Thursday, February 25, 2010

சீர்

பிறந்த பொழுது தொப்புள் கொடியே நம்மை இணைத்தது
வளர்ந்த பொழுது தாங்கள் ஆக்கி வைத்த சோறு நம்மை இணைத்தது

விடுதிக்கு சென்ற பொழுது ஆதரவான வார்த்தைகளைத்
தூது கொண்டு வந்த அஞ்சலே நம்மை இணைத்தது

என்னுடையத் திருமண நாளில் நம்மிருவரின் சந்தோஷமே
நம்மை இணைத்தது

நான் தாயான பொழுது நம்மிருவரின் பொறுப்புகளே
நம்மை இணைத்தது

பதினாலாயிரம் கிலோ மீட்டர்-க்கு அப்பால் இன்று நம்மை
இணைத்திருப்பது என்ன தெரியுமா?

காலை எழுந்தவுடன் பக்திப் பாடல்களை கேட்டு மகிழும்
நம்முடைய பழக்கமும்

எங்கும் எதிலும் இறைவனைக் காணும்
நம்முடைய நோக்கும்

பொங்கல் தினத்தன்று மாக்கோலம் போட்டு
மகிழும் நம்முடையப் பண்பாடும்

மகளுக்காகத் தான் தன் சுகங்களைத் தள்ளி
வைக்கும் அந்த அற்புதக் குணமும்

அம்மா என் திருமண நாளில் தாங்கள் எனக்குச் சீராகத்
தந்த பண்ட பாத்திரங்களை விட, தங்க நகைகளை விட

தங்களுடைய சிறந்த குணங்களை வெளிப்படுத்தும்
முன்-உதாரணமான வாழ்க்கையே நான் விரும்பி

எடுத்துக் கொள்ளும் சிறந்த சீர் ஆயிற்றே! அவற்றையே
நான் தினம் அணிந்து கொள்ள விரும்பினேனே,
விரும்புகிறேனே , விரும்புவேனே!

No comments: