

பொழுது விடியும் முன் தயங்காமல் எழுந்து
காலைப் பனியில் வீட்டு வாயிலில்
மார்கழிப் பனியோடு போட்டியிட்ட
தை முதல் நாள் பனியில்
முக்காடிட்டு அமர்ந்த அந்த நாள்

பசுவின் சாணத்தை சந்தோஷமாகத் தெளித்து
தரையை சுயமாகச் சாயமிட்டு பெருமிதம்
அடைந்த அந்த நாள்

வண்ணப் பொடிகளைப் பரப்பி வைத்து
கோலத்தின் தலைப் பாகம் சிவப்பா பச்சையா
என்று உடன்பிறந்தாரோடு கலந்து உரையாடி
உவப்போடு கோலமிட்ட அந்த நாள்

பின்னர் ஸ்நானம் செய்து பிறகு அப்பா சூடம் காட்டும்
பாணியை பக்கமிருந்து வேடிக்கை கண்டு
பொங்கல் ப்ராசதத்தில் கடவுள் அருள் நிறைய இருப்பதாக
முழுமையாக நம்பி அதன் சுவை, மணம் இரண்டையும்
ஒன்று கூட்டி உயிருணர்வோடுடன் இணைத்த
அந்த நாள்

பூஜை அறையை ஆக்கிரமித்த அந்த ஊதுவத்திப் புகையில்
மெய்மறந்து அந்த வாசம் மூளையின் ஓரச் சதையில்
புதைந்து விட்டது என்று அறிந்திராமலே பூஜை அறையை
விட்டு வெளியே வந்த அந்த நாள்

வீட்டுக் கூடத்தில் கரும்பு சீவித் தந்த
சித்தப்பனை நன்றியோடு நோக்கி
துண்டம் செய்து தரும் அம்மாவை
பக்தியுடன் வேடிக்கை பார்த்த அந்த நாள்

கணுவைக் கடிக்க முடியாமல் தவித்து
அண்ணனால் என்னை விட வேகமாகச்
சாப்பிட முடியுதே என்று கலங்கிய
அந்த நாள்

பொங்கல் நாளாம் நன்னாளாம்
என்றும் மனதை விட்டு அகலா
நன்னாளாம்

பண்டிகைக்கு இவ்வளவு பலம் உள்ளது
என்பதை வாழ்வின் பிற்பகுதியில்
துல்லியாமாகக் காண்கிறேன்
உங்களோடு பகிர்கிறேன்

Sunday, December 12, 2010

விலங்கும் தோழனே

சல் சல் என்ற மணியின் சத்தம் இசை பாட
குதிரை தன வாலை நம் மீது தடவி விட

வண்டி குலுங்கி குலுங்கி ஆட்டம் போட,
ஒருவர் இறங்கினால் தடம் புரண்டது போல் தோண

போர் அடித்தால் நிலைக் கண்ணாடியோடு விளையாட
சவுக்கடிக்காக குதிரைக்காக மனம் உருக

குதிரை வண்டிக்கென்ற தனி மணத்துடன்
இயற்கையின் அதிசயத்தைக் கண்டு களித்த

நாட்கள் அன்று. இந்த நாட்கள் அன்று போல்
எளிமையாக இல்லையே

பழமையும் பெருமையே
விலங்கும் தோழனே

ஆசிரியர் இலக்கணங்கள்

வேட்டியும் அணிந்து வந்தனர்
காண்போமோ இன்று?

ஒரு சில நாளில் பாட்டும் பாடினர்
பாடுவரோ இன்று?

குசேலர் கதையும் கூறினர்
கூறுவரோ இன்று?

ஸ்கேலில் அடித்தும் இருக்கின்றனர்
அடிப்பாரோ இன்று (அமெரிக்காவில்)

சாக்பீஸ் மட்டுமே கண்டனர்
கம்ப்யூட்டர் கண்டனரோ அன்று?

வகுப்பில் நிசப்தம் அமைத்தனர்
பேக்ரௌந்து நாய்ஸ் கண்டனரோ அன்று?

வீட்டு உணவேக் கொண்டனர்
காண்டீன் கண்டனரோ அன்று

காலமும் மாறியது
இவர்களும் மாறினர்

மாறாதது ஒன்று உண்டன்றோ?
அது தான் மலரும் நினைவுகள்

அந்த நாள் ஆசிரியரின்
இலக்கணங்கள்

இட்லி போய் பாஸ்தா வந்தது டும் டும் டும்

இட்லி சட்னி சுவையோ தனி
பாட்டி வீட்டு தோசையின் மணமோ தனி

இன்று 2010 இல் சமையல் ரகமோ தனி
அம்மா அப்பா இட்லி சாப்பிடுவார்கள்

எனக்குப் பிடித்ததோ பிஸ்ஸாவும் பாஸ்தாவும்
என்றே குழந்தைகள் சொல்கிறார்கள்

Wednesday, December 8, 2010

தியேட்டருக்குள்

தியேட்டருக்குள் ஆடலுடன் பாடல்
இருதயத்தில் துடித்தல்

தியேட்டருக்குள் ஆடலுடன் பாடல்
எவரின் மனதிலும் துள்ளல்

தியேட்டருக்குள் கதாநாயகன் கதாநாயகி
கற்பனையும் நிஜமும் கலந்த எண்ண ஓட்டங்கள்

தியேட்டருக்குள் கதாநாயகன் கதாநாயகி
காண்பதை முழுமையாக ரசிக்கும் அந்த கணங்கள்

இத்தனை இருந்தும் தியேட்டருக்கு
செல்லாத சில மனித மனங்கள்

கம்ப்யூட்டருக்கு அடிமையான இந்த மனங்கள்
பல நேரங்களில் கம்ப்யூட்டர்
சில நேரங்களில் தியேட்டர் என்று

காலத்தைத் தள்ளும் காலம் இது
இருப்பினும் சினிமாவைப் பிரசவித்த
எடிசனுக்கு கூட்டத்தோடு கும்பிடு போடு!

பார்வை

அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்

ஆடவர் கண்ணுக்கு எந்த
ஒரு பெண்ணும் எவ்விதம்?

கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னன் முகம் காண்பதில்லை

என்று சொன்ன கண்ணதாசன்
பெண்ணின் மனம் அறிந்ததில்லை

கல்லூரி நாளில் கண்டு கண்டு
களித்த நந்தவனத்து மலர்கள்

இன்று காணாமல் போயின
என்று எவன் சொன்னது?

பெண்கள் இல்லாத இடம்
பாலை வனம் என்று தானே
அவன் சொன்னான்

மகளிர் கல்லூரியில் மிரண்டு போகும்
அந்த ஒரே ஒரு ஆண் வாத்தியாரும்
அமிர்தம் என்று தானே அவள் சொன்னாள்

ஆண் பார்வை, பெண் பார்வை என்றப்
பிரிவினை இல்லை இங்கு

பார்வைக்கு என்றும் பஞ்சம் இல்லை
பார்வைக்கு என்றும் பஞ்சம் இல்லை

Thursday, November 25, 2010

இன்று முதல்

உண்மையான அபிவிருத்தி நம் உள்ளிருந்தே வரக் கூடும்
சொர்க்க வாயிலை நாமே தான் திறக்கக் கூடும்

நமக்குள் புதைந்து கிடக்கும் சுதனங்களை
இன்றே தோண்ட முனைவோம்

நம் சாதுரியங்களை உலகுக்கு
பரிசாக அளிப்போம்

சுற்றத்தாரின் நன்மனத்தை கறந்தெடுத்து
இருதயத்து அறை வீட்டுக்குள் இட்டுக் கொள்வோம்

நட்பினரின் நன்மனத்தை தினம்
மாலையிட்டுக் கொள்வோம்

குடும்பத்தில் உபசமனம் பரப்பிட
பொறுத்து நடப்போம்

வினை

ஒருவனுக்கு நோய் வந்தால் அது வினை
சாப்பிடாமல் தூங்காமல் அலைந்தால் அது வினை

பெண் பெண்ணாக இல்லை எனில் அது வினை
ஆண் ஆணாக இல்லை எனில் அது வினை

வினை தீர்க்கும் விநாயகனே வணங்கித் துதிப்பேன்
விநாயகனே என்று பாடும் நீ

உன்னை அறிந்து கொண்ட நாள் வினையைத்
தீர்த்து விட்டாய்

Monday, October 4, 2010

கற்பனை

தெருக்கோடி செடியில் குலுங்கும் ரோஜாவில்
திருமண நாளில் அணிந்திருந்த
மாலையை மறுபடி காண்பதும்

விடலைக் குழந்தையின் தனி அறையில்
பரிணாம வளர்ச்சியை முழுமையாக அறிவதும்

யு-டுயூப் பாடலில் குருவாயுரப்பன் கோவில்
ஒலி முழக்கத்தைக் கேட்பதும்

பாடல் ஒன்றில் கல்லூரிக் கலை விழாவை
மீண்டும் காண்பதும்

முன்பொருநாள் அம்மை அப்பனுடன் கேட்டப் பாடலில்
இன்று அவரை நெஞ்சருகில் கொணர்வதும்

பழக்கமாகிப் போனது உண்மையோ
பக்குவமாய் மனதை நம் வசப் படுத்தி விட்டால்
இன்னும் வேறு என்ன மாயமோ

உறவுகள்

உறவுகளில் நான் காண்பதோ அன்பு
சிலர் காண்பதோ பகை, அது தான் ஏனோ?

உறவு முறைகளில் தான் எத்தனை விதம்
அவைக் காலப் போக்கில் குறைந்தும் போகுமோ?

உறவினரைப் பார்க்க கடல் கடந்து
போக வேண்டுமாம் பலருக்கு
ஆனால் நண்பரெல்லாம் உறவினருக்கு
ஈடு கொடுக்கின்றனராம் இவர்களுக்கு

பள்ளியில் படிக்கின்றனராம் மருமகனும் மருமகளும்
தினம் 'பேஸ் புக்கில்' கலந்து பேசத்
துடிக்கின்றனராம் இவர்களும்

பார்பிகுவிலும் ஏரிக்கரைப் பிக்னிக்கிலும்
தொடருதாம் சில உறவுகள்
பட்டனைத தட்டி தட்டி 'யாஹூ குரூப்-ல்'
தொடருதாம் இன்னும் சில உறவுகள்

செடி வளர்க்க தண்ணீர் ஊற்றுகிறாய்
உறவை வளர்க்க அன்பை ஊற்று

வளர்த்த செடியில் பழங்கள் பறிக்கின்றாய்
வளர்த்த உறவில் அன்பின் முத்திரையை
காண்கின்றாய் அன்றோ?

வாழ்வைத் தொடங்கும் பச்சைக் குழந்தையோ
அன்னை என்ற உறவில் அர்த்தம் காணத் துவங்குதாம்

வாழ்வில் எல்லாம் கண்ட பாட்டனோ
உறவின் மீது உள்ள பற்றில் இருந்து விடுபடத் துடிக்கின்றாராம்

Friday, August 20, 2010

இளமை

இளமைக்கு ஒரு ராகம் அது
சாகும் வரை பாடும்

இளமைக்கு ஒரு சுகம் அது
என்றும் சுடும்

இளமைக்கு ஒரு வேகம் அது
என்று தணியும் ?

இளமைக்கு ஒரு விருந்து அது
இருளிலே தொடங்கும் .

இளமைக்கு ஒரு சக்தி
அது உள்ளம் கவரும்

இளமை, இளமை, இளமை
என்று ரீங்காரம் இட்டே
செல்லும்

Tuesday, August 10, 2010

இப்படியும் ஒரு பெண்

கண் பேச மறந்த நங்கை
மறந்த கண்ணை நினைவில் கொண்டு
ஆனந்தக் கூத்தாடினாள்

பெண்ணழகு

பெண்ணுக்கு அறிவு தான் அழகு
அழகைப் பார்ப்பதில்லை நான்
என்று சொன்ன இளைஞன்
வாயடைத்துப் போனானாம் அந்த
சுந்தர இரவில் !

இளமை

கண்ணிலே தொடங்கி, புன்னகையில்
மலர்ந்து, நெஞ்சினிலே கலந்து
தங்கி விடைபெற்றுத் தொடரும்
பரிமாற்றம் இளமைக்கு மட்டுமா
சொந்தம்?

ஒற்றுமை

பறவைக்கும் பெண்ணிற்கும்
பறந்து பறந்து குஞ்சிற்கு இறை கொடுப்பதில்

பூவிற்கும் பெண்ணிற்கும்
மணம் பரப்பும் மும்மரத்தில்

நிலாவிற்கும் பெண்ணிற்கும்
குளிர்ந்து, குளிரவைத்து குடும்பத்தைக் காப்பதில்

தாமரைக்கும் பெண்ணிற்கும்
மயங்க வைக்கும் செவ்விதழ்களில்

Sunday, August 8, 2010

தோழன்

பத்து வார்த்தை பேசினாலே உன்னுள் பத்தாயிரம் சிறந்த
வார்த்தை புதைந்திருக்குது என்றான்

பெண்ணே நீ பிறந்தது எதற்கு என்று
சிந்திக்கவும் வைத்தான்

பதுங்கிக் கிடந்த உயிரைப் பலர் முன்னிலையில்
வெளியிட்டு மகிழ்ந்திட அடித்தளம் வைத்தான்

உன் கையிருக்கு இங்கே இணையம் இருக்குது அங்கே
இரண்டையும் இப்போதே கோர்த்துவிடு என்றான்

முடங்கிக் கிடந்த ஆசையை மும்மரமாய்
வளர்த்துப் பெருக்கிட தூண்டு கோலானான்

ஆசைக்கும் அறிவிற்கும் உள்ள இடைவெளியை
தூரதிருஷ்டிக் கண்ணாடியில் காண்பித்தான்

பெண்ணே அறிவை ஆசைக்குத் தடையாக்கினால்
அந்த அறிவைத் தூக்கி எறியத் தயங்காதே என்றான்

Sunday, April 11, 2010

எந்தன் மனம்

எந்தன் மனமும் ஒரு அற்புதமே

தாய் தந்தையரை என்றும் விசுவாசமாய் நாடிய மனம்
விடலைப் பருவத்தில் சற்று முரண்டும் பிடித்தது

வளர்ந்த பின்னும் தாய் தந்தையர் சொல்லை
மந்திரமாய் ஏற்றுக் கொண்டது

எந்தன் மனமும் ஒரு அற்புதமே

மற்றவருக்கு வேறுபட்டுத் தோன்றினாலும்
மற்றவரின் நன்மதிப்பையே பெற்றது

பிறருக்கு உதவி செய்யத் துடித்த மனம்
பேரமைதியுடன் உதவி செய்து கொண்டே வந்தது

எந்தன் மனமும் ஒரு அற்புதமே

சிலப் பத்தாண்டுகள் ஓடிய போதும்
குழந்தை மனமாகவேத் தங்கியது

வயது முதிர்ந்த ஆடவரையும்
பால்ய வயதுத் தோழனைப்போல் பார்க்கிறது

எந்தன் மனமும் ஒரு அற்புதமே

கோவில் சிலைக்கு முன்னால் உருகிய மனம்
தன்னை அறிந்து கொள்ளத் தவறியது

முன்னமேத் தன்னை அறியத் தவறினாலும்
அறிந்த பின் பேர் ஆறுதல் அடைந்தது

எந்தன் மனமும் ஒரு அற்புதமே

Wednesday, March 31, 2010

எல்லாம் நின் செயல்

காலை எழுந்தவுடன் புத்துணர்ச்சி
கிடைக்காவிடினும்

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

கனிவான வார்த்தைகளைப்
பேசாத தாயானாலும்

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

மனம் சுழலாய்ச்
சுற்றினாலும்

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

இடி போல் விடலைக் குழந்தை
மோதினாலும்

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

முடிவில்லாப் பிரச்சினைகள்
தோன்றினாலும்

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

முக்கியமானது மறந்து
போயிடினும்

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

உன் அருள் நிலையாகத் தங்குவதும்
நின் செயலாலே

பக்குவம்

பத்தில் முப்பதின் பக்குவத்தை
என் மனம் அடைந்திருந்தால்

என் வீட்டைக் கோவிலாகக் கும்பிட
விருந்தினருக்கு அளித்து இருப்பேன்

இருபதில் நாற்பதின் பக்குவத்தை
என் மனம் அடைந்திருந்தால்

காளையரை என் கைக்குள் அடைத்து
சேவைப் படை திரட்டி இருப்பேன்

நாற்பதில் அறுபதின் பக்குவத்தை
என் மனம் அடைந்தால்

நாலாப் பக்கமும் ஞானத்தின் சிறப்பை
பறை சாற்றுவேன்

கேள்வி

நாடு நமக்கு என்ன செய்தது
என்று கேட்காதே

நீ நாட்டுக்கு என்ன செய்தாய்
என்று கேள்

ஆண்டவன் எனக்கு என்ன செய்தான்
என்று கேட்காதே

நீ ஆண்டவனுக்கு என்ன செய்தாய்
என்று கேள்

குடும்பத்தினரை நோகடிக்காமல்
வைத்தாயா என்று கேள்

நலிந்தோரை வல்லவராக்க
முயன்றாயா என்று கேள்

வயது முதிர்ந்த தாய் தந்தையரை உன்
குழந்தை போல் கவனித்தாயா என்று கேள்

தாய் தந்தையரை அன்புடன் அரவணைக்கும்
குணத்தை வரமாகக் கேட்டாயா என்று கேள்

குழந்தையை வையாமல் வாழ்க்கை
நடத்துகிறாயா என்று கேள்

மனத்தில் மாசு அற்றவனாய்
இருக்கின்றாயா என்று கேள்

புறத் தூய்மை போல் அகத் தூய்மை
காத்திடுகிறாயா என்று கேள்

உள்ளத்தை கோயில் போல்
வைத்திருக்கின்றாயா என்று கேள்

நாடி வந்தவர் உன் வீட்டைக் கோவிலாகக்
காண வைக்கின்றாயா என்று கேள்

கற்றவை கற்ற பின் அதற்குத் தகுந்தவாறு
நிற்கின்றாயா என்று கேள்

சிறப்பான தத்துவங்களை பலருக்கு
சொல்கிறாயா என்று கேள்

இல்லாதவருக்கு தானம்
அளிக்கிறாயா என்று கேள்

பிறர் அறியாமல் செய்த தீங்கை
மன்னிக்கின்றாயா என்று கேள்

மற்றவரின் அன்பை உற்று
கவனிக்கிறாயா என்று கேள்

முற்றிலும் ஒரு பூவாக
இருக்கின்றாயா என்று கேள்

குறை ஒன்றும் இல்லை

வேண்டியது வேண்டியபடி கொடுத்தாரே

குழப்பத்தை ஆடையாக நான் அணிந்தபோது
உன்னை உன்னையாகவே பார்த்து மகிழ
நான் இருக்கும் போது குழப்பம் ஏனடியோ என்றாரே

வேண்டியது வேண்டியபடி கொடுத்தாரே

கோபமாக நான் பிதற்றிய பொழுது உன் கோபம்
மனத்தில் இருந்து அல்ல எல்லாம் முன்வினையால்
வந்த பலன் என்று சொல்லாமல் சொன்னாரே

வேண்டியது வேண்டியபடி கொடுத்தாரே

குழந்தை உதாசீனப் படுத்தியதை அளவுக்கு அதிகமாக
நான் பொறுத்து இருந்ததைப் பார்த்து என்னை ஒரு
அன்னையாகவே கவனித்தாரே

வேண்டியது வேண்டியபடி கொடுத்தாரே

உன்னிடம் எல்லாம் சரியாகவே அமைந்துள்ளது
வீர நடை போடு, வெற்றி நடை போடு
என்று உள்ளன்புடன் உரைத்தாரே

வேண்டியது வேண்டியபடி கொடுத்தாரே

வேண்டியதைத் தந்திடும்
ஆண்டவனாகவே அவர் இருக்க
எனக்கிங்கு குறை ஒன்றும் இல்லையே

Friday, March 26, 2010

குழந்தை மனம்

கள்ளம் கபடமற்ற குழந்தை உள்ளத்தை
உடையோனுக்கு இருக்கும் இடம் கர்ப்பக்கிரகம்

தாய் தந்தையரை சதா நினைக்கும் ஒருவனுக்கு
இருக்கும் இடம் இறைவன் சந்நிதி

மிருகமாகவும் தெய்வமாகவும் இருக்கக் கூடியது நம் மனம்
நம்முள் குழந்தை மனம் உறங்கிக் கொண்டிருக்கிறது

குழந்தை மனத்துடன் பழகி வந்தால்
தெய்வம் என்றும் துணை நிற்கும்

குழந்தை மனத்துடன் பழகி வந்தால்
இருக்கும் இடம் கர்ப்பக் கிரகமாகும்

குழந்தையாகவே என்றும் வாழ்ந்து வந்தால்
தவ சக்தியும் நம்மைத் தேடி வரும்

அழுத குழந்தை உடனே சிரிப்பது போல
கலக்கமடைந்து உடனே அமைதி பெறும்
நம் குழந்தை மனம்

குழந்தைக்கு உண்மையான கவலை கிடையாது
நம் குழந்தை மனத்திற்கும்
உண்மையான கவலை கிடையாது

Thursday, March 25, 2010

சக்தி

இருப்பது எதுவோ அது சக்தி
இல்லாததை மறப்பது சக்தி
இதை அறிந்தால் இல்லாததும்
பின்னால் இருப்பதாகும்

பிறருக்காக வாழ்வது சக்தி
சுயநலம் மறப்பது சக்தி
இதை அறிந்தால் தனக்கும்
எல்லா நன்மையும் உண்டாகும்

சுலபமாக செய்ய வருவது சக்தி
எதிர்ப்புகளை சாதகமாக்குவது சக்தி
இதை அறிந்தால்
வானுயரம் வளர்ந்திடலாம்

பம்பரமாய்ச் சுழலுவது சக்தி
ஓய்வெடுப்பதும் ஒருவித சக்தி
இதை அறிந்தால் என்றும்
இளமை காத்திடலாம்

தவறுகள் மன்னிப்பது சக்தி
தீயவை மறப்பது சக்தி
இதை அறிந்தால்
தீதும் நன்றாகி விடும்

உன்னை நீ அறிவாய்

விரும்புவது எது, வித்தகன் ஆனது எதில்
ஒன்றிப் போவது எதில், ஒருங்கிணைவது எதில்
மகிழ்வது எதில், மற்றோரை மகிழ்விப்பது எதில்

புத்துணர்ச்சி பெறுவது எதில், புது சிந்தனை வளர்ப்பது எதில்
சாந்தி கொள்வது எதில், மற்றோருக்கு சாந்தம் அளிப்பது எது
உள்மனது சொல்வது எது, உற்றாருக்கு சொல்ல வேண்டியது எது

இவை அறிந்து கொண்டும், தெரிந்து கொண்டும், புரிந்து
கொண்டும் கடந்து போகும் கணம் ஒன்றிலும் இவற்றையே
செய்து கொண்டிரு, உன்னை நீ அறிவாய்

நல்லவர்களின் நட்பு

நல்லவர்களின் நட்பு
கவலைக்கு மருந்து

நல்லவர்களின் துணை
ஆரோக்கியம் என்ற செடிக்கு உரம்

நல்லவர்களின் நட்பு
மன நோய்க்கு மருந்து

நல்லவர்களின் துணை
இறைவன் தரும் துயரங்களில் இருந்து பாதுகாப்பு

நல்லவர்களின் நட்பு
எல்லாம் வல்ல இறைவனின் வாகனம்

நல்லவர்களின் துணை
நலிந்தோரை வல்லவராக்கும் சஞ்சீவி மருந்து

நல்லவர்களின் நட்பு
தாய் தந்தையரின் ஆசிக்கு நிகர்

நல்லவர்களின் துணை இறைவன் அளித்த வரமாய்
உன்னிடம் தங்கியபோது கலக்கம் தங்காது போய்விடுமே

Sunday, March 7, 2010

அமிர்தம்

மேலங்கியை வேண்டுமென்றே விட்டுச் சென்றால்
அந்தக் குளிர் காலத்தில் என்றும் தொட்டபெட்டாவைக்
காண்பது அமிர்தம்

பதட்டமான வாழ்க்கை முறையைச் சற்று ஓரமாக
நிறுத்தி விட்டு சிறுமியாய்க் கேட்டப் பாடல்களையே
திரும்பத் திரும்பக் கேட்பது அமிர்தம்

தன்னந் தனியாக காட்டிற்குள் ஊர்வலம்
செல்லும்பொழுது திடீரென எதிரில் வரும்
அந்த ஒரே ஒரு கார் அமிர்தம்

இளவேனிற் காலத்து உஷ்ணம் என்று குளிர் காலத்தில்
ஏங்கிக் கிடக்கும் போது மழைக்கு மறு நாள்
வானத்தை ஆக்கிரமித்த மேகக் கூட்டமும் அமிர்தம்

இன்றையப் பொறுப்புக்களும் எதிர்காலத்திற்கான
கேள்விகளும் நம்மை அங்கங்கு வாட்டியிருந்தாலும்
அந்தப் பூங்காவின் குளத்தில் வாத்துக் கூட்டமதனைக்
கண்கொட்டாமல் பார்த்து மகிழ்வது அமிர்தம்

விடலைப் பருவத்தில் தன் குழந்தை அரை குறையாகச்
சாப்பிடுவதைக் கண்டு கிரகவிப்பது கடினமாயினும்
தெருக்கோடி வரை புகைப்படக் கருவியின் துணையோடு
வண்ண மலர்களைப் படம் பிடித்து தன் ப்ளாக்-இல்
வெளியிடுவது அமிர்தம்

தான் குழந்தையைக் கிள்ளிய காலம் போய் தன் குழந்தை
தன்னை கிள்ளும் காலம் நடந்து கொண்டிருக்கும் போது
கொஞ்சமும் கலங்காமல் வாழ்க்கை நடத்துவது அமிர்தம்

பத்தாண்டு வருடங்களாக மீசையை எடுத்து விட்டக்
கணவனைக் கெஞ்சி மீண்டும் மீசை வைக்க வைத்து
அதை வருடிப் பார்க்கும் பழக்கம் அமிர்தம்

புதுக் கவிதை எழுதி, நலிந்தோர்க்குத் துணையாய்
நின்று, ஞானத்தின் பால் கவனத்தைத் திருப்பி
கவலைகளுக்கும் கடுஞ் சொற்களுக்கும் விடை
கொடுத்து அனுப்பிய வெற்றியும் அமிர்தம்

Thursday, February 25, 2010

சீர்

பிறந்த பொழுது தொப்புள் கொடியே நம்மை இணைத்தது
வளர்ந்த பொழுது தாங்கள் ஆக்கி வைத்த சோறு நம்மை இணைத்தது

விடுதிக்கு சென்ற பொழுது ஆதரவான வார்த்தைகளைத்
தூது கொண்டு வந்த அஞ்சலே நம்மை இணைத்தது

என்னுடையத் திருமண நாளில் நம்மிருவரின் சந்தோஷமே
நம்மை இணைத்தது

நான் தாயான பொழுது நம்மிருவரின் பொறுப்புகளே
நம்மை இணைத்தது

பதினாலாயிரம் கிலோ மீட்டர்-க்கு அப்பால் இன்று நம்மை
இணைத்திருப்பது என்ன தெரியுமா?

காலை எழுந்தவுடன் பக்திப் பாடல்களை கேட்டு மகிழும்
நம்முடைய பழக்கமும்

எங்கும் எதிலும் இறைவனைக் காணும்
நம்முடைய நோக்கும்

பொங்கல் தினத்தன்று மாக்கோலம் போட்டு
மகிழும் நம்முடையப் பண்பாடும்

மகளுக்காகத் தான் தன் சுகங்களைத் தள்ளி
வைக்கும் அந்த அற்புதக் குணமும்

அம்மா என் திருமண நாளில் தாங்கள் எனக்குச் சீராகத்
தந்த பண்ட பாத்திரங்களை விட, தங்க நகைகளை விட

தங்களுடைய சிறந்த குணங்களை வெளிப்படுத்தும்
முன்-உதாரணமான வாழ்க்கையே நான் விரும்பி

எடுத்துக் கொள்ளும் சிறந்த சீர் ஆயிற்றே! அவற்றையே
நான் தினம் அணிந்து கொள்ள விரும்பினேனே,
விரும்புகிறேனே , விரும்புவேனே!

Wednesday, February 24, 2010

நிம்மதிக் கடல்

சுற்றத்தாரின் அன்பும் ஆதரவும் எந்தன் தைரியம்
என்னுடைய ஒழுக்கமும் நேர்மையும் மற்றொரு தைரியம்

நற்ச் சிந்தனையும் சேவைச் செயலும் எந்தன் மந்திரம்
கடவுள் பக்தியும் ஞானமும் மற்றொரு மந்திரம்

உலகத்தில் தந்திரங்கள் மிகுந்து இருந்தாலும்
புயற்காற்று வீசினாலும் எனக்குள் உள்ள தைரியமும்

என்னோடு ஒன்றி விட்ட சில மந்திரங்களும்
என்னை நிம்மதிக் கடலில் ஆழ்த்துகின்றன

Tuesday, February 16, 2010

சரஸ்வதித் தாயே!

அனாதைகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளத்
தேவையான சொற்களை
அவர் தம் நாவிற்கு அருள்க

மன நோயாளிகள் தங்களைக் காத்துக் கொள்ளத்
தேவையான சொற்களை
அவர் தம் நாவிற்கு அருள்க

துஷ்ப்ரயோகம் செய்யப்பட்ட குழந்தைகள் தங்கள்
நிலையைப் பிறர் உணரச் செய்ய தேவையான
சொற்களை அவர் தம் நாவிற்கு அருள்க

ஆசையுடன் பெற்றெடுத்த தம் மக்களிடம்
என்றும் இனிமையாகப் பேசிடவே
பெற்றோர்களுக்கு அருள்க

ஞானத்தின் பெருமையை அனைவருக்கும்
விளக்கிக் கூறிடவே
அனைவருக்கும் அருள்க

மழலையில் உள்ளது போல என்றும்
கள்ளம் கபடம் இல்லாத வார்த்தைகளையே
அனைவரின் நாவிலும் அருள்க

இத்தனையும் அருளுவதற்கு இன்று
உனக்கும் இயலவில்லை எனின்
விரைவில் என்றாவது ஒரு நாள்

என் வேண்டுதலை நிறைவேற்றி வைப்பாய்
என்றே நம்புகிறேன்
என் அருமை சரஸ்வதித் தாயே!

Saturday, February 13, 2010

அடிக்கிற கை தான் அணைக்கும்

துஷ்ப்ரயோகம் செய்யப்பட்ட சிறுமியரே
அடிக்கிற கை தான் அணைக்கும்
அணைக்கிற கை தான் அடிக்கும்

தந்தையால் ஏசப் படும் இளம் கன்னியரே
அடிக்கிற கை தான் அணைக்கும்
அணைக்கிற கை தான் அடிக்கும்

குடும்ப அங்கத்தினரை இழக்கும் சிறுவர்களே
அடிக்கிற கை தான் அணைக்கும்
அணைக்கிற கை தான் அடிக்கும்

புயலில் மனை இழந்த இளம் வாலிபர்களே
அடிக்கிற கை தான் அணைக்கும்
அணைக்கிற கை தான் அடிக்கும்

வேலை கிடைக்காது அலைந்துக் களைப்புறும் மக்களே
அடிக்கிற கை தான் அணைக்கும்
அணைக்கிற கை தான் அடிக்கும்

கடவுள் நம்மை அடிக்கிறார், அணைக்கிறார் என்று
மட்டுமே நம் வாழ்க்கை வண்டியில் கியர் அமைத்துக்
கொண்டால் அமைதியை வடிகட்டி எடுத்து விடலாம் மகனே!

பச்சவந்தி

பிறந்த பொழுது நல்ல ஒரு
கண்காட்சிப் பொருள் ஆனேன்

வளர்ந்த பொழுது அன்னையின்
வளர்ப்புப் பிராணி ஆனேன்

விடலைப் பருவத்தில்
சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஆனேன்

வாழ்க்கைப் போராட்டத்தைக் கண்டு கலங்கிய பொழுது
சிதறி உடைந்த முட்டையின் கருவானேன்

மணவறையில் நல்ல ஒரு
கதாநாயகி ஆனேன்

மகளை ஈன்றெடுத்த போது அந்த
இயற்கை அன்னையாகவே ஆனேன்

இன்று கவி ஆன பொழுது
ஞானம் வளர்க்கும் நல்ல ஒரு பிரஜை ஆனேன்

நலிந்தோர் துன்பம் தீர்க்கும் தருணம்
அந்தக் கடவுளின் செல்லப் பிள்ளை ஆனேன்

சுருக்கமாகச் சொன்னால் நான் ஒரு
பச்சவந்தியாகவே பிறவி எடுத்துள்ளேன்

Thursday, February 11, 2010

பிரபஞ்சம்

சிலப் பத்தாண்டுகள் முன்னே ஓரிரவு
காரிருளின் பெருமை உரைத்தது

நேற்றிரவும் அதே காரிருளின்
பெருமை உரைத்தது

நாளை வரும் இரவோ காரிருளின்
பெருமையே உரைக்கப் போகிறது

இருள் என்பது பிரபஞ்சத்தின்
ஒரு வெளிப்பாடே

இருள் மட்டும் பிரபஞ்சத்தின் வெளிப்பாடல்ல
இவ்வுலகின் சிறுத் துகளும் பிரபஞ்சத்தின் வெளிப்பாடே

உற்சாகம்

பச்சைக் குழந்தை தாய்ப் பாலை அருந்துவதில்
கொள்ளும் உற்சாகம்

சிறு பிள்ளை பூனை குட்டியைக் காண்பதில்
கொள்ளும் உற்சாகம்

சிறுமி ஒருத்தி பட்டம் விடுவதில்
கொள்ளும் உற்சாகம்

இவை யாவும் வயது வந்தோர் கொள்ளும்
உற்சாகத்திடம் போட்டி கொண்டு

வெற்றியும் பெறுகிறது; நீயும் வாழ்வில்
வெற்றி பெற வேண்டினால் உன் சிறு வயது

உற்சாகத்தை உனக்குள் கொண்டு வந்து
சோர்வை வெகு தூரம் தள்ளி வைத்து

எளிய சந்தோசங்களை உனக்கு தினம்
மாலையாக அணிந்து கொள்

கலக்கம் ஏனோ?

விடலைப் பருவத்து மக்களைக் கண்டு
கலங்குதல் ஏனோ ?

ஞானம் என்ற அற்புத மருந்திருக்க
இன்னும் கலங்குதல் ஏனோ ?

ஓவென்று கொட்டும் அருவியைப்
பார்த்து ரசிப்பது போல

மக்களிடத்துக் காணும் புதுமையில்
இருந்து ஞானம் வளர்ப்போமாயின்

கலக்கமும் நம்மை அண்டக் கலங்கும்
மக்களிடையே நற் பழக்கமும் தொடரும்

தாய் தன் மகளுக்கு ஆற்றும் உதவி
மகளின் உலகத்தை தனதாக்கிக் கொள்ளலே

தந்தை தன் மகளுக்கு ஆற்றும் உதவி
மகளின் மூலம் தன்னறிவை உயர்த்திக் கொள்ளலே

விடலைப் பருவத்து மக்களைக் கண்டு
கலங்குதல் ஏனோ ?

ஞானம் என்ற அற்புத மருந்திருக்க
இன்னும் கலங்குதல் ஏனோ ?

Sunday, February 7, 2010

அன்றும் இன்றும்

ஐந்தாம் பருவத்திலே எனக்கு தினம்
சத்துணவு தந்த எங்கள் வீட்டுக் கோழியே

உன்னுடைய முட்டையல்லவா அன்று
என்னைப் பலப் படுத்தியது

மூன்று வருடம் எனக்கு பால் தந்து என்னைப்
பேணிக் காத்த எங்கள் வீட்டுப் பசுவே

உன்னுடைய பசும்பாலல்லவா இன்றும் என்னை
நோயிலிருந்து காத்துக் கொண்டிருக்கிறது

ஐந்தாம் பருவத்திலே கோழியை விரட்டி
எனக்கு வேடிக்கை காட்டிய எங்கள் வீட்டு சேவலே

இன்று எனக்கு நீ இல்லையே என ஆதங்கப்
படுகிறேன் தெரியுமா உனக்கு

எங்கள் வீட்டில் வண்ணக் களஞ்சியமாக
அணி வகுத்து ஓடித் திரிந்த கோழிக் குஞ்சுகளே

வண்ணங்களின் அடிப்படையை முதன் முதலில்
எனக்கு அறிமுகப் படுத்திய ஆசிரியர்கள் நீங்கள் தானே

ஐந்தாம் பருவத்திலே என்னைக் கவர்ந்த
எங்கள் வீட்டுக் கன்றுக் குட்டியே

உன்னைக் கண்கொட்டாமல்
பார்த்திருந்தன என் கண்கள் அன்று

உலகில் பெயர் போன இந்த அமெரிக்காவில்
உன் சகோதர சகோதரிகளைத் தினம்

காணும் பாக்கியம் எனக்கு இல்லையே
என்று ஏங்குகிறேன் இன்று

இன்று உங்களைப் போன்ற நண்பர்களைத் தேடி
விலங்குகள் பூங்கா செல்லும் என்னுடைய மாயச் செயலை

உங்களுக்கே அர்ப்பணித்து கம்ப்யூட்டர் மற்றும்
கத்தை கத்தை யான டாலர் நோட்டுக்களும்

நீங்கள் தரும் இன்பத்திற்கு நிகராகாது
என்று தம்பட்டம் அடித்து உங்களைக் கெளரவிக்கிறேன்

Wednesday, February 3, 2010

அழகு

மனதிற்கு அழகு தெளிவு
முகத்திற்கு அழகு புன்சிரிப்பு
மூளைக்கு அழகு நற்சிந்தனை

கவிக்கு அழகு நல்ல கருத்து
குணத்திற்கு அழகு பெருந்தன்மை
கைகளுக்கு அழகு தானம்

உடலுக்கு அழகு உடற்பயிற்சி
உயிருக்கு அழகு பக்தி
உணர்ச்சிக்கு அழகு அமைதி

வாய்க்கு அழகு மௌனம்
வாழ்க்கைக்கு அழகு ஞானம்
விரலுக்கு அழகு வீணை

நகத்திற்கு அழகு சுத்தம்
நெஞ்சிற்கு அழகு குழந்தைத் தனம்
நெற்றிக்கு அழகு தியானம்

மன்னித்துப் பார்

உனக்கு யார் என்ன தீங்கு செய்திடினும்
மன்னித்துப் பார்

தீங்கு வந்த நிமிடமே சற்றும் தாமதிக்காமல்
மன்னித்துப் பார்

மன்னிப்பது உன்னுடைய இயல்பு அல்லாதது போல்
தோன்றுவது ஒரு மாயமே

உன்னை நீ தோண்டி எடுத்தால் மன்னிப்பதில்
உனக்கிருக்கும் திறமை துள்ளி வரும்

தோழா இணையத்தைத் தோண்டுவது போலவே
உன்னையும் சிறிது தோண்டிப் பார்

உனக்கு யார் என்ன தீங்கு செய்திடினும்
மன்னித்துப் பார்

தீங்கு வந்த நிமிடமே சற்றும் தாமதிக்காமல்
மன்னித்துப் பார்

Monday, January 25, 2010

எந்தன் பரம்பொருளே

அன்னைக்குள் உன்னைக் காண
அருளியதற்கு நன்றி உனக்கு

அற்ப மனதை உடையவனிடமும்
உன்னைக் காண அருளியதற்கு நன்றி உனக்கு

தந்தைக்குள் உன்னைக் காண
அருளியதற்கு நன்றி உனக்கு

தள்ளாடித் தவித்து வரும் உள்ளங்களில்
உன்னைக் காண அருளியதற்கு நன்றி உனக்கு

கணவருள் உன்னைக் காண
அருளியதற்கு நன்றி உனக்கு

கடும் கவலைக்குள் வாழும் நெஞ்சத்தில்
உன்னைக் காண அருளியதற்கு நன்றி உனக்கு

மக்கட் செல்வத்துள் உன்னைக் காண
அருளியதற்கு நன்றி உனக்கு

என்றும் கொடுப்பவனுமாய், எடுப்பவனுமாய்
உன்னைக் காண அருளியதற்கு நன்றி உனக்கு

கணவர் சொல்லும் செய்தி

நீ கேட்டதை எல்லாம் கொடுத்து மகிழ்ந்திடவே
நான் இங்கு பிறவி எடுத்தது

நான் கொடுப்பதைத் தட்டிக் கொண்டு செல்லும்
நீ அன்பும் பரிவும் பொங்கி வழிய

என்னைப் பாங்குடன்
எவ்வாறு கவனித்துக் கொள்கிறாய்

என்று நோக்கி மகிழ்ந்திடவே நான்
இங்கு பிறவி எடுத்தது

Sunday, January 24, 2010

என்னுடைய கடவுள்

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல..
நீ இல்லாமல் நானும் நானல்ல..

இங்கு நீ ஒரு பாதி, நான் ஒரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி

காலங்கள் மாறும், காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல..
நீ இல்லாமல் நானும் நானல்ல.

-கடவுளை நினைத்து பாடும்
மீனா

Friday, January 22, 2010

மோட்சம்

உன்னைத் தழுவியபோது விண்ணுக்கே சென்றேன்
விண்ணுக்கு சென்ற நான் அங்கு விண்மீனைத் தேடினேன்

தேடிய விண்மீன்கள் என்னை வாழ்த்திப் பாட
ஆகாசத்திலேயே உன்னிடம் கலந்தேன்

ஆகாசத்தின் வாயிலிருந்து மழையைப் பொழிந்தேன்
மழையைப் பொழிந்ததாலே மோட்சம் அடைந்தேன்

மோட்சத்தில் இருந்து விடைபெற்ற நான் உன்னைத்
தொடர்ந்து நோக்கியே மோட்சத்தை மீண்டும் தொடர்ந்தேன்

-அப்பர், திரு ஞான சம்பந்தர் சார்பாக
கடவுளை நினைத்து பாடும்
மீனா

Thursday, January 21, 2010

ஐட்டி அம்மா

அம்மா அம்மா ஐட்டி ஆபீஸ் போகாதே
போவேன் போவேன்னு அடம் பண்ணாதே

நைட்டு நைட்டு கண் முழிக்காதே
முழிப்பேன் முழிப்பேன்னு அடம் பண்ணாதே

வாலிபத்தை வேஸ்ட் பண்ணாதே
பொறு பொறு என்று அடம் பண்ணாதே

கிச்சன் அடுப்பு மறக்காதே
சாப்பாட்டுக்கடை என்று அடம் பண்ணாதே

பண்றதெல்லாம் பண்ணிட்டு பண்பாட்டை
மறந்துட்டேன் என்று புலம்பாதே


முன்னேற்றம்

இருபதிலே ஆட்டம் போட்டோம்
அதுக்கென்ன இப்போ?

முப்பதின் மூர்க்கத்தை மறந்துட்டியே
அதுக்கென்ன இப்போ?

நாற்பதுலே நடுச் சாமம் தூங்குறியே
அதுக்கென்ன இப்போ?

ஐம்பதுலே டீச் பண்ணு
அதுக்கென்ன இப்போ

சாகும் வரை மறக்காதே
எதனையும் அப்போ

-ஒரு ஆணின் சார்பாக
மீனா

Wednesday, January 20, 2010

மோட்சம்

உன்னைத் தழுவியபோது விண்ணுக்கே சென்றேன்
விண்ணுக்கு சென்ற நான் அங்கு விண்மீனைத் தேடினேன்

தேடிய விண்மீன்கள் என்னை வாழ்த்திப் பாட
ஆகாசத்திலேயே உன்னிடம் கலந்தேன்

ஆகாசத்தின் வாயிலிருந்து மழையைப் பொழிந்தேன்
மழையைப் பொழிந்ததாலே மோட்சம் அடைந்தேன்

மோட்சத்தில் இருந்து விடைபெற்ற நான் உன்னைத்
தொடர்ந்து நோக்கியே மோட்சத்தை மீண்டும் தொடர்ந்தேன்

ஒரு ஆணின் சார்பாக
மீனா

உயர் நிலைப் பள்ளி

சூரியனின் சக்தியை விழுங்குமாறு அமைந்துள்ளது
நிறுத்தப்பட்ட கார்களின் மேலே உள்ள கூரை

சிலப் பெற்றோர்கள் இன்னும் உறங்கிக் கொண்டிருக்க
சூரியன் உதிக்கும் முன்னரே மந்தை மந்தையாக மாணவ மணிகள்

பள்ளிக்குள் நுழையும் காட்சி வியப்பூட்டவேச் செய்கிறது
மாலை நேரமோ பதினெட்டு வயது மாணவ மாணவிகள்

அருகருகே நீச்சல் செய்யும் காட்சி
கண்ணுக்கு விருந்தளிக்கிறது

நம் பண்பாட்டில் நம் மாணவ வர்க்கம்
அனுபவிக்காத புதுமைகளை நினைத்து

என் மனம் சற்று அலை பாய்கிறது
என்னே இந்தப் பள்ளியின் கண்காட்சித் தோற்றம்

கர்ப்பம்

நம்மில் பலருக்கு நல்லறிவும் பர ஞானமும்
கர்பத்திலேயே உறைந்து கிடக்கின்றது

சிலருக்கு இருபதாண்டுகள் கர்ப்பம்
பலருக்கு முப்பதாண்டுகள் கர்ப்பம்

இன்னும் சிலருக்கோ நாற்பதாண்டுகள் கர்ப்பம்
உங்களுக்கு எத்தனை ஆண்டு கர்ப்பமாய் இருந்தாலும்

அதைப் பிரசவிக்க ஆவலுடன் காத்து
இருக்கும் உங்கள் அன்புத் துணை

மீனா

Tuesday, January 19, 2010

மாயத்தை வெல்லும் அன்பு

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி பாலிசி
போன்ற விஷயத்தைப் பால்ய வயதில்

கேட்டால் பலருக்கு அது எடுபடாமல் இருப்பது
என்ன மாயமோ?

அற்புதமான விஷயங்களை அவர் அவர் அறிந்து கொள்ளத்
தேவையான கால அளவை நிர்ணயிப்பது அந்த மாயக் கண்ணனோ?

மாயத்தை மாற்றி வைக்க நம்மால் இயலுமோ?
முயன்றால் முடியும் என்பதே நம் கணிப்பு

அன்புப் பார்வையே அந்த மாயத்தையும் வெல்லும்
அன்புப் பேச்சே அந்த மாயத்தையும் கொல்லும்

உன் அன்பை வெள்ளம் எனப் பெற்றவர்கள்
விரைவில் அற்புதங்கள் அறிந்திடுவர்

அதனால் இன்று தூங்கி நாளை எழுந்த பின்
அன்பை உலகிற்கு அள்ளிக் கொடுக்கவே முனைந்திடு

மீனா

போஹி கொண்டாடும் சிலர்

வீட்டில் உள்ளப் பழைய பண்டங்களை
தூக்கி எறிவதில் அத்தனை முனைப்பு கொள்வதோடு

மற்றவர்களால் தனக்குத் தீங்கு போன்ற எண்ணங்களை
அறவேத் தூக்கி எறிந்தனர் சிலர்

தமக்குள் ஒளிந்திருந்த சுய இரக்கம் மற்றும் அவநம்பிக்கை
அவற்றைப் பந்தை எறிவது போல் எறிந்தனர் பலர்

கவலை, கோபம் இவை இரண்டையும்
கட்டுக்குள் வைத்தனர் சிலர்

அந்த சிலராகவோ இல்லை பலராகவோ
நாமும் ஏன் இருக்கக் கூடாது?

மீனா

அன்பு

உலகில் அன்பு என்ற அற்புத விளக்கை
சற்று மறந்தால் துன்பம் தானே வரும்

அன்றாட வேலைப் பளுவில் நாம் அன்பின்
ஆழத்தை மறக்கிறோம் எனத் தோன்றுகிறது

உலகில் தாயன்புக்கு நிகர் வேறில்லை
என்று சொன்னால் மிகையாகாது

இருப்பினும் எதுவும் எப்பொழுதும்
பார்ப்பவர் கண்ணில் தான் உள்ளது

எந்த மனதில் பாசம் உண்டோ
அந்த மனமே அம்மா அம்மா

என்ற பாடலில் கூறுவதை சற்று
உன்னிப்பாக கவனிப்போம்

நம்மைச் சுற்றியுள்ள நல்லோர் நம்மிடம் காட்டும்
அன்பையும் தாயன்புக்கு நிகராகக் காணும்

மனப் பக்குவத்தையும் ஆண்டவன் நமக்கு
அருள்வாராக என்றே வேண்டுகிறேன்

- உலக மக்களுக்காகப் பிரார்த்தித்து வரும் உங்கள் அன்புத் தோழி
மீனா

வசந்தம்

எனக்கு என்னுடைய கணவன்
நிஜமான வசந்தம்

பெண்ணினத்தை பொன் என மதிக்கும்
ஆடவர் பலரும் ஒருவகையில் வசந்தம்

நோய் கண்ட மங்கை ஒருவளுக்கு
வைத்தியம் பார்த்த ஆடவன் ஒருவகையில் வசந்தம்

எனக்கு என்னுடைய கணவன்
நிஜமான வசந்தம்

மேடையில் இனிமையாக பாடும்
குணமுள்ள கல்லூரி சகனும் ஒருவகையில் வசந்தம்

சோர்ந்து போன நங்கை ஒருவளுக்கு
உற்சாகம் ஊட்டும் ஆடவன் ஒருவகையில் வசந்தம்

எனக்கு என்னுடைய கணவன்
நிஜமான வசந்தம்

எப்பொழுதும் இனிப்பாகவே பேசும்
மதிப்பிற்குரிய ஆசிரியரும் ஒருவகையில் வசந்தம்

அலை போன்ற வீட்டுப் பொறுப்பில் தன் இன்பம் மறந்த
இளம் தாய்க்கு நல்ல ஒரு உறவினனும் ஒருவகையில் வசந்தம்

எனக்கு என்னுடைய கணவன்
நிஜமான வசந்தம்

நல்ல எண்ணம் மட்டுமே தம் உயிராகக் கொண்ட
ஆடவர்கள் அனைத்து பெண்டிருக்கும் ஒருவகையில் வசந்தம்

சிரிக்க மறந்த அக்காளைத் தன் முயற்சியால்
சிரிக்க வைக்க முனையும் தமையனும் ஒருவகையில் வசந்தம்

எனக்கு என்னுடைய கணவன்
நிஜமான வசந்தம்

வசந்தமான ஆடவர்களும், ஆடவர்களான வசந்தமும்
எமக்கு இயற்கை தந்த வரம் அல்லவா?

- ஒரு நல்ல இதயம் கொண்ட பெண்ணின் சார்பாக
- மீனா