Thursday, February 25, 2010

சீர்

பிறந்த பொழுது தொப்புள் கொடியே நம்மை இணைத்தது
வளர்ந்த பொழுது தாங்கள் ஆக்கி வைத்த சோறு நம்மை இணைத்தது

விடுதிக்கு சென்ற பொழுது ஆதரவான வார்த்தைகளைத்
தூது கொண்டு வந்த அஞ்சலே நம்மை இணைத்தது

என்னுடையத் திருமண நாளில் நம்மிருவரின் சந்தோஷமே
நம்மை இணைத்தது

நான் தாயான பொழுது நம்மிருவரின் பொறுப்புகளே
நம்மை இணைத்தது

பதினாலாயிரம் கிலோ மீட்டர்-க்கு அப்பால் இன்று நம்மை
இணைத்திருப்பது என்ன தெரியுமா?

காலை எழுந்தவுடன் பக்திப் பாடல்களை கேட்டு மகிழும்
நம்முடைய பழக்கமும்

எங்கும் எதிலும் இறைவனைக் காணும்
நம்முடைய நோக்கும்

பொங்கல் தினத்தன்று மாக்கோலம் போட்டு
மகிழும் நம்முடையப் பண்பாடும்

மகளுக்காகத் தான் தன் சுகங்களைத் தள்ளி
வைக்கும் அந்த அற்புதக் குணமும்

அம்மா என் திருமண நாளில் தாங்கள் எனக்குச் சீராகத்
தந்த பண்ட பாத்திரங்களை விட, தங்க நகைகளை விட

தங்களுடைய சிறந்த குணங்களை வெளிப்படுத்தும்
முன்-உதாரணமான வாழ்க்கையே நான் விரும்பி

எடுத்துக் கொள்ளும் சிறந்த சீர் ஆயிற்றே! அவற்றையே
நான் தினம் அணிந்து கொள்ள விரும்பினேனே,
விரும்புகிறேனே , விரும்புவேனே!

Wednesday, February 24, 2010

நிம்மதிக் கடல்

சுற்றத்தாரின் அன்பும் ஆதரவும் எந்தன் தைரியம்
என்னுடைய ஒழுக்கமும் நேர்மையும் மற்றொரு தைரியம்

நற்ச் சிந்தனையும் சேவைச் செயலும் எந்தன் மந்திரம்
கடவுள் பக்தியும் ஞானமும் மற்றொரு மந்திரம்

உலகத்தில் தந்திரங்கள் மிகுந்து இருந்தாலும்
புயற்காற்று வீசினாலும் எனக்குள் உள்ள தைரியமும்

என்னோடு ஒன்றி விட்ட சில மந்திரங்களும்
என்னை நிம்மதிக் கடலில் ஆழ்த்துகின்றன

Tuesday, February 16, 2010

சரஸ்வதித் தாயே!

அனாதைகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளத்
தேவையான சொற்களை
அவர் தம் நாவிற்கு அருள்க

மன நோயாளிகள் தங்களைக் காத்துக் கொள்ளத்
தேவையான சொற்களை
அவர் தம் நாவிற்கு அருள்க

துஷ்ப்ரயோகம் செய்யப்பட்ட குழந்தைகள் தங்கள்
நிலையைப் பிறர் உணரச் செய்ய தேவையான
சொற்களை அவர் தம் நாவிற்கு அருள்க

ஆசையுடன் பெற்றெடுத்த தம் மக்களிடம்
என்றும் இனிமையாகப் பேசிடவே
பெற்றோர்களுக்கு அருள்க

ஞானத்தின் பெருமையை அனைவருக்கும்
விளக்கிக் கூறிடவே
அனைவருக்கும் அருள்க

மழலையில் உள்ளது போல என்றும்
கள்ளம் கபடம் இல்லாத வார்த்தைகளையே
அனைவரின் நாவிலும் அருள்க

இத்தனையும் அருளுவதற்கு இன்று
உனக்கும் இயலவில்லை எனின்
விரைவில் என்றாவது ஒரு நாள்

என் வேண்டுதலை நிறைவேற்றி வைப்பாய்
என்றே நம்புகிறேன்
என் அருமை சரஸ்வதித் தாயே!

Saturday, February 13, 2010

அடிக்கிற கை தான் அணைக்கும்

துஷ்ப்ரயோகம் செய்யப்பட்ட சிறுமியரே
அடிக்கிற கை தான் அணைக்கும்
அணைக்கிற கை தான் அடிக்கும்

தந்தையால் ஏசப் படும் இளம் கன்னியரே
அடிக்கிற கை தான் அணைக்கும்
அணைக்கிற கை தான் அடிக்கும்

குடும்ப அங்கத்தினரை இழக்கும் சிறுவர்களே
அடிக்கிற கை தான் அணைக்கும்
அணைக்கிற கை தான் அடிக்கும்

புயலில் மனை இழந்த இளம் வாலிபர்களே
அடிக்கிற கை தான் அணைக்கும்
அணைக்கிற கை தான் அடிக்கும்

வேலை கிடைக்காது அலைந்துக் களைப்புறும் மக்களே
அடிக்கிற கை தான் அணைக்கும்
அணைக்கிற கை தான் அடிக்கும்

கடவுள் நம்மை அடிக்கிறார், அணைக்கிறார் என்று
மட்டுமே நம் வாழ்க்கை வண்டியில் கியர் அமைத்துக்
கொண்டால் அமைதியை வடிகட்டி எடுத்து விடலாம் மகனே!

பச்சவந்தி

பிறந்த பொழுது நல்ல ஒரு
கண்காட்சிப் பொருள் ஆனேன்

வளர்ந்த பொழுது அன்னையின்
வளர்ப்புப் பிராணி ஆனேன்

விடலைப் பருவத்தில்
சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஆனேன்

வாழ்க்கைப் போராட்டத்தைக் கண்டு கலங்கிய பொழுது
சிதறி உடைந்த முட்டையின் கருவானேன்

மணவறையில் நல்ல ஒரு
கதாநாயகி ஆனேன்

மகளை ஈன்றெடுத்த போது அந்த
இயற்கை அன்னையாகவே ஆனேன்

இன்று கவி ஆன பொழுது
ஞானம் வளர்க்கும் நல்ல ஒரு பிரஜை ஆனேன்

நலிந்தோர் துன்பம் தீர்க்கும் தருணம்
அந்தக் கடவுளின் செல்லப் பிள்ளை ஆனேன்

சுருக்கமாகச் சொன்னால் நான் ஒரு
பச்சவந்தியாகவே பிறவி எடுத்துள்ளேன்

Thursday, February 11, 2010

பிரபஞ்சம்

சிலப் பத்தாண்டுகள் முன்னே ஓரிரவு
காரிருளின் பெருமை உரைத்தது

நேற்றிரவும் அதே காரிருளின்
பெருமை உரைத்தது

நாளை வரும் இரவோ காரிருளின்
பெருமையே உரைக்கப் போகிறது

இருள் என்பது பிரபஞ்சத்தின்
ஒரு வெளிப்பாடே

இருள் மட்டும் பிரபஞ்சத்தின் வெளிப்பாடல்ல
இவ்வுலகின் சிறுத் துகளும் பிரபஞ்சத்தின் வெளிப்பாடே

உற்சாகம்

பச்சைக் குழந்தை தாய்ப் பாலை அருந்துவதில்
கொள்ளும் உற்சாகம்

சிறு பிள்ளை பூனை குட்டியைக் காண்பதில்
கொள்ளும் உற்சாகம்

சிறுமி ஒருத்தி பட்டம் விடுவதில்
கொள்ளும் உற்சாகம்

இவை யாவும் வயது வந்தோர் கொள்ளும்
உற்சாகத்திடம் போட்டி கொண்டு

வெற்றியும் பெறுகிறது; நீயும் வாழ்வில்
வெற்றி பெற வேண்டினால் உன் சிறு வயது

உற்சாகத்தை உனக்குள் கொண்டு வந்து
சோர்வை வெகு தூரம் தள்ளி வைத்து

எளிய சந்தோசங்களை உனக்கு தினம்
மாலையாக அணிந்து கொள்

கலக்கம் ஏனோ?

விடலைப் பருவத்து மக்களைக் கண்டு
கலங்குதல் ஏனோ ?

ஞானம் என்ற அற்புத மருந்திருக்க
இன்னும் கலங்குதல் ஏனோ ?

ஓவென்று கொட்டும் அருவியைப்
பார்த்து ரசிப்பது போல

மக்களிடத்துக் காணும் புதுமையில்
இருந்து ஞானம் வளர்ப்போமாயின்

கலக்கமும் நம்மை அண்டக் கலங்கும்
மக்களிடையே நற் பழக்கமும் தொடரும்

தாய் தன் மகளுக்கு ஆற்றும் உதவி
மகளின் உலகத்தை தனதாக்கிக் கொள்ளலே

தந்தை தன் மகளுக்கு ஆற்றும் உதவி
மகளின் மூலம் தன்னறிவை உயர்த்திக் கொள்ளலே

விடலைப் பருவத்து மக்களைக் கண்டு
கலங்குதல் ஏனோ ?

ஞானம் என்ற அற்புத மருந்திருக்க
இன்னும் கலங்குதல் ஏனோ ?

Sunday, February 7, 2010

அன்றும் இன்றும்

ஐந்தாம் பருவத்திலே எனக்கு தினம்
சத்துணவு தந்த எங்கள் வீட்டுக் கோழியே

உன்னுடைய முட்டையல்லவா அன்று
என்னைப் பலப் படுத்தியது

மூன்று வருடம் எனக்கு பால் தந்து என்னைப்
பேணிக் காத்த எங்கள் வீட்டுப் பசுவே

உன்னுடைய பசும்பாலல்லவா இன்றும் என்னை
நோயிலிருந்து காத்துக் கொண்டிருக்கிறது

ஐந்தாம் பருவத்திலே கோழியை விரட்டி
எனக்கு வேடிக்கை காட்டிய எங்கள் வீட்டு சேவலே

இன்று எனக்கு நீ இல்லையே என ஆதங்கப்
படுகிறேன் தெரியுமா உனக்கு

எங்கள் வீட்டில் வண்ணக் களஞ்சியமாக
அணி வகுத்து ஓடித் திரிந்த கோழிக் குஞ்சுகளே

வண்ணங்களின் அடிப்படையை முதன் முதலில்
எனக்கு அறிமுகப் படுத்திய ஆசிரியர்கள் நீங்கள் தானே

ஐந்தாம் பருவத்திலே என்னைக் கவர்ந்த
எங்கள் வீட்டுக் கன்றுக் குட்டியே

உன்னைக் கண்கொட்டாமல்
பார்த்திருந்தன என் கண்கள் அன்று

உலகில் பெயர் போன இந்த அமெரிக்காவில்
உன் சகோதர சகோதரிகளைத் தினம்

காணும் பாக்கியம் எனக்கு இல்லையே
என்று ஏங்குகிறேன் இன்று

இன்று உங்களைப் போன்ற நண்பர்களைத் தேடி
விலங்குகள் பூங்கா செல்லும் என்னுடைய மாயச் செயலை

உங்களுக்கே அர்ப்பணித்து கம்ப்யூட்டர் மற்றும்
கத்தை கத்தை யான டாலர் நோட்டுக்களும்

நீங்கள் தரும் இன்பத்திற்கு நிகராகாது
என்று தம்பட்டம் அடித்து உங்களைக் கெளரவிக்கிறேன்

Wednesday, February 3, 2010

அழகு

மனதிற்கு அழகு தெளிவு
முகத்திற்கு அழகு புன்சிரிப்பு
மூளைக்கு அழகு நற்சிந்தனை

கவிக்கு அழகு நல்ல கருத்து
குணத்திற்கு அழகு பெருந்தன்மை
கைகளுக்கு அழகு தானம்

உடலுக்கு அழகு உடற்பயிற்சி
உயிருக்கு அழகு பக்தி
உணர்ச்சிக்கு அழகு அமைதி

வாய்க்கு அழகு மௌனம்
வாழ்க்கைக்கு அழகு ஞானம்
விரலுக்கு அழகு வீணை

நகத்திற்கு அழகு சுத்தம்
நெஞ்சிற்கு அழகு குழந்தைத் தனம்
நெற்றிக்கு அழகு தியானம்

மன்னித்துப் பார்

உனக்கு யார் என்ன தீங்கு செய்திடினும்
மன்னித்துப் பார்

தீங்கு வந்த நிமிடமே சற்றும் தாமதிக்காமல்
மன்னித்துப் பார்

மன்னிப்பது உன்னுடைய இயல்பு அல்லாதது போல்
தோன்றுவது ஒரு மாயமே

உன்னை நீ தோண்டி எடுத்தால் மன்னிப்பதில்
உனக்கிருக்கும் திறமை துள்ளி வரும்

தோழா இணையத்தைத் தோண்டுவது போலவே
உன்னையும் சிறிது தோண்டிப் பார்

உனக்கு யார் என்ன தீங்கு செய்திடினும்
மன்னித்துப் பார்

தீங்கு வந்த நிமிடமே சற்றும் தாமதிக்காமல்
மன்னித்துப் பார்