Wednesday, March 31, 2010

எல்லாம் நின் செயல்

காலை எழுந்தவுடன் புத்துணர்ச்சி
கிடைக்காவிடினும்

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

கனிவான வார்த்தைகளைப்
பேசாத தாயானாலும்

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

மனம் சுழலாய்ச்
சுற்றினாலும்

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

இடி போல் விடலைக் குழந்தை
மோதினாலும்

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

முடிவில்லாப் பிரச்சினைகள்
தோன்றினாலும்

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

முக்கியமானது மறந்து
போயிடினும்

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

உன் அருள் நிலையாகத் தங்குவதும்
நின் செயலாலே

பக்குவம்

பத்தில் முப்பதின் பக்குவத்தை
என் மனம் அடைந்திருந்தால்

என் வீட்டைக் கோவிலாகக் கும்பிட
விருந்தினருக்கு அளித்து இருப்பேன்

இருபதில் நாற்பதின் பக்குவத்தை
என் மனம் அடைந்திருந்தால்

காளையரை என் கைக்குள் அடைத்து
சேவைப் படை திரட்டி இருப்பேன்

நாற்பதில் அறுபதின் பக்குவத்தை
என் மனம் அடைந்தால்

நாலாப் பக்கமும் ஞானத்தின் சிறப்பை
பறை சாற்றுவேன்

கேள்வி

நாடு நமக்கு என்ன செய்தது
என்று கேட்காதே

நீ நாட்டுக்கு என்ன செய்தாய்
என்று கேள்

ஆண்டவன் எனக்கு என்ன செய்தான்
என்று கேட்காதே

நீ ஆண்டவனுக்கு என்ன செய்தாய்
என்று கேள்

குடும்பத்தினரை நோகடிக்காமல்
வைத்தாயா என்று கேள்

நலிந்தோரை வல்லவராக்க
முயன்றாயா என்று கேள்

வயது முதிர்ந்த தாய் தந்தையரை உன்
குழந்தை போல் கவனித்தாயா என்று கேள்

தாய் தந்தையரை அன்புடன் அரவணைக்கும்
குணத்தை வரமாகக் கேட்டாயா என்று கேள்

குழந்தையை வையாமல் வாழ்க்கை
நடத்துகிறாயா என்று கேள்

மனத்தில் மாசு அற்றவனாய்
இருக்கின்றாயா என்று கேள்

புறத் தூய்மை போல் அகத் தூய்மை
காத்திடுகிறாயா என்று கேள்

உள்ளத்தை கோயில் போல்
வைத்திருக்கின்றாயா என்று கேள்

நாடி வந்தவர் உன் வீட்டைக் கோவிலாகக்
காண வைக்கின்றாயா என்று கேள்

கற்றவை கற்ற பின் அதற்குத் தகுந்தவாறு
நிற்கின்றாயா என்று கேள்

சிறப்பான தத்துவங்களை பலருக்கு
சொல்கிறாயா என்று கேள்

இல்லாதவருக்கு தானம்
அளிக்கிறாயா என்று கேள்

பிறர் அறியாமல் செய்த தீங்கை
மன்னிக்கின்றாயா என்று கேள்

மற்றவரின் அன்பை உற்று
கவனிக்கிறாயா என்று கேள்

முற்றிலும் ஒரு பூவாக
இருக்கின்றாயா என்று கேள்

குறை ஒன்றும் இல்லை

வேண்டியது வேண்டியபடி கொடுத்தாரே

குழப்பத்தை ஆடையாக நான் அணிந்தபோது
உன்னை உன்னையாகவே பார்த்து மகிழ
நான் இருக்கும் போது குழப்பம் ஏனடியோ என்றாரே

வேண்டியது வேண்டியபடி கொடுத்தாரே

கோபமாக நான் பிதற்றிய பொழுது உன் கோபம்
மனத்தில் இருந்து அல்ல எல்லாம் முன்வினையால்
வந்த பலன் என்று சொல்லாமல் சொன்னாரே

வேண்டியது வேண்டியபடி கொடுத்தாரே

குழந்தை உதாசீனப் படுத்தியதை அளவுக்கு அதிகமாக
நான் பொறுத்து இருந்ததைப் பார்த்து என்னை ஒரு
அன்னையாகவே கவனித்தாரே

வேண்டியது வேண்டியபடி கொடுத்தாரே

உன்னிடம் எல்லாம் சரியாகவே அமைந்துள்ளது
வீர நடை போடு, வெற்றி நடை போடு
என்று உள்ளன்புடன் உரைத்தாரே

வேண்டியது வேண்டியபடி கொடுத்தாரே

வேண்டியதைத் தந்திடும்
ஆண்டவனாகவே அவர் இருக்க
எனக்கிங்கு குறை ஒன்றும் இல்லையே

Friday, March 26, 2010

குழந்தை மனம்

கள்ளம் கபடமற்ற குழந்தை உள்ளத்தை
உடையோனுக்கு இருக்கும் இடம் கர்ப்பக்கிரகம்

தாய் தந்தையரை சதா நினைக்கும் ஒருவனுக்கு
இருக்கும் இடம் இறைவன் சந்நிதி

மிருகமாகவும் தெய்வமாகவும் இருக்கக் கூடியது நம் மனம்
நம்முள் குழந்தை மனம் உறங்கிக் கொண்டிருக்கிறது

குழந்தை மனத்துடன் பழகி வந்தால்
தெய்வம் என்றும் துணை நிற்கும்

குழந்தை மனத்துடன் பழகி வந்தால்
இருக்கும் இடம் கர்ப்பக் கிரகமாகும்

குழந்தையாகவே என்றும் வாழ்ந்து வந்தால்
தவ சக்தியும் நம்மைத் தேடி வரும்

அழுத குழந்தை உடனே சிரிப்பது போல
கலக்கமடைந்து உடனே அமைதி பெறும்
நம் குழந்தை மனம்

குழந்தைக்கு உண்மையான கவலை கிடையாது
நம் குழந்தை மனத்திற்கும்
உண்மையான கவலை கிடையாது

Thursday, March 25, 2010

சக்தி

இருப்பது எதுவோ அது சக்தி
இல்லாததை மறப்பது சக்தி
இதை அறிந்தால் இல்லாததும்
பின்னால் இருப்பதாகும்

பிறருக்காக வாழ்வது சக்தி
சுயநலம் மறப்பது சக்தி
இதை அறிந்தால் தனக்கும்
எல்லா நன்மையும் உண்டாகும்

சுலபமாக செய்ய வருவது சக்தி
எதிர்ப்புகளை சாதகமாக்குவது சக்தி
இதை அறிந்தால்
வானுயரம் வளர்ந்திடலாம்

பம்பரமாய்ச் சுழலுவது சக்தி
ஓய்வெடுப்பதும் ஒருவித சக்தி
இதை அறிந்தால் என்றும்
இளமை காத்திடலாம்

தவறுகள் மன்னிப்பது சக்தி
தீயவை மறப்பது சக்தி
இதை அறிந்தால்
தீதும் நன்றாகி விடும்

உன்னை நீ அறிவாய்

விரும்புவது எது, வித்தகன் ஆனது எதில்
ஒன்றிப் போவது எதில், ஒருங்கிணைவது எதில்
மகிழ்வது எதில், மற்றோரை மகிழ்விப்பது எதில்

புத்துணர்ச்சி பெறுவது எதில், புது சிந்தனை வளர்ப்பது எதில்
சாந்தி கொள்வது எதில், மற்றோருக்கு சாந்தம் அளிப்பது எது
உள்மனது சொல்வது எது, உற்றாருக்கு சொல்ல வேண்டியது எது

இவை அறிந்து கொண்டும், தெரிந்து கொண்டும், புரிந்து
கொண்டும் கடந்து போகும் கணம் ஒன்றிலும் இவற்றையே
செய்து கொண்டிரு, உன்னை நீ அறிவாய்

நல்லவர்களின் நட்பு

நல்லவர்களின் நட்பு
கவலைக்கு மருந்து

நல்லவர்களின் துணை
ஆரோக்கியம் என்ற செடிக்கு உரம்

நல்லவர்களின் நட்பு
மன நோய்க்கு மருந்து

நல்லவர்களின் துணை
இறைவன் தரும் துயரங்களில் இருந்து பாதுகாப்பு

நல்லவர்களின் நட்பு
எல்லாம் வல்ல இறைவனின் வாகனம்

நல்லவர்களின் துணை
நலிந்தோரை வல்லவராக்கும் சஞ்சீவி மருந்து

நல்லவர்களின் நட்பு
தாய் தந்தையரின் ஆசிக்கு நிகர்

நல்லவர்களின் துணை இறைவன் அளித்த வரமாய்
உன்னிடம் தங்கியபோது கலக்கம் தங்காது போய்விடுமே

Sunday, March 7, 2010

அமிர்தம்

மேலங்கியை வேண்டுமென்றே விட்டுச் சென்றால்
அந்தக் குளிர் காலத்தில் என்றும் தொட்டபெட்டாவைக்
காண்பது அமிர்தம்

பதட்டமான வாழ்க்கை முறையைச் சற்று ஓரமாக
நிறுத்தி விட்டு சிறுமியாய்க் கேட்டப் பாடல்களையே
திரும்பத் திரும்பக் கேட்பது அமிர்தம்

தன்னந் தனியாக காட்டிற்குள் ஊர்வலம்
செல்லும்பொழுது திடீரென எதிரில் வரும்
அந்த ஒரே ஒரு கார் அமிர்தம்

இளவேனிற் காலத்து உஷ்ணம் என்று குளிர் காலத்தில்
ஏங்கிக் கிடக்கும் போது மழைக்கு மறு நாள்
வானத்தை ஆக்கிரமித்த மேகக் கூட்டமும் அமிர்தம்

இன்றையப் பொறுப்புக்களும் எதிர்காலத்திற்கான
கேள்விகளும் நம்மை அங்கங்கு வாட்டியிருந்தாலும்
அந்தப் பூங்காவின் குளத்தில் வாத்துக் கூட்டமதனைக்
கண்கொட்டாமல் பார்த்து மகிழ்வது அமிர்தம்

விடலைப் பருவத்தில் தன் குழந்தை அரை குறையாகச்
சாப்பிடுவதைக் கண்டு கிரகவிப்பது கடினமாயினும்
தெருக்கோடி வரை புகைப்படக் கருவியின் துணையோடு
வண்ண மலர்களைப் படம் பிடித்து தன் ப்ளாக்-இல்
வெளியிடுவது அமிர்தம்

தான் குழந்தையைக் கிள்ளிய காலம் போய் தன் குழந்தை
தன்னை கிள்ளும் காலம் நடந்து கொண்டிருக்கும் போது
கொஞ்சமும் கலங்காமல் வாழ்க்கை நடத்துவது அமிர்தம்

பத்தாண்டு வருடங்களாக மீசையை எடுத்து விட்டக்
கணவனைக் கெஞ்சி மீண்டும் மீசை வைக்க வைத்து
அதை வருடிப் பார்க்கும் பழக்கம் அமிர்தம்

புதுக் கவிதை எழுதி, நலிந்தோர்க்குத் துணையாய்
நின்று, ஞானத்தின் பால் கவனத்தைத் திருப்பி
கவலைகளுக்கும் கடுஞ் சொற்களுக்கும் விடை
கொடுத்து அனுப்பிய வெற்றியும் அமிர்தம்