Saturday, April 23, 2011

போராட்டங்கள்

வாழ்க்கைப் போராட்டங்கள் கண்டு
மிரளும் போது மனம் கனமாகிறது

தனிமையாகப் போராடிக் கொண்டிருக்கும் வேளை
மனம் கனத்திருக்கும் வேளை

போராட்டங்கள் மட்டுமே அனுபவித்த
மனம் விடுபட்டு சிரிக்கின்றது

உலகின் எல்லா இதயங்களுடன்
மனம் இணைந்து விடுகிறது

மௌன மொழியிலும்
மனம் சிறப்பைக் காணுகிறது

போராட்டங்கள் கண்ட மனம்
மௌனிக்கிறது தான்

போராடும் நண்பர்களே,
நீங்கள் மௌனித்து சாந்தம் அடைய
என் வாழ்த்து மடல் இக்கவிதை

Sunday, March 20, 2011

வைகறைப் பயணம்

வைகறைப் பொழுது காரிருள் சூழலுடன்
தொடங்கிய தனிமைப் பயணம்

நொடியில் விடிந்து விடும் போல் தென்பட்ட வானம்
கரு நீலமாகத் தோன்றிய மலைவாரம்

இனிய காலைப் பொழுது, புலர்ந்தும் புலராத
விடியற் காலைப் பொழுது

மலைப்பகுதியின் தொடக்கம்
நெஞ்சில் உற்சாகம்

வளைந்து நெளிந்து கோணிச் சென்ற
குறும் பாதை

தன்னந் தனியாக ரசித்துக் கொண்ட
இயற்கைக் காட்சி

தொடரவிருக்கும் காட்டுப் பயணம்
நினைக்கும் போதே
இனிக்கும் இனிமையான பயணம்

திடீரென்று விடிய, இறைவன் ஒளித்து
பின்னர் அளித்த இயற்கை வரம் போல்
தோணிற்று

இயற்கை சாம்ராஜ்யம் இதைப் போலவே ஒளிந்து
பின்னர் காலைப் பொழுதில் விருந்தாய் வருகிறது
ஒவ்வொரு தினமும்

அவ்வப்பொழுது ஆங்காங்கே மழைத் தூறல்
பறவைகளின் சங்கீதம்

மிகவும் குறுகிய பாதையில் அடர்ந்த உயர்ந்த
மரங்களுக்கு மத்தியில் தொடர்ந்த பயணம்

கண்கொள்ளாக் காட்சி,
ரசித்துச் சுவைத்த அனுபவம்

பயணத்தை முடிக்க நினைத்து
திருப்பு முனையாக சேற்றில் கார் இறங்க

தடம் தெரியாமல் கார் சக்கரங்கள்
சுழலுகிறது

அடி வயிற்றில் பயம் தொத்திக் கொள்கிறது
சில கணங்கள் கார் நம் கைவசம் இல்லை எனத் தெரிகிறது

எப்படியோ காரை நிறுத்த வழி கிடைத்தது
காரை கிளப்ப முடியவில்லை என்றால்

பல மைல்கள் நடந்து சென்று உதவி கேட்க வேண்டும்
என்று மனம் சொல்கிறது

நல்ல வேளை சேற்றிலிருந்து சாலைக்கு
வந்தது கார்

மீண்டும் சேற்றில் மாட்டித் தவிக்காமல் இருக்க
சேற்றுத் திருப்பு முனைகளை எல்லாம்
உங்கள் சகவாசம் இன்று எனக்கு வேண்டாம் என்று
சொல்லி விட்டு

பத்து மைல் தள்ளியுள்ள சாலைத் திருப்பு முனை
நோக்கி பயணம் செல்ல

மனதை மகிழ்வூட்டும் அடர்ந்த உயர்ந்த மரங்களுக்கு
நடுவே தொடர்ந்த பயணம்

ஒவ்வொரு வளைவிலும் மனம் குதூகலத்தில்
வளைகிறது.

காருக்குள் ஒலிக்கும் பழைய காலத்துப் பாடல்கள்
பாடல்கள் கூடவே நினைவுகள் பழைய காலத்து
நினைவுகள் தற்காலத்து நினைவுகள், நண்பர்
கூட்டங்களின் நினைவுகள், உல்லாசப் பயணிகள்
விடுதியின் பக்கம் கணவருடன் சென்று வந்த நினைவுகள்

திரும்பி வரும் வழியில் ஆலங்கட்டி மழையின் அடையாளமாக
காரின் முன் கண்ணாடியில் தெறித்து ஒலிகளிட்ட மழைத் துளிகள்
ஐஸ் கட்டிகள்

திடீரென்று எதிரே வந்த சில பல கார்கள்
மிகுந்த கவனத்துடன் தொடர்ந்த பயணம்

சூடிற்காக உபயோகித்த கார் சாதனத்தின்
மங்கிய ஒலி, பாடல்களின் ஒலி,
இவற்றை எல்லாம் தூக்கிச் செல்கிறது
கார் மேலே விழுந்த மழைத் துளிகள்
எழுப்பிய ஒலி

மலையில், மழையில் தனிப் பயணம்
செய்வது சற்று ஆபத்தாய் தோன்றிய போதும்
அற்புதமான அனுபவமாகவேத் தோன்றியது

வெகு தூரம் பின் தொடர்ந்து வந்த கார்
நகருக்குள் வந்த பின் திடீரென காணாமல் போனது

மனமும் இயற்கையின் ஆட்சிக்குள்ளிருந்து விடுபட்டு
அன்றைய நாளுக்கான வாடிக்கை செயல்களுக்கு
வணக்கம் தெரிவித்தது

மொத்தத்தில் மறக்க முடியாத அனுபவம்
வைகறைப் பயணம்

Friday, March 11, 2011

வைகறைப் பொழுது

காலையில் விரைவில் எழுந்திருக்க
மறக்கும் அன்பு மனங்களே

எழுந்திட்டால் பல உயிர்களை இன்னும்
மகிழ்ச்சியாய் வைத்துப் பார்க்கலாம்

நேரம் இல்லை என்றுத் தட்டிக்
கழிக்கும் கடமைகளை குறைத்துப் பார்க்கலாம்

பறக்கும் உலகில் உடல் நலத்தையும்
சற்று கவனித்துக் கொள்ளலாம்

புத்துணர்ச்சி தரும் வைகறைப்
பொழுது வாழ்வில் அதிசயங்கள்
நடத்தும் நாம் தூங்கி வீணடிக்காமல்
இருந்தால்

சாப்பிட மறந்தோர்

தவிப்பர் பலர் உண்ண உணவின்றி
தவிப்பர் சிலர் உணவிருந்தும் பசியின்றி

அளவாய்ச் சாப்பிடு என்றனர் சான்றோர்
சாப்பிட மறவாதே என ஏன் எவரும்
சொல்லிப் போகவில்லை

சாப்பிட மறந்தவரை நாளும் காண்கிறேன்
சாப்பிட பயந்தவரையும் நாளும் காண்கிறேன்

எடைக்குப் பயந்து சாப்பிட மறுக்கும்
வளர்ந்த மனிதர்கள்

அவசர உலகில் சாப்பிடத் தவறும்
வளரும் குழந்தைகள்

சாப்பிடாமல் வாழும் உயிர்களை
சாப்பிட வைத்து வாழ வை
நான் வணங்கும் தெய்வமே!

Monday, February 7, 2011

பூரண வாழ்க்கை

ஊரெல்லாம் குறையோடு நபர்கள் இருக்க
நீ மட்டும் பூரணமாய் வாழ்வதெதற்கு?

பூரணமாய் வாழ்வதே குறை யாயிற்றே

பூரணமாய் வாழத் துடிக்கும் போது
மற்றவரை துடிக்கச் செய்யாதவர் யாரோ?

பூரணமாய் வாழத் துடிக்கும் போது
தன்னைத் தானே துன்புறுத்துவதும் ஏனோ?

பூரணமான வாழ்க்கையும் பூரணம் அல்லவே
குறையும் குறை அல்லவே

பூரண சந்தோசம் என்று ஒன்று இல்லையே
பூரண பக்தி என்று ஒன்று இல்லையே
பூரண அன்பு என்றும் கூட ஒன்றும் இல்லையே
பூரண வாழ்க்கை மட்டும் எங்கிருந்து வர முடியும்?

Saturday, January 29, 2011

அநியாயத்தில் அநியாயம் இல்லை

புலி மானை அடித்துக் கொல்லும்
இயற்கை இறைவனின் படைப்பு
எந்த விதத்தில் தடுக்க முடியும்
நீயோ நானோ

மன நிலை சரி இல்லாத பெண்
பசிக்குப் பெண் இல்லாத ஆடவன்
அருகருகே வைத்துப் பார்க்கும்
இயற்கை இறைவனின் படைப்பு
எந்த விதத்தில் தடுக்க முடியும்
நீயோ நானோ

ஆதரவு இல்லாத அனாதைப்
பெண்கள் வெவ்வேறு விதத்தில்
பலியாகப் படும் இயற்கை
எந்த விதத்தில் தடுக்க முடியும்
நீயோ நானோ

புலி மானைக் கொல்வதில்
நியாயம் இல்லை என்று மான்
பேசிக் கொண்டு ஓட மறந்தால்
மறு கணமே புலிக்கு இரையாகும்

நியாயம் பேசாமல் தன்னை
வலுவாக்கிக் கொண்டு
ஆபத்தை துல்லியமாக
உணர்ந்து கொள்ளும் உயிர்களே
நெடுநாட்கள் நிம்மதியாக
வாழக் கூடும்

பல நல்ல மனங்கள் ஆபத்து
உனக்கு காத்து இருக்கின்றது
கூறியபோதும் தன நிலையை
மாற்றிக் கொள்ளாத அந்தப்
பெண் இறைவனை வேண்டி
மட்டும் பெறப் போவது
விமோசனம் அல்ல. விதியும்
வினையும் எப்படி ஆட்டிச்
செல்கின்றதோ அப்படியே
அவள் வாழ்க்கை
அமையக் கூடும்

இவற்றை உற்று நோக்கின்
அநியாயத்தில் அநியாயம்
இல்லை வினையும் விதியும்
விளையாடுகிறது என்றே
புரியும்.

அநியாயத்திற்கு அதிகமாக இடம்
கொடுப்பதும் அநியாயமாகும்
ஏமாற்ற இடம் கொடுப்பதும்
ஏமாற்றுவதே ஆகும்

Saturday, January 22, 2011

அன்பு அழகூட்டுதே

விழிகள் கொடுக்கத் துடிக்கும் கணம்
மறு விழிகள் எடுக்கத் துடிக்கும் கணம்
அமைந்தது நான்கு விழிப் பாலம்
பாலத்தில் ஊறுவது வாகனம் அல்ல
வெறும் எண்ணங்கள் மட்டுமே

நாளுக்கு ஒரு படி எண்ணங்கள்
அபிநயமாய் அன்பாய் ஊறிச்
செல்கின்றன. வெள்ளம் போல்
எண்ணங்கள் ஓடிப் பயனில்லை
பயனுண்டு திரளும் அன்பு
வெள்ளத்தால்

அன்பு கூட அழகூட்டுதே
அழகு கூட அன்பூட்டுதே
அழகூட்டும் அன்பு
அரு மருந்தாம்
அன்புஊட்டும் அழகு
அருமையான கலையாம்

கலை வாழ்வை அலங்கரிக்க
விழிகள் கலையை அலங்கரிக்க
கலையும் வாழ்வானது
வாழ்வும் கலையானது
வாழ்க்கைக் கலை உருவானது
வாழ்க்கை சுவாரசியம் ஆனது