Friday, December 24, 2010

தீபாவளி

ஐப்பசி மாதம் பிறப்பதற்கு
ஐந்து வாரங்கள் முன்னே

பட்டணம் சென்று
பிள்ளையாரை தரிசித்து
பின்னர் பல கடைகள்
ஏறி இறங்கி பல
தங்கமான துணி வகைகளை
ஆனந்தத்துடன் பையில் நிரப்பி

இருட்டை ஜெகஜோதியாக்கி வைத்த
அந்த வண்ண பல்புகளை ரசித்துக்
கொண்டே அடுத்த வீதி சென்று
தையலுக்கு கொடுத்து
ஆரம்பித்த எங்கள் தீபாவளிக்
கொண்டாட்டம்

ஐப்பசி இரண்டாம் வாரம் அன்னையின்
கைப்பக்குவம் என்னை மூழ்கடிக்கும் வாரம்.
ஒன்று, இரண்டு என்ற கணக்கில்லாமல்
மைசூர் பாகும் , அதிரசமும் ரசித்து ரசித்து
சுவைத்து சுவைத்து சாப்பிட்டக்
கொண்டாட்டம்

தீபாவளிக்கு ஐந்து நாட்கள் முன்னே
வரும் பேரதிசயக் கொண்டாட்டம்.
சித்தப்பனோடு பட்டாசு கடை சென்று
பட்டியலிட்ட பட்டாசு அத்தனையும்
பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்து
ஆனந்தக் கண்ணீர் விடுத்து

தீபாவளிக்கு முந்தைய நாள் வரைப்
பொறுக்க முடியாமல்
நாலு நாள் முன்னமே ஒன்றிரு வெடி வெடித்து
ஆசையை நிறைவேற்றிக் கொண்டாடியக்
கொண்டாட்டம்

முந்தின நாள் இரவு, மத்தாப்புக்கள் வானம் வரை
புகையைக் கிளப்ப புஷ்வானம் கண்ணை விழுங்கிட
சங்குச் சக்கரம் காலில் ஏறி விடாமல் ஓடி ஒளிந்து கொள்ள
பரவசமடைந்த நிலையில் கம்பி மத்தாப்பை
கையிலெடுத்துச் சுழற்றி ஒளி ஓவியம் வரைந்து
பின் தூங்கப் போக மனமில்லாமல்
மத்தாப்பு வேடிக்கையை முடித்துக் கொண்டு
உறங்கிய கொண்டாட்டம்

விடியற்காலை எழுந்து, அம்மா கொடுத்த எண்ணையை
அவசர அவசரமாக உபயோகித்து மனம் முழுவதும்
பட்டாசை நினைத்துக் கொண்டே ஸ்நானம் செய்து
புதுச் சட்டையை மன மகிழ்வோடு அணிந்து
முதல் பட்டாசு நானா நீயா என்று
போட்டியிட்டுக் கொண்டு பெருமிதம் அடைந்து
காலைப் பட்டாசாக நீண்ட சரம் ஒன்றை அதிரடிக்க வைத்து
சில சமயம் காதை மூடிக் கொண்டாடிய
கொண்டாட்டம்

இருளில் அக்கம் பக்கத்து கணேஷ், முருகன் சிவா
என்ற அண்ணன் தம்பிகளோடு ரவி சந்திரன் என்ற
வேறொரு வீட்டு செல்வங்களோடு
புங்க மரத்தடியிலிருந்து
தெரு விளக்கு கம்பம் வரை கட்டிய நூலில்
ரயில் மத்தாப்பு விட்டு குதூகலித்த
கொண்டாட்டம்

பிறகு, அடடா, மணி ஆறு தானே ஆயிருக்கு,
மத்தியானம் ஆனது போலல்லவா இருக்கு
என்று உள்ளுக்குள்ளும் சத்தமாகவும் வியந்து,
பிறகு அடுத்த தவணை பலகாரத்தை உண்டு
ஒரு இட்லி மட்டுமே சாப்பிட்டு
காலைச் சிற்றுண்டியை நிறைவு செய்து மகிழ்ந்த
கொண்டாட்டம்

வயது எம்பதானாலும் மனதை விட்டு
துளி கூட அகலாது போலிருக்கே
அது தான் எங்கள் சிறந்த தீபாவளிக் கொண்டாட்டம்

இதற்கெல்லாம் பின் இருந்து அருளியது
அம்மை அப்பன் தானே என்று நினைக்கும் தருணத்தில்
மனம் நெகிழ்கிறது, உருகுகிறது.
நம் பிள்ளைக்கும் இதற்கொப்ப அனுபவங்களை
அள்ளித் தர வேண்டும் என்ற ஆவலும் உதிக்கிறது

3 comments:

Philosophy Prabhakaran said...

கவிதை கலக்கல்... ஆனால் இது தீபாவளி நேரத்தில் எழுதியிருக்க வேண்டிய கவிதை ஆயிற்றே...

Meena said...

என்னங்க பண்ணறது
எழுதும் வேகம் இப்போ தான் எனக்கு கிடைச்சது
கவிதை எழுதி என்னை நானே அறிந்து கொள்ளும் நேரம் இது எனக்கு என்றுமே தீபாவளியானது !

சௌந்தர் said...

தீபாவளி பற்றி நல்ல கவிதை