Monday, November 21, 2011

அன்பும் கருணையும்

மயக்கமதை மறைந்திடச் செய்ய
கவலை தனை கணத்தில் கலைத்திட
சினமதை சிறு கடுகாய் சிதைத்திட
அன்பு கருணை முகர்ந்திடு

நற்செயல்  ஒன்று
அன்பு கருணை

நற்செயலுக்கு நன்றி நவில்தல்
அன்பு கருணை

பணிவிடை குறைந்திட்ட வேளை
பண்புடன் ஆடவன்
அன்பு கருணை

குடும்ப அமைதிக்கு தியாகம்
அன்பு கருணை

குற்றம் கண்டு பொங்காதிருப்பது
அன்பு கருணை

எவ்விடத்தும் அன்பு கருணை
நோக்கிய பின்

அகத்துள் உறையும்
அன்பு கருணை

Saturday, October 15, 2011

காலாய்க் குறைந்த காமம்

உறவினர் தெய்வம் ஆனபின்
நண்பர் உறவினர் ஆனபின்
உலக மக்கள் நண்பரானபின்

சோகம் சுகம் ஆனபின்
மோகம் முகம் ஆனபின்
அன்பு அகம் ஆனபின்
வேகம் வேதம் ஆனபின்

வாழும் உயிர்க்கு
காமம் காலாய்க் குறைந்தும்
குறை என்று குறை கூறத்
தயங்குவர்
குன்றில் உறைந்த குமரனும்
கூத்த பெருமாளும்

Tuesday, October 11, 2011

வருந்துவதற்கு இல்லை இடம்

மாறாதது
மனித உயிர் தோன்றி மறைவது
தாவரங்கள் பூமியை நிரப்புவது
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு
உயிர்கள் காட்டும் அன்பு
இறையருள்

மாறுவது
எவ்வளவு ? அவ்வளவும் அளக்க இயலும்?

மாறுவது இருப்பதனால் வருந்துவதற்கு இல்லை இடம்
மாறாததை அறிவதனால் வருந்துவதற்கு இல்லை இடம்

Sunday, October 9, 2011

மறைந்திருக்கும் அருள்

மறைந்திருக்கும் பொருள்
மறைந்திருக்கும் அருள்

கோவிலில் அர்ச்சனை சடங்கு
ஒருவர்க்கு இருவர்க்கு அல்ல

கோவிலுக்குள் எழும்பும் ஒலி
அனைத்து உயிர்கள் அமைதி பெற வேண்டுகோள்

கூடிய மக்கள் வாழ்த்தியபடி அமர்ந்திருக்க
வாடிய மக்களும் வல்லமை பெறவிருக்க

பிறவி நோயாளியும் நோயைப் பிரித்தெடுக்க
குடும்பம் பிரிந்துடைக்கப் பட்ட துயர் துடைக்கப் பட

மக்கள் மாறிக் கொண்டிருக்க,
சூழ்நிலை மாறிக் கொண்டிருக்க
மாறாதது

மறைந்திருக்கும் பொருள்
மறைந்திருக்கும் அருள்

Sunday, August 14, 2011

புன்னகை

புன்னகைக்குள்
காரணம் புதைந்திருக்கும்

புன்னகித்து புன்னகித்து
பரவசம் பகிர்ந்து பகிர்ந்து

புன்னகையின் பிற்பயனாய்
பெரும் புத்துணர்ச்சி
பெருக்கி பெருக்கி

புன்னகை படர்ந்த முகமாய்
பாசத்தை பொழிந்த முகமாய்

பலர் முன் திரிந்து திரிந்து
பலரை நெஞ்சுக்குள் ஈர்த்து ஈர்த்து

பலருக்காக பல நாட்கள்
வாழ்ந்து வாழ்ந்து

வாழ்க்கை வாழ்வது தனக்காக அல்ல
பலருக்காக என அறிந்து அறிந்து

நாட்களைத் தள்ளும் மானிடன்
அவனல்லவா உயர்ந்தவன்?

Saturday, July 23, 2011

மான் கண்ட சொர்க்கங்கள்

சிங்கக் குட்டியின் தொல்லை
மானிற்கு சுகம்

சிங்கக் குட்டியின் பரிசு
மானிற்கு வாரிசு

சிங்கக் குட்டிகள் அணி வகுத்து
மான்களைத் தம் வசப் படுத்தின

மான்களோ சிங்கக் குட்டிகளைத்
தேடித் தேடித் தம் வசப் படுத்தின

மான்களும் சிங்கக் குட்டிகளும்
உறவாடி மகிழ்ந்தன

Sunday, July 10, 2011

கணினிக் காளை

காளையாகப் பிறந்ததனால்
கால்கட்டு மட்டுமா போடுவான்

கணினியையும் கட்டிக் கொண்டு
ஆளுவான்

மனைவியிடம் உன் கை விட மாட்டேன்
என்று உறுதியிட்டு

மனைவியின் கையை விட
மவுசின் கையையே அதிகம் விரும்புவான்

இரவில் மனைவியிடம் மயங்கிய அவன்
பகலில் மானிடரிடம் மயங்குகிறான்

மனைவி இல்லாமல் ஒரு மாதம்
இருந்து விடுகிறான்

மானிடர் இல்லாமல் ஒரு வாரம்
கூட தாங்க மாட்டான்

ஹார்டு டிஸ்க் ஐ கழட்டிப் பார்ப்பான்
கீபோர்டில் உள்ள தூசு துடைப்பான்

கணினி இல்லாக் காளை முற்றும்
துறந்த காளையாய் ஆனான்

- கணினிக் காளையின் மனைவி

Saturday, July 9, 2011

அமைதி

கானம் பாடும் குயில் இருக்க
காந்தம் என கண் இருக்க
காட்சி எங்கும் இறைவன் இருக்க
கடுகு தெறிப்பது போன்ற கோபம்
கடுகளவும் இல்லையடி பெண்ணே!

மூளை மங்கிய போதும்
மும்மரமான கவலை வேண்டாம்
கவலை இல்லா காலமதை
கடனாய்த் தருவான்
கல்லாய் இருக்கும் இறைவன்

கடனைத் திருப்பித் தரும் வேளை
கவலை தீர்க்கும் மருந்தாவாய்
கற்றது கற்றபடி கற்பித்து விடுவாய்

கவலை தோய்ந்த வாழ்விருந்து
விடுபட்டு பறந்த பரம்பொருளின்
சின்னமாய் நீயிரு

கவலை தேக்கி வைத்த மனமும்
பரம்பொருளே! ஆட்டத்தின்
முதல் பாதி தேக்கி வைத்த கவலை
மறு பாதி தீர்த்து வைக்கும் மருந்து

இன்றே அமைதி உன்னிடம் இருக்கு
இருப்பதை இயல்பாய் கண்டு விடு
அமைதி கானம் என்றும் பாடு!

Saturday, June 18, 2011

அவன்

அவன் பார்வையில் ஓராயிரம்
கவிதைகள் எழுதினேன் காற்றில் நானே

அவன் உருவத்தில் ஓராயிரம் முறை
துள்ளினேன் நானே

அவன் உள்ளத்தில் ஓராயிரம் முறை
குடி புகுந்தேன் நானே

அவன் அன்பில் சர்க்கரையாய்
கரைந்தேன் நானே

அவனைச் சார்ந்து சார்ந்து வாழும் கணமெல்லாம்
பொன் என்று உரைத்தேன் நானே

அன்பே வெல்லும்

அறிவு சார்ந்த பெண்ணே
அகிலமும் அறிவைச் சார்ந்து இராது

அறிவால் உன்னை ஆளாதே
அன்பால் உன்னை ஆக்கிரமி

ஏன் எதற்கு கேள்வி எல்லாம்
வெறும் பாட சாலைக்கு மட்டும்

ஏன் என்ற கேள்விக்கு இடமில்லை
மனித உறவுகளில்

பாட சாலையில் உறவுகள் பாடம்
இல்லாமல் போனது

இன்று அகிலத்தையும்
ஆட்டி வைக்கிறது

பெண் படிக்காமல் இருப்பது நல்லதன்று
படித்தும் உறவுகள் பற்றி அறியாமல்
இருப்பது அதனினும் நல்லதன்று

Saturday, May 28, 2011

இந்தக் கணம் இன்பம்

இந்தக் கணம் இன்பம்
இன்பக் கணம் இக்கணம்

நேற்று இயலாத காரியம்
இயலுமே இக்கணம்

நேற்று புரியாத பாடம்
புரியுமே இக்கணம்

நேற்று அறிவு நலிவானால்
அவ்வாறாகுமோ இக்கணம்

நேற்று ஆசை குறைவானால்
அவ்வாறாகுமோ இக்கணம்

நேற்று விஷயங்கள் இன்று
இடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்

இக்கணமே மிகச் சிறந்த கணம்
அறிந்து கொள்ளவும்

Saturday, April 23, 2011

போராட்டங்கள்

வாழ்க்கைப் போராட்டங்கள் கண்டு
மிரளும் போது மனம் கனமாகிறது

தனிமையாகப் போராடிக் கொண்டிருக்கும் வேளை
மனம் கனத்திருக்கும் வேளை

போராட்டங்கள் மட்டுமே அனுபவித்த
மனம் விடுபட்டு சிரிக்கின்றது

உலகின் எல்லா இதயங்களுடன்
மனம் இணைந்து விடுகிறது

மௌன மொழியிலும்
மனம் சிறப்பைக் காணுகிறது

போராட்டங்கள் கண்ட மனம்
மௌனிக்கிறது தான்

போராடும் நண்பர்களே,
நீங்கள் மௌனித்து சாந்தம் அடைய
என் வாழ்த்து மடல் இக்கவிதை

Sunday, March 20, 2011

வைகறைப் பயணம்

வைகறைப் பொழுது காரிருள் சூழலுடன்
தொடங்கிய தனிமைப் பயணம்

நொடியில் விடிந்து விடும் போல் தென்பட்ட வானம்
கரு நீலமாகத் தோன்றிய மலைவாரம்

இனிய காலைப் பொழுது, புலர்ந்தும் புலராத
விடியற் காலைப் பொழுது

மலைப்பகுதியின் தொடக்கம்
நெஞ்சில் உற்சாகம்

வளைந்து நெளிந்து கோணிச் சென்ற
குறும் பாதை

தன்னந் தனியாக ரசித்துக் கொண்ட
இயற்கைக் காட்சி

தொடரவிருக்கும் காட்டுப் பயணம்
நினைக்கும் போதே
இனிக்கும் இனிமையான பயணம்

திடீரென்று விடிய, இறைவன் ஒளித்து
பின்னர் அளித்த இயற்கை வரம் போல்
தோணிற்று

இயற்கை சாம்ராஜ்யம் இதைப் போலவே ஒளிந்து
பின்னர் காலைப் பொழுதில் விருந்தாய் வருகிறது
ஒவ்வொரு தினமும்

அவ்வப்பொழுது ஆங்காங்கே மழைத் தூறல்
பறவைகளின் சங்கீதம்

மிகவும் குறுகிய பாதையில் அடர்ந்த உயர்ந்த
மரங்களுக்கு மத்தியில் தொடர்ந்த பயணம்

கண்கொள்ளாக் காட்சி,
ரசித்துச் சுவைத்த அனுபவம்

பயணத்தை முடிக்க நினைத்து
திருப்பு முனையாக சேற்றில் கார் இறங்க

தடம் தெரியாமல் கார் சக்கரங்கள்
சுழலுகிறது

அடி வயிற்றில் பயம் தொத்திக் கொள்கிறது
சில கணங்கள் கார் நம் கைவசம் இல்லை எனத் தெரிகிறது

எப்படியோ காரை நிறுத்த வழி கிடைத்தது
காரை கிளப்ப முடியவில்லை என்றால்

பல மைல்கள் நடந்து சென்று உதவி கேட்க வேண்டும்
என்று மனம் சொல்கிறது

நல்ல வேளை சேற்றிலிருந்து சாலைக்கு
வந்தது கார்

மீண்டும் சேற்றில் மாட்டித் தவிக்காமல் இருக்க
சேற்றுத் திருப்பு முனைகளை எல்லாம்
உங்கள் சகவாசம் இன்று எனக்கு வேண்டாம் என்று
சொல்லி விட்டு

பத்து மைல் தள்ளியுள்ள சாலைத் திருப்பு முனை
நோக்கி பயணம் செல்ல

மனதை மகிழ்வூட்டும் அடர்ந்த உயர்ந்த மரங்களுக்கு
நடுவே தொடர்ந்த பயணம்

ஒவ்வொரு வளைவிலும் மனம் குதூகலத்தில்
வளைகிறது.

காருக்குள் ஒலிக்கும் பழைய காலத்துப் பாடல்கள்
பாடல்கள் கூடவே நினைவுகள் பழைய காலத்து
நினைவுகள் தற்காலத்து நினைவுகள், நண்பர்
கூட்டங்களின் நினைவுகள், உல்லாசப் பயணிகள்
விடுதியின் பக்கம் கணவருடன் சென்று வந்த நினைவுகள்

திரும்பி வரும் வழியில் ஆலங்கட்டி மழையின் அடையாளமாக
காரின் முன் கண்ணாடியில் தெறித்து ஒலிகளிட்ட மழைத் துளிகள்
ஐஸ் கட்டிகள்

திடீரென்று எதிரே வந்த சில பல கார்கள்
மிகுந்த கவனத்துடன் தொடர்ந்த பயணம்

சூடிற்காக உபயோகித்த கார் சாதனத்தின்
மங்கிய ஒலி, பாடல்களின் ஒலி,
இவற்றை எல்லாம் தூக்கிச் செல்கிறது
கார் மேலே விழுந்த மழைத் துளிகள்
எழுப்பிய ஒலி

மலையில், மழையில் தனிப் பயணம்
செய்வது சற்று ஆபத்தாய் தோன்றிய போதும்
அற்புதமான அனுபவமாகவேத் தோன்றியது

வெகு தூரம் பின் தொடர்ந்து வந்த கார்
நகருக்குள் வந்த பின் திடீரென காணாமல் போனது

மனமும் இயற்கையின் ஆட்சிக்குள்ளிருந்து விடுபட்டு
அன்றைய நாளுக்கான வாடிக்கை செயல்களுக்கு
வணக்கம் தெரிவித்தது

மொத்தத்தில் மறக்க முடியாத அனுபவம்
வைகறைப் பயணம்

Friday, March 11, 2011

வைகறைப் பொழுது

காலையில் விரைவில் எழுந்திருக்க
மறக்கும் அன்பு மனங்களே

எழுந்திட்டால் பல உயிர்களை இன்னும்
மகிழ்ச்சியாய் வைத்துப் பார்க்கலாம்

நேரம் இல்லை என்றுத் தட்டிக்
கழிக்கும் கடமைகளை குறைத்துப் பார்க்கலாம்

பறக்கும் உலகில் உடல் நலத்தையும்
சற்று கவனித்துக் கொள்ளலாம்

புத்துணர்ச்சி தரும் வைகறைப்
பொழுது வாழ்வில் அதிசயங்கள்
நடத்தும் நாம் தூங்கி வீணடிக்காமல்
இருந்தால்

சாப்பிட மறந்தோர்

தவிப்பர் பலர் உண்ண உணவின்றி
தவிப்பர் சிலர் உணவிருந்தும் பசியின்றி

அளவாய்ச் சாப்பிடு என்றனர் சான்றோர்
சாப்பிட மறவாதே என ஏன் எவரும்
சொல்லிப் போகவில்லை

சாப்பிட மறந்தவரை நாளும் காண்கிறேன்
சாப்பிட பயந்தவரையும் நாளும் காண்கிறேன்

எடைக்குப் பயந்து சாப்பிட மறுக்கும்
வளர்ந்த மனிதர்கள்

அவசர உலகில் சாப்பிடத் தவறும்
வளரும் குழந்தைகள்

சாப்பிடாமல் வாழும் உயிர்களை
சாப்பிட வைத்து வாழ வை
நான் வணங்கும் தெய்வமே!

Monday, February 7, 2011

பூரண வாழ்க்கை

ஊரெல்லாம் குறையோடு நபர்கள் இருக்க
நீ மட்டும் பூரணமாய் வாழ்வதெதற்கு?

பூரணமாய் வாழ்வதே குறை யாயிற்றே

பூரணமாய் வாழத் துடிக்கும் போது
மற்றவரை துடிக்கச் செய்யாதவர் யாரோ?

பூரணமாய் வாழத் துடிக்கும் போது
தன்னைத் தானே துன்புறுத்துவதும் ஏனோ?

பூரணமான வாழ்க்கையும் பூரணம் அல்லவே
குறையும் குறை அல்லவே

பூரண சந்தோசம் என்று ஒன்று இல்லையே
பூரண பக்தி என்று ஒன்று இல்லையே
பூரண அன்பு என்றும் கூட ஒன்றும் இல்லையே
பூரண வாழ்க்கை மட்டும் எங்கிருந்து வர முடியும்?

Saturday, January 29, 2011

அநியாயத்தில் அநியாயம் இல்லை

புலி மானை அடித்துக் கொல்லும்
இயற்கை இறைவனின் படைப்பு
எந்த விதத்தில் தடுக்க முடியும்
நீயோ நானோ

மன நிலை சரி இல்லாத பெண்
பசிக்குப் பெண் இல்லாத ஆடவன்
அருகருகே வைத்துப் பார்க்கும்
இயற்கை இறைவனின் படைப்பு
எந்த விதத்தில் தடுக்க முடியும்
நீயோ நானோ

ஆதரவு இல்லாத அனாதைப்
பெண்கள் வெவ்வேறு விதத்தில்
பலியாகப் படும் இயற்கை
எந்த விதத்தில் தடுக்க முடியும்
நீயோ நானோ

புலி மானைக் கொல்வதில்
நியாயம் இல்லை என்று மான்
பேசிக் கொண்டு ஓட மறந்தால்
மறு கணமே புலிக்கு இரையாகும்

நியாயம் பேசாமல் தன்னை
வலுவாக்கிக் கொண்டு
ஆபத்தை துல்லியமாக
உணர்ந்து கொள்ளும் உயிர்களே
நெடுநாட்கள் நிம்மதியாக
வாழக் கூடும்

பல நல்ல மனங்கள் ஆபத்து
உனக்கு காத்து இருக்கின்றது
கூறியபோதும் தன நிலையை
மாற்றிக் கொள்ளாத அந்தப்
பெண் இறைவனை வேண்டி
மட்டும் பெறப் போவது
விமோசனம் அல்ல. விதியும்
வினையும் எப்படி ஆட்டிச்
செல்கின்றதோ அப்படியே
அவள் வாழ்க்கை
அமையக் கூடும்

இவற்றை உற்று நோக்கின்
அநியாயத்தில் அநியாயம்
இல்லை வினையும் விதியும்
விளையாடுகிறது என்றே
புரியும்.

அநியாயத்திற்கு அதிகமாக இடம்
கொடுப்பதும் அநியாயமாகும்
ஏமாற்ற இடம் கொடுப்பதும்
ஏமாற்றுவதே ஆகும்

Saturday, January 22, 2011

அன்பு அழகூட்டுதே

விழிகள் கொடுக்கத் துடிக்கும் கணம்
மறு விழிகள் எடுக்கத் துடிக்கும் கணம்
அமைந்தது நான்கு விழிப் பாலம்
பாலத்தில் ஊறுவது வாகனம் அல்ல
வெறும் எண்ணங்கள் மட்டுமே

நாளுக்கு ஒரு படி எண்ணங்கள்
அபிநயமாய் அன்பாய் ஊறிச்
செல்கின்றன. வெள்ளம் போல்
எண்ணங்கள் ஓடிப் பயனில்லை
பயனுண்டு திரளும் அன்பு
வெள்ளத்தால்

அன்பு கூட அழகூட்டுதே
அழகு கூட அன்பூட்டுதே
அழகூட்டும் அன்பு
அரு மருந்தாம்
அன்புஊட்டும் அழகு
அருமையான கலையாம்

கலை வாழ்வை அலங்கரிக்க
விழிகள் கலையை அலங்கரிக்க
கலையும் வாழ்வானது
வாழ்வும் கலையானது
வாழ்க்கைக் கலை உருவானது
வாழ்க்கை சுவாரசியம் ஆனது

Tuesday, January 18, 2011

காலம் மாறிப் போச்சு

ஆப்பம் செஞ்சா ஆபீசுக்குப்
போமுடியலே

ஆபீசுக்குப் போனா ஆப்பம்
செய்ய முடியலே

காசு இருந்தா குளிர் சாதனம்
குளிர் சாதனம்னா நோ சமையல்

இட்லி செஞ்சா பசங்க சாப்பிட மாட்றா
பசங்க சாப்பிடற பீட்சா வரமாட்ரேண்ணுது

அடுத்த வீட்டுப் பொறியல் விரும்பி சாப்பிடற
நம் பொண்ணு நாம் செஞ்ச பொறியல் திரும்பி
கூட பார்க்க மாட்டேன்றா

கேட்டா அது வேற இது வேற ன்னு சொல்லி
சொல்லிக் காட்டறா

சமைச்ச பொருள் எல்லாம்
அடுக்கி அடுக்கி வைக்கிறா
சூபெர்மார்கெட்டில்

அவா அவா பை பையா
அள்ளிண்டு போறா

ஒரு நிமிஷம் சூடு பண்ணி
வயிறு உள்ளே தள்ளறா

போற போக்கில் வருடம் ஆனா
சமையல் ரூமே இல்லாம கட்டிருவா வீடு

பொறுத்துன்னா பார்க்க வேணும்

Friday, January 14, 2011

சடங்கு

காலம் காலமாய் மனக் குமையலில்
ஆடவரிடம் பழக மறந்த பெண்
அவளுக்கு
ஆங்கிலேயப் பழக்கமான
கை குலுக்கலும் நல்ல ஒரு
கை கொடுக்கும் சடங்காயிற்று

குணமுள்ள நண்பரை
கை குலுக்கிய பின்னும்
புன்னகைக்க மறக்கும் சூழ்நிலை அவளுக்கு.
சடங்கும் அவளைப் பொறுத்த மட்டில் தன்
வேலையைச் செய்வதில் தவறுகிறது
இது அப்பெண்ணின் தனிப்பட்ட சூழ்நிலை

Thursday, January 13, 2011

பேஸ்பூக் கேம்

சிறிய குடும்பம்
வீட்டிற்குள் ஒன்பது டிவி
ரூமிற்கு மூன்று
ஒன்பது லாப் டாப்
ரூமிற்கு மூன்று
ஒன்பது போன்
ரூமிற்கு மூன்று
வீட்டிற்குள் பதினெட்டு
ரிமோட் கண்ட்ரோல்
பழசு ஒன்பது
புதுசு ஒன்பது
காரணத்தோடு
வைத்திருக்கிறார்கள்
இத்தனை எண்ணிக்கை

வீட்டில் சமையல் ரூம்
கிடையாது
காரணத்தோடு
கட்டி இருக்கிறார்கள்

கணவன் மனைவி
அருகருகே சோபாவில்
சாட் செய்கிறார்கள்
நள்ளிரவில்
முகத்தைக் கூடப்
பார்க்காமல்

தூங்க மறந்து போகிறது
என்கிறான் கணவன்
கடி ஜோக் அனுப்பறேன் படி
தூங்கிப் போயிடுவே
சாட்டில் சொல்கிறாள்
மனைவி

படிக்கிறான் கடி ஜோக்கை
வருகின்றது ஒரு கேம் ஐடியா
அவனுக்கு.
பேஸ்பூக் கேம்
செய்யத் தொடங்குகிறான்
அவனே

எந்த நள்ளிரவும்
படுக்கை பக்கமே
போக மாட்டேன்றான்

ஐயோ இனிமேல் சொல்லவே
மாட்டேன் கடி ஜோக்
தலையணையில் அடித்துக் கொள்கிறாள்
மனைவி

Tuesday, January 11, 2011

குடியிருந்த வீட்டுப் பக்கம்

புங்க மரமும் வேப்ப மரமும்
வீட்டுக்கு காவலராய்

புங்கமரத்தில் தொங்கிய
தூக்கணாங் குருவிக் கூடு

புங்கமரத்து இலையிலிருந்து
உயிர்பெற்ற பீ பீ சத்தம்

வேப்பம் பழத்து சுவை
வேப்பமரத்து அடியில் ஆடிய கில்லி

வேப்பமரத்தில் கட்டி ஆடிய
ஊஞ்சல்

வேப்பமரத்தின் அடியில்
உயரத் தாண்டுதல் விளையாட்டு

கூட்டமாக நண்பர்களுடன்
விளையாடிய எல் ஓ என் டீ என்
லண்டன் விளையாட்டு

சிச்சரும் பவுண்டரிகளும்
குவித்த குட்டி மைதானம்

புல்டௌசெரில் ஏறி அமர்ந்து அதன்
சாகசத்தை நேரில் கண்டுகளித்தது

மைதானத்தை தண்ணீர் தெளித்து
ஈரப் படுத்திய வேனில் உள்
உட்கார்ந்து கொள்வது

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள்
வந்து விளையாடியதை
வேடிக்கை கண்டது

எந்நேரமும் ஓயாமல்
பட்டம் விடுவது

காவல் காரன் கூண்டிற்குள்
அமர்ந்து கொஞ்ச நேரம்
காவல் காப்பது

இட்லிப் பூவை
பறித்து பறித்து தின்பது

தூங்குமூஞ்சிப் பூவைக்
கன்னத்தில் தடவி தடவிப் பார்ப்பது

விடுதலை தின விழாப் போட்டியில்
பரிசுகள் பெறுவது

தவளைகளுக்கென்று தினம் தனி நேரம்
ஒதுக்குவது

பட்டாம் பூச்சிகள் பிடிக்க தாவி தாவி ஓடுவது
பிடித்த பட்டாம் பூச்சியை தப்ப விடாமல்
கவனமாகப் புதருக்குள் இருந்து எடுப்பது

ஆடு மேய்ப்பவர் தாகத்துக்கு செம்புத் தண்ணீர்
கொடுப்பது

டீக்கடை ஒலிபெருக்கியில் உலகுக்குள்
நுழையும் பாடல்களை ரசிப்பது

அப்பா கல்லூரி கண்காட்சியில்
வலிக்காமல் கையில் ரத்தம் வர வைத்துக்
கொள்வது

அப்பா கல்லூரி கண்காட்சியில்
கிதார் வாசித்த எலும்புக் கூட்டை தேடி தேடி
கண்டு களிப்பது

மணற்பரப்பில் அமர்ந்து கோயில் கட்டுவது
மணற்பரப்பில் அமர்ந்து கதை பேசுவது

இன்னும் எவ்வளவோ எவ்வளவோ
அனுபவித்து ரசித்தது நாங்கள்
குடியிருந்த வீட்டுப் பக்கம்

மறுபடி அங்கு சென்று வர வாய்ப்பு
கிடைக்குமோ கிடைக்காதோ
எனக்கு அந்த இடம் பொக்கிஷமோ
பொக்கிஷம்

Sunday, January 9, 2011

பக்தி எந்தன் காணிக்கை

அருந்தும் குடிநீரிலும் நீ
அனுதினம் உண்ணும் சிற்றுண்டியிலும் நீ
அடுத்த வீட்டு அக்கா கொடுத்த இனிப்பிலும் நீ

உடற்பயிற்சித் துணையிலும் நீ
உடன் அக்கறை காட்டும் அன்பனிலும் நீ
உற்சாகமாக பணி தரும் மேலாளரிலும் நீ

இயற்கைக் காட்சியிலும் நீ
இளவேனிற் காற்றிலும் நீ
இவர்கள் எழுதும் கவிதையிலும் நீ

இனிமையானப் பாடலிலும் நீ
இனிமையானப் பயணத்திலும் நீ

இதமான தியானத்திலும் நீ
இளக வைக்கும் யோகத்திலும் நீ

சுவாசக் காற்றிலும் நீ
இருதயத் துடிப்பினிலும் நீ

நீ என்னை முழுவதுமாய் ஆக்கிரமித்து
ஆதரிக்கும் இந்த வேளையிலே
உன்னை எனக்குத் தந்த
உயிரினங்களுக்கெல்லாம்
எந்தன் பக்தியை காணிக்கையாகச்
செலுத்துகிறேன்

நீ யாராக இருக்கும் என்று யோசிக்கும்
அன்பர்களை மேலும் கலங்க விடாமால்
நீ தான் மற்றவர் என் மீது காட்டும் அன்பு
இறையன்பு என்று முடிவில் உரைத்து விடுகிறேன்

Friday, January 7, 2011

துயரில்லா சிகரம்

உமது அன்பில் கற்கண்டாய் கரைந்து
விடுகிறேன். உமது அன்போ என்னைத்
துவைத்து எடுத்துக் கொண்டிருக்கிறது

உமது புனித உறவு புல்லாங்குழலின்
கானமாய் என் மூளைக்குள் வலம்
வருகிறது. உமது புனிதம் என்னைத்
துயரில்லா சிகரத்துக்கு அழைத்துச்
செல்கிறது

உமது அன்பின் ஆழம் அலைகடலின்
அடியையும் என்னைத் தொடச் செய்கிறது
ஆழம் என்றுமில்லாமல் இன்று புதிய
சக்தியை என்கையான கரையில்
கரை சேர்க்கிறது

உமது மேல் நான் கொண்ட மதிப்பு
எனது சுயமதிப்பை பல நூறு மடங்கு
பெருக்குகின்றது. நான் கொண்ட மதிப்பு
நான் இருக்கிறேன் நாளும், நாலும் வந்தால்
என்ன வராவிட்டால் என்ன என்று
என்னைக் கேட்காமல் கேட்கின்றது

அன்பு, புனிதம், ஆழம் , மதிப்பு
இவற்றை வானவில் நீளத்துக்கு
பெற்றதனால் மலை போன்ற
துயர அலைகள் சுக்கு நூறாய்
சிதைந்து போய் விட்டன
மீதம் இருப்பது அழகிய
தென்றல் காற்று ஒன்றே

ஒன்றா இரண்டா உமது என்று குறிப்பிட
நல்லெண்ணம் கொண்ட ஆடவர் கூட்டமே
உமதுள் அடங்குவர். சுபம் என்றே நாளும்
உரைக்கிறேன் நானிங்கு. சுபத்தை விவரிக்க
கவிதைகள் எழுதும் நாள் இன்று

Thursday, January 6, 2011

உற்சாக விருந்து

இயற்கையின் தோற்றமே வாழைஇலை
இனிதாய் நடைபெறும் பண்டிகை வெறும் சாதம்
பரிமாறும் புன்சிரிப்பே வத்தல் குழம்பு
பக்கத்தில் துணை வெண்டைப் பொறியல்
கலக்கலான சீட்டாட்டமே அப்பளம்
கலகலப்பான அரட்டை பாயசம்
கன்னியரின் சிரிப்பே தயிர் சாதம்
ஆடவரின் கம்பீரம் ஊறுகாய்
ஆடி முடித்த கொண்டாட்டம்
எல்லாம் சேர்ந்து உற்சாக விருந்து

Wednesday, January 5, 2011

காணு நலம் காணு

போனவற்றை போற்றியும் பயனோ?-அதில்
நல்லவையோ கெட்டவையோ பயனோ? - இன்று
நடப்பதையே நலமாகவே நடத்திவிடு நடத்தினால்
காணு நலம் காணு

துரத்துகின்ற எண்ணமதை துரத்து - அதில்
துணிவாகவே துயரமதை துரத்து -இன்று
துரத்துகின்ற துயரமும் தூரமாகக் கிளம்பினால்
காணு நலம் காணு

எண்ணமும் உன்னுடைய எண்ணமே -அதில்
எல்லாமும் உந்தன்கை வண்ணமே -இன்று
எண்ணங்கள் எல்லாமும் வந்துவிடும் வண்ணமாக
காணு நலம் காணு

உந்தன்கை ஆளுகின்ற கட்சி - அதில்
நீயுமல்ல எதிர்க்கின்ற கட்சி - இன்று
நீதோண்டிய குழியுமையே முற்றுமாய் மூடிடவே
காணு நலம் காணு

நீஉனக்கு நல்லதொரு நண்பன் - அதில்
நீயில்லை அந்தஒரு பகைவன் -இன்று
நீஉந்தன் ஆற்றலையும் அறிந்துகொள் புரிந்துகொள்
காணு நலம் காணு

Tuesday, January 4, 2011

நல்லதை மட்டும்

அம்மாவிற்கு என்ன கஷ்டமோ
உன்னைத் திட்டுகிறாள்

கஷ்டத்தில் திட்டிவிட்டு
திட்டியதற்காக தனியே
கஷ்டப்படும் அம்மாவோ அவள்

திட்டும் அம்மா
உள்ளுக்குள் கனிந்த மனம்
நம்பவாப் போகின்றாய் நீயும்

எது எப்படி ஆயினும்
அம்மா ஒரு உயிர் தான் உனக்கு
திட்டாத உயிர்கள் ஆயிரம் இருக்க
திட்டும் உயிரை மட்டுமே நீ நினைக்காது
தெள்ளத் தெளிவாய் நல்லதையே
மட்டும் கண்டு கொண்டிரு
நல்லது எங்கிருந்தாலும்

Monday, January 3, 2011

முழு உலகம்

அம்மாவின் அன்பு கடல் போன்றது
ஒத்துக் கொள்கிறேன்

அண்ணனின் அன்பு கடலின் அலை போன்றது
ஒத்துக் கொள்கிறேன்

ரத்த பாசமே இல்லாமல் தோழி காட்டும் அன்பு
கடலை விட உயர்ந்தது என்றேத் தோணுகிறது

அம்மா தன அன்பைக் கொட்டி பிறரில் அன்பின்
வாசத்தை நுகர வைத்தாள்

கிருஷ்ணன் வாயைத் திறந்து காட்டி
யசோதைக்கு முழு உலகம் காட்டினான்

என்னைப் பொறுத்த வரை முழு உலகமும்
மற்றவர் என் மீது காட்டும்
அன்பில் அடங்கி உள்ளது

Sunday, January 2, 2011

கவி விளையாட்டு

ஒவ்வொரு கல்லாய் கையில் எடுத்து
ஆடிய கூழாங்கல் ஆட்டமும்

ஒவ்வொரு ரன்னாய் ரன் செய்து
ஆடிய கிரிக்கெட் ஆட்டமும்

ஒவ்வொரு கட்டமாய் கடந்து சென்று
ஆடிய நொண்டி ஆட்டமும்

அன்று எனக்கு கிட்டிய
பாக்கியம்

ஒவ்வொரு கவியாய் கவி எழுதி
மற்றவர் படித்திட கொடுத்தலும்

ஒவ்வொரு கருத்துரை கருத்துடன் எழுதி
மற்றவர் மகிழ்ந்திட கொடுத்தலும்

ஒவ்வொரு புதிய பின்பற்றுபவரை
மனதில் மகிழ்ந்து முடித்தலும்

இன்று எனக்கு கிட்டும்
பாக்கியம்

கிரிக்கெட் மட்டுமா விளையாட்டு
கவி பதிப்பதுமே விளையாட்டு

விளையாட்டு எதுவாயினும்
நம்மைப் புதுப்பிக்கின்றது
உலகை மறக்கச் செய்கின்றது
இன்றைய நாட்களுக்குத்
தேவையானது


வாருங்கள் கவி விளையாட்டு
விளையாடுவோம்

Saturday, January 1, 2011

இயற்கை அன்னை

வைகறைப் பொழுதில்
இயற்கை அன்னையின்
இனிய மௌன ராகம்

மௌனமாய் நம்
மனம் நுழைந்து
கானமாய்ப் பாடும்

கரியதொரு ஆடையுடன்
அரியதொரு காட்சியுடன்
இயற்கை தேவி

கலைஞனின் கலை
உள்ளத்தை உசுப்பி
கவி என்னும் பெயரில்
கவிகள் பல
எழுதச் சொல்லி
என்றும் தூது
விட்டுக் கொண்டே
இருக்கின்றாள்
தொடர்ந்து கொண்டே
செல்கின்றாள்

வழி இருக்கா

பிறந்து வந்த பொழுது
புதுப் பிஞ்சா வந்த கனியே

ரெண்டாம் பருவத்துல
ரெண்டு ரெண்டா
சேட்டை நீ செஞ்சதுல
அசந்து போனேன், கொஞ்சம்
அதிசயத்துப் போனேன்

மூணாம் பருவத்தில
மூணு வார்த்தை நீ பேசுனதுல
குழைஞ்சு போனேன், நெஞ்சம்
நிறைந்து போனேன்

நாலாம் பருவத்தில
நாலு வரி நீ எழுதினதுல
நல்ல கையெழுத்த
நான் கண்டேன்

பத்தாம் பருவத்தில
குட்டிப் பனை மரமாய்
நீ வளர்ந்ததில நானும்
வளர்ந்தேன்

உன்னோடு ஒட்டிக்
கொண்ட காலம்
வசந்த காலம்

இப்போ என்னை
விட்டுட்டு ஓடிடுவே
கல்லூரியில் கற்பதற்கு
நானும் வந்திடவே
வழி இருக்கா
சொல்லடி
என் அருமைக் குழந்தே