Saturday, January 29, 2011

அநியாயத்தில் அநியாயம் இல்லை

புலி மானை அடித்துக் கொல்லும்
இயற்கை இறைவனின் படைப்பு
எந்த விதத்தில் தடுக்க முடியும்
நீயோ நானோ

மன நிலை சரி இல்லாத பெண்
பசிக்குப் பெண் இல்லாத ஆடவன்
அருகருகே வைத்துப் பார்க்கும்
இயற்கை இறைவனின் படைப்பு
எந்த விதத்தில் தடுக்க முடியும்
நீயோ நானோ

ஆதரவு இல்லாத அனாதைப்
பெண்கள் வெவ்வேறு விதத்தில்
பலியாகப் படும் இயற்கை
எந்த விதத்தில் தடுக்க முடியும்
நீயோ நானோ

புலி மானைக் கொல்வதில்
நியாயம் இல்லை என்று மான்
பேசிக் கொண்டு ஓட மறந்தால்
மறு கணமே புலிக்கு இரையாகும்

நியாயம் பேசாமல் தன்னை
வலுவாக்கிக் கொண்டு
ஆபத்தை துல்லியமாக
உணர்ந்து கொள்ளும் உயிர்களே
நெடுநாட்கள் நிம்மதியாக
வாழக் கூடும்

பல நல்ல மனங்கள் ஆபத்து
உனக்கு காத்து இருக்கின்றது
கூறியபோதும் தன நிலையை
மாற்றிக் கொள்ளாத அந்தப்
பெண் இறைவனை வேண்டி
மட்டும் பெறப் போவது
விமோசனம் அல்ல. விதியும்
வினையும் எப்படி ஆட்டிச்
செல்கின்றதோ அப்படியே
அவள் வாழ்க்கை
அமையக் கூடும்

இவற்றை உற்று நோக்கின்
அநியாயத்தில் அநியாயம்
இல்லை வினையும் விதியும்
விளையாடுகிறது என்றே
புரியும்.

அநியாயத்திற்கு அதிகமாக இடம்
கொடுப்பதும் அநியாயமாகும்
ஏமாற்ற இடம் கொடுப்பதும்
ஏமாற்றுவதே ஆகும்

Saturday, January 22, 2011

அன்பு அழகூட்டுதே

விழிகள் கொடுக்கத் துடிக்கும் கணம்
மறு விழிகள் எடுக்கத் துடிக்கும் கணம்
அமைந்தது நான்கு விழிப் பாலம்
பாலத்தில் ஊறுவது வாகனம் அல்ல
வெறும் எண்ணங்கள் மட்டுமே

நாளுக்கு ஒரு படி எண்ணங்கள்
அபிநயமாய் அன்பாய் ஊறிச்
செல்கின்றன. வெள்ளம் போல்
எண்ணங்கள் ஓடிப் பயனில்லை
பயனுண்டு திரளும் அன்பு
வெள்ளத்தால்

அன்பு கூட அழகூட்டுதே
அழகு கூட அன்பூட்டுதே
அழகூட்டும் அன்பு
அரு மருந்தாம்
அன்புஊட்டும் அழகு
அருமையான கலையாம்

கலை வாழ்வை அலங்கரிக்க
விழிகள் கலையை அலங்கரிக்க
கலையும் வாழ்வானது
வாழ்வும் கலையானது
வாழ்க்கைக் கலை உருவானது
வாழ்க்கை சுவாரசியம் ஆனது

Tuesday, January 18, 2011

காலம் மாறிப் போச்சு

ஆப்பம் செஞ்சா ஆபீசுக்குப்
போமுடியலே

ஆபீசுக்குப் போனா ஆப்பம்
செய்ய முடியலே

காசு இருந்தா குளிர் சாதனம்
குளிர் சாதனம்னா நோ சமையல்

இட்லி செஞ்சா பசங்க சாப்பிட மாட்றா
பசங்க சாப்பிடற பீட்சா வரமாட்ரேண்ணுது

அடுத்த வீட்டுப் பொறியல் விரும்பி சாப்பிடற
நம் பொண்ணு நாம் செஞ்ச பொறியல் திரும்பி
கூட பார்க்க மாட்டேன்றா

கேட்டா அது வேற இது வேற ன்னு சொல்லி
சொல்லிக் காட்டறா

சமைச்ச பொருள் எல்லாம்
அடுக்கி அடுக்கி வைக்கிறா
சூபெர்மார்கெட்டில்

அவா அவா பை பையா
அள்ளிண்டு போறா

ஒரு நிமிஷம் சூடு பண்ணி
வயிறு உள்ளே தள்ளறா

போற போக்கில் வருடம் ஆனா
சமையல் ரூமே இல்லாம கட்டிருவா வீடு

பொறுத்துன்னா பார்க்க வேணும்

Friday, January 14, 2011

சடங்கு

காலம் காலமாய் மனக் குமையலில்
ஆடவரிடம் பழக மறந்த பெண்
அவளுக்கு
ஆங்கிலேயப் பழக்கமான
கை குலுக்கலும் நல்ல ஒரு
கை கொடுக்கும் சடங்காயிற்று

குணமுள்ள நண்பரை
கை குலுக்கிய பின்னும்
புன்னகைக்க மறக்கும் சூழ்நிலை அவளுக்கு.
சடங்கும் அவளைப் பொறுத்த மட்டில் தன்
வேலையைச் செய்வதில் தவறுகிறது
இது அப்பெண்ணின் தனிப்பட்ட சூழ்நிலை

Thursday, January 13, 2011

பேஸ்பூக் கேம்

சிறிய குடும்பம்
வீட்டிற்குள் ஒன்பது டிவி
ரூமிற்கு மூன்று
ஒன்பது லாப் டாப்
ரூமிற்கு மூன்று
ஒன்பது போன்
ரூமிற்கு மூன்று
வீட்டிற்குள் பதினெட்டு
ரிமோட் கண்ட்ரோல்
பழசு ஒன்பது
புதுசு ஒன்பது
காரணத்தோடு
வைத்திருக்கிறார்கள்
இத்தனை எண்ணிக்கை

வீட்டில் சமையல் ரூம்
கிடையாது
காரணத்தோடு
கட்டி இருக்கிறார்கள்

கணவன் மனைவி
அருகருகே சோபாவில்
சாட் செய்கிறார்கள்
நள்ளிரவில்
முகத்தைக் கூடப்
பார்க்காமல்

தூங்க மறந்து போகிறது
என்கிறான் கணவன்
கடி ஜோக் அனுப்பறேன் படி
தூங்கிப் போயிடுவே
சாட்டில் சொல்கிறாள்
மனைவி

படிக்கிறான் கடி ஜோக்கை
வருகின்றது ஒரு கேம் ஐடியா
அவனுக்கு.
பேஸ்பூக் கேம்
செய்யத் தொடங்குகிறான்
அவனே

எந்த நள்ளிரவும்
படுக்கை பக்கமே
போக மாட்டேன்றான்

ஐயோ இனிமேல் சொல்லவே
மாட்டேன் கடி ஜோக்
தலையணையில் அடித்துக் கொள்கிறாள்
மனைவி

Tuesday, January 11, 2011

குடியிருந்த வீட்டுப் பக்கம்

புங்க மரமும் வேப்ப மரமும்
வீட்டுக்கு காவலராய்

புங்கமரத்தில் தொங்கிய
தூக்கணாங் குருவிக் கூடு

புங்கமரத்து இலையிலிருந்து
உயிர்பெற்ற பீ பீ சத்தம்

வேப்பம் பழத்து சுவை
வேப்பமரத்து அடியில் ஆடிய கில்லி

வேப்பமரத்தில் கட்டி ஆடிய
ஊஞ்சல்

வேப்பமரத்தின் அடியில்
உயரத் தாண்டுதல் விளையாட்டு

கூட்டமாக நண்பர்களுடன்
விளையாடிய எல் ஓ என் டீ என்
லண்டன் விளையாட்டு

சிச்சரும் பவுண்டரிகளும்
குவித்த குட்டி மைதானம்

புல்டௌசெரில் ஏறி அமர்ந்து அதன்
சாகசத்தை நேரில் கண்டுகளித்தது

மைதானத்தை தண்ணீர் தெளித்து
ஈரப் படுத்திய வேனில் உள்
உட்கார்ந்து கொள்வது

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள்
வந்து விளையாடியதை
வேடிக்கை கண்டது

எந்நேரமும் ஓயாமல்
பட்டம் விடுவது

காவல் காரன் கூண்டிற்குள்
அமர்ந்து கொஞ்ச நேரம்
காவல் காப்பது

இட்லிப் பூவை
பறித்து பறித்து தின்பது

தூங்குமூஞ்சிப் பூவைக்
கன்னத்தில் தடவி தடவிப் பார்ப்பது

விடுதலை தின விழாப் போட்டியில்
பரிசுகள் பெறுவது

தவளைகளுக்கென்று தினம் தனி நேரம்
ஒதுக்குவது

பட்டாம் பூச்சிகள் பிடிக்க தாவி தாவி ஓடுவது
பிடித்த பட்டாம் பூச்சியை தப்ப விடாமல்
கவனமாகப் புதருக்குள் இருந்து எடுப்பது

ஆடு மேய்ப்பவர் தாகத்துக்கு செம்புத் தண்ணீர்
கொடுப்பது

டீக்கடை ஒலிபெருக்கியில் உலகுக்குள்
நுழையும் பாடல்களை ரசிப்பது

அப்பா கல்லூரி கண்காட்சியில்
வலிக்காமல் கையில் ரத்தம் வர வைத்துக்
கொள்வது

அப்பா கல்லூரி கண்காட்சியில்
கிதார் வாசித்த எலும்புக் கூட்டை தேடி தேடி
கண்டு களிப்பது

மணற்பரப்பில் அமர்ந்து கோயில் கட்டுவது
மணற்பரப்பில் அமர்ந்து கதை பேசுவது

இன்னும் எவ்வளவோ எவ்வளவோ
அனுபவித்து ரசித்தது நாங்கள்
குடியிருந்த வீட்டுப் பக்கம்

மறுபடி அங்கு சென்று வர வாய்ப்பு
கிடைக்குமோ கிடைக்காதோ
எனக்கு அந்த இடம் பொக்கிஷமோ
பொக்கிஷம்

Sunday, January 9, 2011

பக்தி எந்தன் காணிக்கை

அருந்தும் குடிநீரிலும் நீ
அனுதினம் உண்ணும் சிற்றுண்டியிலும் நீ
அடுத்த வீட்டு அக்கா கொடுத்த இனிப்பிலும் நீ

உடற்பயிற்சித் துணையிலும் நீ
உடன் அக்கறை காட்டும் அன்பனிலும் நீ
உற்சாகமாக பணி தரும் மேலாளரிலும் நீ

இயற்கைக் காட்சியிலும் நீ
இளவேனிற் காற்றிலும் நீ
இவர்கள் எழுதும் கவிதையிலும் நீ

இனிமையானப் பாடலிலும் நீ
இனிமையானப் பயணத்திலும் நீ

இதமான தியானத்திலும் நீ
இளக வைக்கும் யோகத்திலும் நீ

சுவாசக் காற்றிலும் நீ
இருதயத் துடிப்பினிலும் நீ

நீ என்னை முழுவதுமாய் ஆக்கிரமித்து
ஆதரிக்கும் இந்த வேளையிலே
உன்னை எனக்குத் தந்த
உயிரினங்களுக்கெல்லாம்
எந்தன் பக்தியை காணிக்கையாகச்
செலுத்துகிறேன்

நீ யாராக இருக்கும் என்று யோசிக்கும்
அன்பர்களை மேலும் கலங்க விடாமால்
நீ தான் மற்றவர் என் மீது காட்டும் அன்பு
இறையன்பு என்று முடிவில் உரைத்து விடுகிறேன்

Friday, January 7, 2011

துயரில்லா சிகரம்

உமது அன்பில் கற்கண்டாய் கரைந்து
விடுகிறேன். உமது அன்போ என்னைத்
துவைத்து எடுத்துக் கொண்டிருக்கிறது

உமது புனித உறவு புல்லாங்குழலின்
கானமாய் என் மூளைக்குள் வலம்
வருகிறது. உமது புனிதம் என்னைத்
துயரில்லா சிகரத்துக்கு அழைத்துச்
செல்கிறது

உமது அன்பின் ஆழம் அலைகடலின்
அடியையும் என்னைத் தொடச் செய்கிறது
ஆழம் என்றுமில்லாமல் இன்று புதிய
சக்தியை என்கையான கரையில்
கரை சேர்க்கிறது

உமது மேல் நான் கொண்ட மதிப்பு
எனது சுயமதிப்பை பல நூறு மடங்கு
பெருக்குகின்றது. நான் கொண்ட மதிப்பு
நான் இருக்கிறேன் நாளும், நாலும் வந்தால்
என்ன வராவிட்டால் என்ன என்று
என்னைக் கேட்காமல் கேட்கின்றது

அன்பு, புனிதம், ஆழம் , மதிப்பு
இவற்றை வானவில் நீளத்துக்கு
பெற்றதனால் மலை போன்ற
துயர அலைகள் சுக்கு நூறாய்
சிதைந்து போய் விட்டன
மீதம் இருப்பது அழகிய
தென்றல் காற்று ஒன்றே

ஒன்றா இரண்டா உமது என்று குறிப்பிட
நல்லெண்ணம் கொண்ட ஆடவர் கூட்டமே
உமதுள் அடங்குவர். சுபம் என்றே நாளும்
உரைக்கிறேன் நானிங்கு. சுபத்தை விவரிக்க
கவிதைகள் எழுதும் நாள் இன்று

Thursday, January 6, 2011

உற்சாக விருந்து

இயற்கையின் தோற்றமே வாழைஇலை
இனிதாய் நடைபெறும் பண்டிகை வெறும் சாதம்
பரிமாறும் புன்சிரிப்பே வத்தல் குழம்பு
பக்கத்தில் துணை வெண்டைப் பொறியல்
கலக்கலான சீட்டாட்டமே அப்பளம்
கலகலப்பான அரட்டை பாயசம்
கன்னியரின் சிரிப்பே தயிர் சாதம்
ஆடவரின் கம்பீரம் ஊறுகாய்
ஆடி முடித்த கொண்டாட்டம்
எல்லாம் சேர்ந்து உற்சாக விருந்து

Wednesday, January 5, 2011

காணு நலம் காணு

போனவற்றை போற்றியும் பயனோ?-அதில்
நல்லவையோ கெட்டவையோ பயனோ? - இன்று
நடப்பதையே நலமாகவே நடத்திவிடு நடத்தினால்
காணு நலம் காணு

துரத்துகின்ற எண்ணமதை துரத்து - அதில்
துணிவாகவே துயரமதை துரத்து -இன்று
துரத்துகின்ற துயரமும் தூரமாகக் கிளம்பினால்
காணு நலம் காணு

எண்ணமும் உன்னுடைய எண்ணமே -அதில்
எல்லாமும் உந்தன்கை வண்ணமே -இன்று
எண்ணங்கள் எல்லாமும் வந்துவிடும் வண்ணமாக
காணு நலம் காணு

உந்தன்கை ஆளுகின்ற கட்சி - அதில்
நீயுமல்ல எதிர்க்கின்ற கட்சி - இன்று
நீதோண்டிய குழியுமையே முற்றுமாய் மூடிடவே
காணு நலம் காணு

நீஉனக்கு நல்லதொரு நண்பன் - அதில்
நீயில்லை அந்தஒரு பகைவன் -இன்று
நீஉந்தன் ஆற்றலையும் அறிந்துகொள் புரிந்துகொள்
காணு நலம் காணு

Tuesday, January 4, 2011

நல்லதை மட்டும்

அம்மாவிற்கு என்ன கஷ்டமோ
உன்னைத் திட்டுகிறாள்

கஷ்டத்தில் திட்டிவிட்டு
திட்டியதற்காக தனியே
கஷ்டப்படும் அம்மாவோ அவள்

திட்டும் அம்மா
உள்ளுக்குள் கனிந்த மனம்
நம்பவாப் போகின்றாய் நீயும்

எது எப்படி ஆயினும்
அம்மா ஒரு உயிர் தான் உனக்கு
திட்டாத உயிர்கள் ஆயிரம் இருக்க
திட்டும் உயிரை மட்டுமே நீ நினைக்காது
தெள்ளத் தெளிவாய் நல்லதையே
மட்டும் கண்டு கொண்டிரு
நல்லது எங்கிருந்தாலும்

Monday, January 3, 2011

முழு உலகம்

அம்மாவின் அன்பு கடல் போன்றது
ஒத்துக் கொள்கிறேன்

அண்ணனின் அன்பு கடலின் அலை போன்றது
ஒத்துக் கொள்கிறேன்

ரத்த பாசமே இல்லாமல் தோழி காட்டும் அன்பு
கடலை விட உயர்ந்தது என்றேத் தோணுகிறது

அம்மா தன அன்பைக் கொட்டி பிறரில் அன்பின்
வாசத்தை நுகர வைத்தாள்

கிருஷ்ணன் வாயைத் திறந்து காட்டி
யசோதைக்கு முழு உலகம் காட்டினான்

என்னைப் பொறுத்த வரை முழு உலகமும்
மற்றவர் என் மீது காட்டும்
அன்பில் அடங்கி உள்ளது

Sunday, January 2, 2011

கவி விளையாட்டு

ஒவ்வொரு கல்லாய் கையில் எடுத்து
ஆடிய கூழாங்கல் ஆட்டமும்

ஒவ்வொரு ரன்னாய் ரன் செய்து
ஆடிய கிரிக்கெட் ஆட்டமும்

ஒவ்வொரு கட்டமாய் கடந்து சென்று
ஆடிய நொண்டி ஆட்டமும்

அன்று எனக்கு கிட்டிய
பாக்கியம்

ஒவ்வொரு கவியாய் கவி எழுதி
மற்றவர் படித்திட கொடுத்தலும்

ஒவ்வொரு கருத்துரை கருத்துடன் எழுதி
மற்றவர் மகிழ்ந்திட கொடுத்தலும்

ஒவ்வொரு புதிய பின்பற்றுபவரை
மனதில் மகிழ்ந்து முடித்தலும்

இன்று எனக்கு கிட்டும்
பாக்கியம்

கிரிக்கெட் மட்டுமா விளையாட்டு
கவி பதிப்பதுமே விளையாட்டு

விளையாட்டு எதுவாயினும்
நம்மைப் புதுப்பிக்கின்றது
உலகை மறக்கச் செய்கின்றது
இன்றைய நாட்களுக்குத்
தேவையானது


வாருங்கள் கவி விளையாட்டு
விளையாடுவோம்

Saturday, January 1, 2011

இயற்கை அன்னை

வைகறைப் பொழுதில்
இயற்கை அன்னையின்
இனிய மௌன ராகம்

மௌனமாய் நம்
மனம் நுழைந்து
கானமாய்ப் பாடும்

கரியதொரு ஆடையுடன்
அரியதொரு காட்சியுடன்
இயற்கை தேவி

கலைஞனின் கலை
உள்ளத்தை உசுப்பி
கவி என்னும் பெயரில்
கவிகள் பல
எழுதச் சொல்லி
என்றும் தூது
விட்டுக் கொண்டே
இருக்கின்றாள்
தொடர்ந்து கொண்டே
செல்கின்றாள்

வழி இருக்கா

பிறந்து வந்த பொழுது
புதுப் பிஞ்சா வந்த கனியே

ரெண்டாம் பருவத்துல
ரெண்டு ரெண்டா
சேட்டை நீ செஞ்சதுல
அசந்து போனேன், கொஞ்சம்
அதிசயத்துப் போனேன்

மூணாம் பருவத்தில
மூணு வார்த்தை நீ பேசுனதுல
குழைஞ்சு போனேன், நெஞ்சம்
நிறைந்து போனேன்

நாலாம் பருவத்தில
நாலு வரி நீ எழுதினதுல
நல்ல கையெழுத்த
நான் கண்டேன்

பத்தாம் பருவத்தில
குட்டிப் பனை மரமாய்
நீ வளர்ந்ததில நானும்
வளர்ந்தேன்

உன்னோடு ஒட்டிக்
கொண்ட காலம்
வசந்த காலம்

இப்போ என்னை
விட்டுட்டு ஓடிடுவே
கல்லூரியில் கற்பதற்கு
நானும் வந்திடவே
வழி இருக்கா
சொல்லடி
என் அருமைக் குழந்தே