Friday, December 24, 2010

தாவரங்களை நேசித்த இளவரசி

சிறிய வயதில் முருகன் படத்தில்
உற்று உற்றுப் பார்த்த அதே

நாகப் பாம்பும் மயிலும் ஒன்றாய்க்
காண முடிந்த வாசல்

சில சமயம் நரியும்
அறுபதடி தூரத்தில்

காட்டுக்குள் ஒரு நந்தவனம்
போன்றது எங்களுடைய வீடு

தோட்டத்து பழ மரங்களோ
தின்னு தின்னு என்று தாராளமாய்
அள்ளித் தந்தது
மாவையும் கொய்யாவையும்

சின்ன மா, பெரிய மா, சிவப்பு மா
என்று மூன்று வித மாவிருந்தது
எங்கள் அருமைத் தோட்டத்தில்

கொய்யாவோ கொடுத்து கொடுத்து
வள்ளல் மரம் என்று என் மனதில்
இடம் பிடித்தது

மாதுளை மரமோ நான் விரும்பி வேடிக்கை
பார்த்த கண்காட்சிப் பொருள்
அணில்கள் குடியிருந்த கோயில் ஆயிற்றே

சத்து தருகிறேன் என்று சொல்லி சொல்லி சற்றும்
எதிர்பாரா வகையில் சதா பழங்களைத் தள்ளிக்
கொண்டே இருந்தது சப்போட்டா

சீதாப் பழம் மட்டும் எனக்கு பார்வைக்கு மட்டுமே
அதன் பழம் ஏனோ நான் சாப்பிடவே இல்லை
அறியாமை எனக்கு

பழ மரங்களுடன் போட்டியிட்ட
முருங்கை மரமும், தென்னை மரங்களும்,
பல நாட்களில் எனக்கு விருந்தளித்தன

ரோஜாச் செடியோ, கல்லூரியில் என் தலையில்
அமர்ந்து கொண்டு பல மாணவர்களின் தலையைத்
திருப்பியது

இத்தனையும் விட ஆண் காக்கை பெண் காக்கையுடன்
ஜோடி சேரும் எங்கள் தோட்டத்தில்

இவற்றிற்கு எல்லாம் எஜமானியான அந்த வீட்டு
இளவரசி நான் அப்போது

இந்தக் கவியை எழுதுவதாலே, அந்த அழகிய நினைவுகளாலே
நான் காலம் கடந்து சென்றே இருப்பினும் மனதளவில்
இளவரசியாகவே இருந்து விடுகிறேனே

விலங்குகளையும் தாவரங்களையும்
நேசிக்கக் கற்றுக் கொண்ட இளவரசி

2 comments:

Unknown said...

இந்த இயந்திர உலகத்தில் இயற்க்கையோடு ஒன்றி வாழ்தல் என்பது சிலருக்கே கிடைக்கின்ற பாக்கியம் அதையும் அனுபவித்து வாழ்தல் என்பது உங்களை போன்ற சிலராலே முடியும். கவிதை நடை அருமை.

Meena said...

என்னைத் தட்டிக் கொடுத்த
உங்களுக்கு என் மனம் கலந்த நன்றி
நம்மிடம் உள்ள நல்ல குணாதிசயங்களைக் கண்டால்
மேலும் உயரலாம் என்பதைத்
தெரிவிக்கிறது உங்கள் கருத்து