Monday, December 13, 2010

பொங்கல் தினத்தன்று

முந்தைய நாள் மனையெங்கும் ஆசையுடன்
மாக் கோலமிட்ட அந்தக் காலம்

பொழுது விடியும் முன் தயங்காமல் எழுந்து
காலைப் பனியில் வீட்டு வாயிலில்
மார்கழிப் பனியோடு போட்டியிட்ட
தை முதல் நாள் பனியில்
முக்காடிட்டு அமர்ந்த அந்த நாள்

பசுவின் சாணத்தை சந்தோஷமாகத் தெளித்து
தரையை சுயமாகச் சாயமிட்டு பெருமிதம்
அடைந்த அந்த நாள்

வண்ணப் பொடிகளைப் பரப்பி வைத்து
கோலத்தின் தலைப் பாகம் சிவப்பா பச்சையா
என்று உடன்பிறந்தாரோடு கலந்து உரையாடி
உவப்போடு கோலமிட்ட அந்த நாள்

பின்னர் ஸ்நானம் செய்து பிறகு அப்பா சூடம் காட்டும்
பாணியை பக்கமிருந்து வேடிக்கை கண்டு
பொங்கல் ப்ராசதத்தில் கடவுள் அருள் நிறைய இருப்பதாக
முழுமையாக நம்பி அதன் சுவை, மணம் இரண்டையும்
ஒன்று கூட்டி உயிருணர்வோடுடன் இணைத்த
அந்த நாள்

பூஜை அறையை ஆக்கிரமித்த அந்த ஊதுவத்திப் புகையில்
மெய்மறந்து அந்த வாசம் மூளையின் ஓரச் சதையில்
புதைந்து விட்டது என்று அறிந்திராமலே பூஜை அறையை
விட்டு வெளியே வந்த அந்த நாள்

வீட்டுக் கூடத்தில் கரும்பு சீவித் தந்த
சித்தப்பனை நன்றியோடு நோக்கி
துண்டம் செய்து தரும் அம்மாவை
பக்தியுடன் வேடிக்கை பார்த்த அந்த நாள்

கணுவைக் கடிக்க முடியாமல் தவித்து
அண்ணனால் என்னை விட வேகமாகச்
சாப்பிட முடியுதே என்று கலங்கிய
அந்த நாள்

பொங்கல் நாளாம் நன்னாளாம்
என்றும் மனதை விட்டு அகலா
நன்னாளாம்

பண்டிகைக்கு இவ்வளவு பலம் உள்ளது
என்பதை வாழ்வின் பிற்பகுதியில்
துல்லியாமாகக் காண்கிறேன்
உங்களோடு பகிர்கிறேன்

3 comments:

arasan said...

நிச்சயமா அப்படியே என் கண் முன்னால் நிழலாடியது...
நல்ல வரிகள்... எத்தனையோ பேர்களின் பொங்கல் பட்டிணத்து வாசனையில் பாதை மாறி போச்சு...
நல்லா இருக்குங்க தொடருங்க

sslaxman said...

very nice... it just re-opened my memories about how we celebrate Pongal at our native place.

very nice capture of pongal celebration activities...

keep going :)

Meena said...

நன்றிங்க லக்ஷ்மன், நன்றிங்க அரசன்,
ஊக்கம் கவிக்கு ஒரு உற்சாகம்