Saturday, December 25, 2010

கிராமத்தில்

அப்பாவின் சிறிய கிராமம்
நான் விரும்பிய, விரும்பும்,
விரும்பப் போகும் கிராமம்

லாந்தர் விளக்கின் மங்கலான ஒளி
கூடத்தில் சாய்த்து வைக்கப் பட்ட ஏணி

சன்னல் இல்லாத சமையல் அறை
சமையல் அறைக்குள் குளித்தல்

அதிக ருசியுள்ள பருப்பு சாதம்
அதிக ருசியுள்ள செக்கு எண்ணெய்

சுவையோ சுவை கொண்ட சேவு
ஊரில் இறங்கியதும் குடித்த சோடா

கதவோரம் விளையாடிய தாயம்
கல் மேடையில் ஆடிய சதுரங்கம்

வீட்டு மாடத்தில் ஓடும் ஆட்டுக் குட்டிகள்
தாத்தாவிற்கு பால் தரும் வளர்ந்த ஆடு

நாங்கள் துணி துவைத்த
கம்மாய் கரைப் படிகள்

மீன் பிடிக்க உதவிய கம்மாய்கள்
எருமை குளித்த கம்மாய்கள்

ஆண்கள் குளித்த கிணற்றடி
ஆள் அரவமற்ற காடு

காட்டில் பச்சை மிளகாய் செடிகள்
கருவேல முள் மரங்கள்

தாண்டக் கூடிய கூரைகள்
தானியக் குவியல்கள்

கொட்டகையில் கூடையில் தூங்கும் கோழிகள்
அணி வகுக்கும் கோழிக் குஞ்சுகள்

திருவிழாக் காலத்தில் கரகாட்டம்
பொங்கல் காலத்தில் கலை நிகழ்ச்சி

கும்பாபிசேகமன்று கோலாட்டம்
கண்ணைக் கசக்க வைத்த அடுப்புப் புகை

பால் தந்த மாட்டுக் கொட்டகை
பல இடத்தில் வைக்கோற்போர்

மாவு இடித்துத் தரும் அத்தை
மாவாட்டும் பாட்டி

அடுத்த வீட்டு தோழியர்
அடுத்த வீதி பெரிய தாத்தா

இவையெல்லாம் என் மனதிற்குள்
அட்டையாய் ஒட்டிக் கொண்டது
அவற்றை மீண்டும் அசை போட வாய்ப்பு
கிடைத்தது அமெரிக்காவில்

ஐம்பது வருடமான எங்கள் வீட்டில்
நான் வேண்டுமென்றே லாந்தர் விளக்கு போல
பல்பை டிம் செய்கிறேன் அவ்வப்போது
வேண்டுமென்றே வைக்கோற்போர்
தேடி அலைகிறேன் அவ்வப்போது

மனமிருந்தால் பட்டணத்தையும்
கிராமம் ஆக்கலாம்

3 comments:

தினேஷ்குமார் said...

கவிதை நல்லாருக்கு தோழி

இன்னும் ஆழம் தேவை எத்தனை கவிதை எழுதுகிறீர்கள் என்று கணக்கில்லை சிந்திக்க வைக்கவேண்டும் வரிகள் தோழி தங்களுக்கு திறமை இருக்கிறது முயற்சி செய்யுங்கள் மென்மேலும் சிறந்த கவி படைக்க வாழ்த்துக்கள்

Unknown said...

உங்களுடைய ரசனை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. (என்னைப்போல்)

சென்னை பித்தன் said...

//மனமிருந்தால் பட்டணத்தையும்
கிராமம் ஆக்கலாம் //
சும்மா ஒரு தற்காலிக ஆறுதலுக் குத்தான் . அந்த மகிழ்ச்சியை உருவாக்க முடியுமா!
நன்று.