Sunday, March 20, 2011

வைகறைப் பயணம்

வைகறைப் பொழுது காரிருள் சூழலுடன்
தொடங்கிய தனிமைப் பயணம்

நொடியில் விடிந்து விடும் போல் தென்பட்ட வானம்
கரு நீலமாகத் தோன்றிய மலைவாரம்

இனிய காலைப் பொழுது, புலர்ந்தும் புலராத
விடியற் காலைப் பொழுது

மலைப்பகுதியின் தொடக்கம்
நெஞ்சில் உற்சாகம்

வளைந்து நெளிந்து கோணிச் சென்ற
குறும் பாதை

தன்னந் தனியாக ரசித்துக் கொண்ட
இயற்கைக் காட்சி

தொடரவிருக்கும் காட்டுப் பயணம்
நினைக்கும் போதே
இனிக்கும் இனிமையான பயணம்

திடீரென்று விடிய, இறைவன் ஒளித்து
பின்னர் அளித்த இயற்கை வரம் போல்
தோணிற்று

இயற்கை சாம்ராஜ்யம் இதைப் போலவே ஒளிந்து
பின்னர் காலைப் பொழுதில் விருந்தாய் வருகிறது
ஒவ்வொரு தினமும்

அவ்வப்பொழுது ஆங்காங்கே மழைத் தூறல்
பறவைகளின் சங்கீதம்

மிகவும் குறுகிய பாதையில் அடர்ந்த உயர்ந்த
மரங்களுக்கு மத்தியில் தொடர்ந்த பயணம்

கண்கொள்ளாக் காட்சி,
ரசித்துச் சுவைத்த அனுபவம்

பயணத்தை முடிக்க நினைத்து
திருப்பு முனையாக சேற்றில் கார் இறங்க

தடம் தெரியாமல் கார் சக்கரங்கள்
சுழலுகிறது

அடி வயிற்றில் பயம் தொத்திக் கொள்கிறது
சில கணங்கள் கார் நம் கைவசம் இல்லை எனத் தெரிகிறது

எப்படியோ காரை நிறுத்த வழி கிடைத்தது
காரை கிளப்ப முடியவில்லை என்றால்

பல மைல்கள் நடந்து சென்று உதவி கேட்க வேண்டும்
என்று மனம் சொல்கிறது

நல்ல வேளை சேற்றிலிருந்து சாலைக்கு
வந்தது கார்

மீண்டும் சேற்றில் மாட்டித் தவிக்காமல் இருக்க
சேற்றுத் திருப்பு முனைகளை எல்லாம்
உங்கள் சகவாசம் இன்று எனக்கு வேண்டாம் என்று
சொல்லி விட்டு

பத்து மைல் தள்ளியுள்ள சாலைத் திருப்பு முனை
நோக்கி பயணம் செல்ல

மனதை மகிழ்வூட்டும் அடர்ந்த உயர்ந்த மரங்களுக்கு
நடுவே தொடர்ந்த பயணம்

ஒவ்வொரு வளைவிலும் மனம் குதூகலத்தில்
வளைகிறது.

காருக்குள் ஒலிக்கும் பழைய காலத்துப் பாடல்கள்
பாடல்கள் கூடவே நினைவுகள் பழைய காலத்து
நினைவுகள் தற்காலத்து நினைவுகள், நண்பர்
கூட்டங்களின் நினைவுகள், உல்லாசப் பயணிகள்
விடுதியின் பக்கம் கணவருடன் சென்று வந்த நினைவுகள்

திரும்பி வரும் வழியில் ஆலங்கட்டி மழையின் அடையாளமாக
காரின் முன் கண்ணாடியில் தெறித்து ஒலிகளிட்ட மழைத் துளிகள்
ஐஸ் கட்டிகள்

திடீரென்று எதிரே வந்த சில பல கார்கள்
மிகுந்த கவனத்துடன் தொடர்ந்த பயணம்

சூடிற்காக உபயோகித்த கார் சாதனத்தின்
மங்கிய ஒலி, பாடல்களின் ஒலி,
இவற்றை எல்லாம் தூக்கிச் செல்கிறது
கார் மேலே விழுந்த மழைத் துளிகள்
எழுப்பிய ஒலி

மலையில், மழையில் தனிப் பயணம்
செய்வது சற்று ஆபத்தாய் தோன்றிய போதும்
அற்புதமான அனுபவமாகவேத் தோன்றியது

வெகு தூரம் பின் தொடர்ந்து வந்த கார்
நகருக்குள் வந்த பின் திடீரென காணாமல் போனது

மனமும் இயற்கையின் ஆட்சிக்குள்ளிருந்து விடுபட்டு
அன்றைய நாளுக்கான வாடிக்கை செயல்களுக்கு
வணக்கம் தெரிவித்தது

மொத்தத்தில் மறக்க முடியாத அனுபவம்
வைகறைப் பயணம்

Friday, March 11, 2011

வைகறைப் பொழுது

காலையில் விரைவில் எழுந்திருக்க
மறக்கும் அன்பு மனங்களே

எழுந்திட்டால் பல உயிர்களை இன்னும்
மகிழ்ச்சியாய் வைத்துப் பார்க்கலாம்

நேரம் இல்லை என்றுத் தட்டிக்
கழிக்கும் கடமைகளை குறைத்துப் பார்க்கலாம்

பறக்கும் உலகில் உடல் நலத்தையும்
சற்று கவனித்துக் கொள்ளலாம்

புத்துணர்ச்சி தரும் வைகறைப்
பொழுது வாழ்வில் அதிசயங்கள்
நடத்தும் நாம் தூங்கி வீணடிக்காமல்
இருந்தால்

சாப்பிட மறந்தோர்

தவிப்பர் பலர் உண்ண உணவின்றி
தவிப்பர் சிலர் உணவிருந்தும் பசியின்றி

அளவாய்ச் சாப்பிடு என்றனர் சான்றோர்
சாப்பிட மறவாதே என ஏன் எவரும்
சொல்லிப் போகவில்லை

சாப்பிட மறந்தவரை நாளும் காண்கிறேன்
சாப்பிட பயந்தவரையும் நாளும் காண்கிறேன்

எடைக்குப் பயந்து சாப்பிட மறுக்கும்
வளர்ந்த மனிதர்கள்

அவசர உலகில் சாப்பிடத் தவறும்
வளரும் குழந்தைகள்

சாப்பிடாமல் வாழும் உயிர்களை
சாப்பிட வைத்து வாழ வை
நான் வணங்கும் தெய்வமே!